தமிழக தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி விட்டது. இந்த தேர்தலில் முழுக்க முழுக்க விஜயகாந்தை சுற்றியே காய்கள் நகர்த்தப்பட்டு வருகின்றன.
கடந்த 11–ந்தேதி விஜயகாந்த் தனித்து போட்டியிடுவதாக அறிவிப்பதற்கு முன்னால் விஜயகாந்தை சுற்றி பரபரப்பட்ட செய்திகளே இதற்கு உதாரணம்.
கடந்த 2005–ம் ஆண்டு விஜயகாந்த் தே.மு.தி.க.வை தொடங்கினார்.
அதற்கு முன்னர் வரை தமிழகத்தில் அ.தி.மு.க. – தி.மு.க. ஆகிய 2 கட்சிகளும் காங்கிரசுடன் கூட்டணி அமைப்பதையே வழக்கமாக வைத்திருந்தன. திராவிட கட்சிகளின் முதுகில் சவாரி செய்தே காங்கிரசும் காலம் தள்ளி வந்தது.
இதனை அதிரடியாக மாற்றிக் காட்டி காங்கிரசின் மவுசை விஜயகாந்த் தவிடு பொடியாக்கி விட்டார் அதன் பின்னர் நிலைமை தலைகீழாக மாறி விட்டது.
கடந்த 2006–ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட தே.மு.தி.க. அந்த தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் பல தொகுதிகளில் வாக்குகளை அள்ளியது.
234 தொகுதிகளிலும் விஜயகாந்த் வேட்பாளர்களை நிறுத்தினார். இதில் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்ட அவர் மட்டுமே வெற்றி பெற்றார்.
ஆனால், தே.மு.தி.க. வேட்பாளர்கள் பிரித்த ஓட்டுகள் சுமார் 100 தொகுதிகளில், அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய 2 கட்சிகளுக்கும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் அ.தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு பறிபோனது. தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க.வுக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. கூட்டணி கட்சிகள் தயவுடனேயே தி.மு.க. ஆட்சி அமைத்தது.
கட்சி ஆரம்பிக்கப்பட்டு ஓராண்டுக்குள் நடந்த அந்த முதல் தேர்தலிலேயே தே.மு.தி.க. 8 சதவீத வாக்குகளை பெற்றது. அக்கட்சி மீது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இதுவே கடந்த தேர்தலில் தே.மு.தி.க.வை அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெறச் செய்தது. அக்கூட்டணியில் 41 இடங்களில் போட்டியிட்ட தே.மு.தி.க. 29 இடங்களில் வெற்றி பெற்றது. விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராகவும் ஆனார்.
இந்நிலையில் வருகிற சட்டமன்ற தேர்தலிலும் விஜயகாந்த் யாருடன் கூட்டணி அமைப்பார் என்கிற எதிர்பார்ப்பு தேர்தல் களத்தில் கடும் சூட்டையே கிளப்பியது.
அ.தி.மு.க.வை வீழ்த்தும் எண்ணத்திலேயே விஜயகாந்த் இருப்பதாகவும் எனவே தி.மு.க.வுடன்தான் அவர் கைகோர்ப்பார் என்றும் கூறப்பட்டது.
இது தொடர்பாக பல்வேறு யூகங்களின் அடிப்படையில் பல தரப்பட்ட செய்திகளும் பரப்பப்பட்டன. பா.ஜனதா கட்சியும் விஜயகாந்துடன் கூட்டணிக்கு முயற்சி மேற்கொண்டது.
ஆனால் இந்த 2 கட்சிகளுக்கும் விஜயகாந்த் டாடா காட்டி விட்டு மக்கள் நலக்கூட்டணியுடன் போய் கைகோர்த்துக் கொண்டார். இந்த புதிய கூட்டணி அரசியல் அரங்கில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
அ.தி.மு.க. – தி.மு.க. ஆகிய 2 கட்சிகளுக்கும் மாற்றாக தமிழக தேர்தல் களத்தில் இதுபோன்று பல கட்சிகள் இணைந்து மாற்று அணியை உருவாக்கியதில்லை என்றே அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
தற்போது தே.மு.தி.க. மக்கள் நலக்கூட்டணி ஆகிய இரண்டும் இணைந்து இருப்பதன் மூலம் இந்த புதிய அணி 10 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
10 சதவீத வாக்குகளை பெற்று இருந்த தே.மு.தி.க. கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் இணைந்து 5.2 சதவீத வாக்குகளை பெற்றது. மக்கள் நலக்கூட்டணியில் இருக்கும் 4 கட்சிகள் மூலம் 5 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் உள்ளன.
இந்த புதிய அணிக்கு 10 முதல் 11 சதவீத வாக்குகள் கிடைக்கும். மேலும் முடிவு செய்யாமல் இருக்கும் வாக்காளர்களும் இந்த கூட்டணிக்கு வாக்களிக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.
இந்த புதிய கூட்டணி பிரிக்கும் வாக்குகள் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கும் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.