சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க.. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் 65 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர். ஆனால் 15 பேர் மட்டுமே பேச அனுமதிக்கப்பட்டனர்.
தங்களது மாவட்டங்களில் உள்ள தொகுதிகளின் நிலவரம் பற்றி அவர்கள் எடுத்துக் கூறினர். வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்பது பற்றியும் விளக்கினர்.
இக்கூட்டத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:–
சட்டமன்ற தேர்தலை நாம் எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. 5 முனை போட்டிக்கு வாய்ப்பு உள்ளதால் தேர்தல் பணியில் கட்சியினர் அனைவரும் தீவிர கவனம் செலுத்த வேண்டும். கூட்டணியை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். அதனை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.
ஒவ்வொரு மாவட்ட செயலாளரும் 2 தொகுதிகளில் வெற்றியை தேடித்தருவதற்கு உழைக்க வேண்டும். அதற்காக தீவிரமாக பாடுபட வேண்டும். 65 மாவட்ட செயலாளர்களும் தலா 2 தொகுதிகளில் வெற்றியை பெற்றுக் கொடுத்தால் 130 தொகுதிகளில் நம்மால் வெற்றி பெறமுடியும். இதன் மூலம் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைத்து விடலாம்.
இந்த தேர்தலில் நம்மால் வெற்றி பெற முடியாவிட்டால் தேர்தலில் போட்டியிடுவதற்கே அர்த்தம் இல்லாமல் போய்விடும். எனவே மாவட்ட செயலாளர்கள் அனைவரும் குறைந்தது 2 தொகுதிகளிலாவது வெற்றியை குறிவைத்து செயல்படவேண்டும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.