வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வை தோற்கடிப்பதே தங்கள் கூட்டணியின் குறிக்கோள் என மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ கூறியுள்ளார். சென்னை அண்ணா நகரில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது வைகோ இவ்வாறு தெரிவித்தார்.
மக்கள் நல கூட்டணி – தே.மு.தி.க. கூட்டணி குறித்து தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறிய கருத்து பற்றி வைகோவிடம் கேட்டபோது, பூஜ்யம் என்று கூறியவர்கள் விஜயகாந்த் அலுவலகத்தில் தவம் கிடந்தது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் தங்கள் கூட்டணியில் சேரும்படி தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசனுக்கு மீணடும் அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
இதற்கிடையே கோவையில் மக்கள் நலக் கூட்டணி தலைவர்களில் ஒருவரான நல்லகண்ணு பேட்டி அளித்தார். அப்போது, தமிழகத்தில் லஞ்சம், ஊழல், தற்கொலைகள் அதிகரித்துள்ளதாக கூறிய அவர், அ.தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்றார்.
‘மது ஒழிப்பு மற்றும் மதுவிலக்கில் மக்கள் நலக் கூட்டணி உறுதியாக உள்ளது. மக்கள் நலக் கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்ததன் மூலம் கூட்டணி வலுவடைந்துள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.க.வுக்கும் மக்கள் நலக் கூட்டணிக்குமே போட்டி உள்ளது’ என்றும் நல்லகண்ணு தெரிவித்தார்.