டி20 உலகக்கிண்ணம் வரை மட்டுமே அப்ரிடி பாகிஸ்தான் அணியின் தலைவராக இருப்பார் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஷகாரியார் கான் கூறியுள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக்கிண்ணத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் வழக்கம் போல் தோல்வியைத் தழுவியது.
இதனையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியில் இருந்து சாகித் அப்ரிடி நீக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியது. தற்போது அந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷகாரியார் கான் கூறுகையில், டி20 உலகக்கிண்ணத்தோடு தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்பதை அப்ரிடி புரிந்துக்கொண்டுள்ளார்.
அவர் பதவி விலகாத பட்சத்தில் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படுவார். பாகிஸ்தான் கிண்ணத்தை வென்றாலும் கூட அதில் மாற்றம் இருக்காது.
மேலும், அவர் ஒரு வீரராக மட்டும் அணியில் நீடிக்க விரும்பினால், அவரை தேர்வு செய்வதா வேண்டாமா என்பது பற்றி பிறகு முடிவு செய்யப்படும்.
அதேபோல் பயிற்சியாளரை பொருத்தவரை ஒரு வெளிநாட்டவரை புதிய பயிற்சியாளராக நியமிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
அப்ரிடிக்கு தற்போது 36 வயதாகிறது. மேலும், ஷகாரியார் கானின் இந்த தகவலால் இந்த உலகக்கிண்ணம் தான் அப்ரிடியின் கடைசி சர்வதேச தொடராக இருக்கும் என்பது உறுதியாகியுள்ளது.