அரை இறுதிக்குள் நுழைவது யார்? இந்தியா – ஆஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை

42-3-660x330_Fotor

 

 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரைஇறுதி வாய்ப்புக்காக இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் தங்களது கடைசி லீக் யுத்தத்தில் இன்று இறங்குகின்றன.

6-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், குரூப்2 பிரிவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு மொகாலியில் நடக்கும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி, பிரதான எதிரியான ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது. இவ்விரு அணிகளும் தலா 2 வெற்றி, ஒரு தோல்வி என்று 4 புள்ளிகளுடன் சமநிலை வகிப்பதால் இதில் வாகை சூடும் அணி இந்த பிரிவில் இருந்து 2-வது அணியாக அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைக்கும். தோற்கும் அணி உலக கோப்பையை விட்டு வெளியேறும். அதனால் இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் அதீத எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இதுவரை நடந்துள்ள மூன்று ஆட்டங்களிலும் இநதியாவின் பேட்டிங் மெச்சும் அளவுக்கு இல்லை. துணை கேப்டன் விராட் கோலி தவிர வேறு யாரும் அரைசதம் கூட அடிக்கவில்லை. தொடக்க ஆட்டக்காரர்கள் ஷிகர் தவானும், ரோகித் சர்மாவும் நிலைத்து நின்று அதிரடியான தொடக்கம் தர வேண்டியது அவசியமாகும். யுவராஜ்சிங், கேப்டன் டோனி, சுரேஷ் ரெய்னா ஆகியோரும் ரன் குவிக்க வேண்டிய நெருக்கடியில் இருக்கிறார்கள்.

ஆஸ்திரேலியா பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் வல்லமை கொண்ட ஒரு அணி. 20 ஓவர் உலக கோப்பையை முதல் முறையாக வசப்படுத்தி விட வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டு வரிந்து கட்டி நிற்கிறார்கள். இந்தியாவை போன்றே தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்திடம் 8 ரன் வித்தியாசத்தில் தோற்ற போதிலும், அதன் பிறகு எழுச்சி கண்டு, வங்காளதேசம், பாகிஸ்தானை தோற்கடித்தது.

போட்டி நடக்கும், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மொகாலி ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமானது. இங்கு இதுவரை நடந்துள்ள 3 இருபது ஓவர் ஆட்டங்களிலும் குறைந்தது 155 ரன்களுக்கு மேல் எடுக்கப்பட்டுள்ளது. 2009-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக இந்தியா 211 ரன்களை ‘சேசிங்’ செய்தது அதிகபட்சமாகும். ஆனால் இரவில் பனிப்பொழியின் தாக்கம் இருக்க வாய்ப்புள்ளது.