வங்காளதேசத்தை எளிதாக எடுத்துக் கொள்ளமாட்டோம்: நெஹரா

440587-nehra-pti-india_Fotor

இந்திய வேகப்பந்து வீச்சாளர் 36 வயதான ஆஷிஷ் நெஹரா நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘‘எனது பணியை உற்சாகமாக செய்து வருகிறேன். 16-17 ஆண்டுகளாக விளையாடும் நான் எனது அனுபவங்களை சக பவுலர்களான பும்ரா, முகமது ஷமி, புவனேஷ்வர்குமார் உள்ளிட்டோரிடம் பகிர்ந்து கொள்வது முக்கியம். 

அந்த வகையில் அவர்களுக்கு நான் உதவுகிறேன். கடந்த 2-3 மாதங்களாக நாங்கள் விளையாடி வரும் விதம் மகிழ்ச்சியும், திருப்தியும் அளிக்கிறது. அதை முன்னெடுத்து செல்ல முடியும் என்று நம்புகிறேன். வங்காளதேச அணி கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக விளையாடி வருகிறது. வியப்புக்குரிய வகையில் முன்னேற்றம் கண்டு இருக்கிறார்கள். அவர்களை நாங்கள் எளிதாக எடுத்துக் கொள்ளமாட்டோம். வங்காளதேசத்தை வீழ்த்த வேண்டும் என்றால் முழு திறமையை வெளிப்படுத்தியாக வேண்டும்.

இந்த வடிவிலான கிரிக்கெட்டில் ஒவ்வொரு ஆட்டமும் ‘நாக்-அவுட்’ போன்றது என்பதை அறிவோம். 4 ஆட்டங்களில் 3-ல் வெற்றி பெற்றாலும் கூட அடுத்த சுற்றுக்கு தகுதி பெற முடியாத நிலைமைக்கும் வாய்ப்பு உண்டு. இங்கு மெத்தனம் என்ற பேச்சுக்கே இடமில்லை’ என்றார்.

மேலும் நெஹராவிடம் இந்தியா – வங்காளதேசம் இடையிலான மோதல் குறித்து சமூக வலைதளங்களில் சூடான கருத்துகள் உலா வருவது குறித்து கேட்ட போது, ‘இந்த கேள்வியை நீங்கள் தவறான நபரிடம் கேட்கிறீர்கள். நான் இன்னும் பழைய மாடல் நோக்கியா செல்போனையே பயன்படுத்துகிறேன். அதில் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற வசதிகள் எதுவும் கிடையாது’ என்று பதில் அளித்தார்.