எனது சொல்படி பாண்டியா கடைசி பந்தை திட்டுமிட்டு வீசினார்: டோனி பாராட்டு

65e38b96-d71d-413b-9719-73bdbc3a151d_S_secvpf20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அதிர்ஷ்டவசமாக வங்காளதேசத்திடம் தோல்வியில் இருந்து தப்பி 1 ரன்னில் வெற்றி பெற்றது.

முதலில் விளையாடிய இந்திய அணியால் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் 7 விக்கெட் இழப்புக்கு 146 ரன்னே எடுக்க முடிந்தது. ரெய்னா அதிகபட்சமாக 30 ரன்னும், வீராட் கோலி 24 ரன்னும் எடுத்தனர். முஸ்டாபிசுர் ரகீம், அல்–அமில்–உசேன் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.

பின்னர் விளையாடிய வங்காளதேசம் 9 விக்கெட் இழப்புக்கு 145 ரன் எடுத்தது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்தியா 1 ரன்னில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் இந்திய அணி அரை இறுதி வாய்ப்பில் தொடர்ந்து நீடிக்கிறது.

தமிம் இக்பால் 35 ரன்னும், சபிர் ரகுமான் 26 ரன்னும் எடுத்தனர். அஸ்வின், ஜடேஜா, ஹர்த்திக் பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.

ஆட்டத்தின் கடைசி 2 ஒவரில் வங்காளதேச வெற்றிக்கு 17 ரன் தேவைப்பட்டது. 19–வது ஓவரை பும்ரா நேர்த்தியாக வீசி 6 ரன்களை கொடுத்தார். கடைசி 6 பந்தில் 11 ரன் தேவை. ஹர்த்திக் பாண்டியா வீசிய முதல் பந்தில் மகமதுல்லா 1 ரன் எடுத்தார். 2–வது மற்றும் 3–வது பந்தில் முஸ்பிக்குரு ரகீம் அடுத்தடுத்து 2 பவுண்டரி அடித்ததால் இந்திய வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனால் 3 பந்தில் அந்த அணியின் வெற்றிக்கு 2 ரன் தேவைப்பட்டது. வங்காளதேசம் எளிதில் வெற்றி பெறும் சூழ்நிலை ஏற்பட்டது.

ஆனால் ஹர்த்திக் பாண்டியா 4–வது பந்தில் முஸ்பிக்குர் ரகீம் விக்கெட்டையும், 5–வது பந்தில் மகமதுல்லா விக்கெட்டையும் கைப்பற்றியதால் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டது. கடைசி பந்தில் வெற்றிக்கு 2 ரன் தேவை.

முஷாபிகுர் ரகுமான் பந்தை அடிக்க முடியாதவாறு பந்தை வெளியே வீசினார். ரன் எடுக்க ஓடியபோது டோனி அருமையாக ரன் அவுட் செய்தார். இதனால் வங்காளதேசம் 1 ரன்னில் தோற்றது.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் பெற்ற வெற்றி குறித்து டோனி கூறியதாவது:–

ஆட்டத்தின் கடைசி பந்தை எப்படி வீச வேண்டும் என்று விவாதிக்கப்பட்டது. யார்க்கர் பந்துவீச வேண்டாம் என்று பாண்டியாவிடம் நான் கேட்டுக்கொண்டேன். நேர்த்தியாக பந்தை ஸ்டம்புக்கு வெளியே வீச வேண்டும் என்று சொன்னேன்.

அதே நேரத்தில் ‘வைடு’ ஆகிவிடாமல் இருக்குமாறும் கேட்டுக்கொண்டேன். எங்களது திட்டத்தை ஹர்த்திக் பாண்டியா சிறப்பாக செயல்படுத்தி கடைசி பந்தை வீசினார்.

பும்ரா பந்துவீச்சும் சிறப்பாக இருந்தது. அவரது 2–வது ஓவரில் ரன்களை வாரி கொடுத்து இருந்ததால் நெருக்கடி ஏற்பட்டது. இதேபோல கேட்சையும் தவறவிட்டார். மிஸ் பீல்டிங்கும் இருந்தது. ஆனால் ஓட்டு மொத்தமாக அவரது பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. எங்களது பந்துவீச்சும் அபாரமாக இருந்தது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

2 வெற்றி, 1 தோல்வியின் 4 புள்ளியுடன் இருக்கும் இந்திய அணி கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 27–ந்தேதி எதிர்கொள்கிறது.