தலவாக்கலையில் இளைஞனின் சடலம் மீட்பு!

க.கிஷாந்தன்

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒலிரூட் 18ம் பிரிவு தோட்டத்தில் வீடு ஒன்றிலிருந்து 24 வயது மதிக்கதக்க இளைஞர் ஒருவரின் சடலத்தை தலவாக்கலை பொலிஸார் 24.03.2016 அன்று பிற்பகல் மீட்டுள்ளனர்.

தனது வீட்டின் அறை ஒன்றில் 23.03.2016 அன்று 9 மணியளவில் உணவு உண்ட பின் நித்திரைக்கு சென்ற இந்த இளைஞர் காலை வெளியில் வரவில்லை. இதன்போது சந்தேகம் கொண்ட இளைஞனின் பாட்டி கதவை தட்டியுள்ளார்.

IMG_0132_Fotor

அவர் திறக்காத பட்சத்தில் அருகில் உள்ள ஒரு நபரை அழைத்து அறையை பார்க்கும்படி பாட்டி கூறியுள்ளார்.

குறித்த நபர் அறையின் ஜன்னல் பகுதியை கத்தி ஒன்றால் உடைத்து பார்த்தபொழுது இளைஞனின் கழுத்தில் கயிறு ஒன்றில் சுருக்கிட்ட நிலையில் இருந்ததாகவும் பின் கதவை திறந்து தனது பாட்டியை உள்ளே அழைத்து சம்பவத்தை காட்டியதாகவும் மேற்படி நபர் பொலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சம்பவத்தை நேரில் கண்ட நபர் பிரிதொரு நபரை அழைத்து இளைஞனின் கழுத்தில் சுருக்கிட்டு இருந்த கயிறை கத்தியால் அறுக்கும் பொழுது இளைஞன் உயிரிழந்திருந்ததாக பொலிஸ் விசாரணைக்கு குறித்த நபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்த இளைஞன் 24 வயது மதிக்கதக்க நாகராஜ் சியாம் சுந்தரம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தோட்ட வைத்திய அதிகாரிக்கு தெரிவித்துள்ளனர். ஸ்தலத்திற்கு விரைந்த அதிகாரி இளைஞன் உயிரிழந்திருப்பதை அறிந்து ஒலிரூட் தோட்டத்தின் தோட்ட அதிகாரிக்கு தெரிவித்து அவர் ஊடாக தலவாக்கலை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

IMG_0156_Fotor

சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்த தலவாக்கலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட பின் லிந்துலை பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி டபிள்யூ. எம்.என் எதிரிசிங்கவுக்கு அறிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மரண விசாரணையை மேற்கொள்ள வருகை தந்த மரண விசாரணை அதிகாரி சடலத்தை பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கவனத்திற்கு கொண்டு செல்ல தலவாக்கலை பொலிஸாருக்கு பணித்தார்.

உயிரிழந்த இளைஞனின் தாய் வெளிநாட்டில் தொழில் நிமித்தம் சென்றுள்ளதாகவும் அவர் பாட்டியின் அரவணைப்பில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடதக்கது.

பிரேத பரிசோதனைக்காக சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்நனர்.