அமெரிக்க கடற்படையின் கப்பலான ‘USS Blue Ridge’ இவ்வார இறுதியில் கொழும்புத் துறைமுகத்தில் தரிசனம் !

uss-blue-ridge
அமெரிக்க கடற்படையின் 7வது கப்பல் படையணியின் கட்டளைக் கப்பலான யுஎஸ்எஸ் ப்ளு ரிட்ஜ் (USS Blue Ridge) இவ்வார இறுதியில் கொழும்புத் துறைமுகத்தை தரிசிக்கவுள்ளது.

இந்தக் கப்பலில் வருகை தருகின்ற அமெரிக்க கடற்படையின் 7வது கப்பல் படையணியின் வாத்திய அணியினர் எதிர்வரும் 26ம், 27ம் நாட்களில் கொழும்பில் பல்வேறு இடங்களிலும் இலவசமாக இசை நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளனர். 

எதிர்வரும் 26ம் திகதி மாலை 5 மணி முதல் 7 மணிவரை கொழும்பு விகாரமகாதேவி பூங்காவிலும், எதிர்வரும் 27ம் திகதி 12 மணி முதல் ஒரு மணிவரை கொழும்பு மஜஸ்டிக் சிற்றியிலும், அதேநாளில் மாலை 6 மணி முதல் 7 மணிவரை கொழும்பு டச்சு ஆஸ்பத்திரி (உலக வர்த்தக மையத்திற்கு எதிரே) முன்றலிலும் இலவசமாக பொதுமக்களுக்கான நிகழ்ச்சிகளை இந்த வாத்திய அணியினர் நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

கடந்த வருடம் ஜனவரி 8ம் திகதிய ஆட்சி மாற்றத்தின் பின்னர் இலங்கை அரசுடனான உறவுகள் நெருக்கமடைந்த பின்னர், அமெரிக்க கடற்படையின் வாத்திய அணி கொழும்பில் நிகழ்ச்சிகளை நடத்துகின்றமை இரு நாடுகளுக்குமிடையே கலாசார ரீதியான பிணைப்பை வலுவாக்கும் திட்டத்தின் கீழ் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

இதற்கு முன்னர் அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த யுஎஸ்எஸ் போர்ட் என்ற கப்பல் 2011ம் ஆண்டு ஒக்டோபர் 11ம் திகதி காலித் துறைமுகத்திற்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.