திருவாளர் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு !

அஸ்ஸூஹூர் சேகு இஸ்ஸடீன்

 

rauff hakeem slmc azzhoor

 

  மாநாடு நடத்தி வெற்றி என்கிறீர்களே, சரி. உங்கள் மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் என்ன? தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படாத ஒரு மாநாடு என்பதை தவிர செய்த வேறு சாதனை என்ன? மாநாடு எதற்காக என்று போட்டவருக்கும் தெரியாது. போனவர்களுக்கும் தெரியாது. ஆனால் மாநாடு வெற்றி? சாய்ந்தமருது பிரதேச சபை பிரச்சினை, ஒலுவிலில் காணி இழ‌ந்தவர்களின் பிரச்சினை, அட்டாளைச்சேனை தே. ப பிரச்சினை, வட்டமடு பிரச்சினை இன்னும் பல பிரச்சினைகள் , இவை எவை பற்றியும் மாநாட்டில் ஆராயப் படவுமில்லை எந்தவித தீர்மானங்களும் எடுக்கப் படவுமில்லை.

 

 வெறுமனே இரண்டு பேரை இடை நிறுத்தியதையும், இன்னும் சிலரை இடை நிறுத்துவேன் என்று சண்டித்தனம் பேசுவதற்கும் ஒரு மாநாடு. இவ்வளவு பேரையும் இடை நிறுத்துவதை விடவும் பேசாமல் நீங்களே உங்களை இடை நிறுத்திக் கொண்டால் அனைவருக்கும் நன்மையாக இருக்கும். தலைமத்துவ ருசி கண்டு, பதவிப் பேராசையில் உளன்று , நீஙள் உளறித்திரிவதை சாமானியனும் பார்த்து கெக்களம் கொட்டிச் சிரிக்கிறான். போராளிகளோ சாணக்கியம் என்று புலம்பித் திரியுதுகள்.

 

 அரசியலமைப்பை மாற்றி தனது இருப்பை தக்க வைத்துக் கொள்ள முயன்ற மஹிந்தவுக்கும், யாப்பை மாற்றி உங்களுக்கு ஜால்ரா அடிக்கும் செயலாளரை நியமித்து அவருக்கு 125,000 சம்பளமும் கொடுத்து உங்கள் பதவியை நிரந்தரமாக தக்க வைக்க முயன்ற உங்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கின்றது? கடைசியில் மஹிந்தருக்கு என்னவாயிற்று என்பதை எல்லோரும் பார்த்தோம். உங்கள் பதவியை பாதுகாக்க எத்தனை திருகுதாளங்கள்? புதிய செயலாளரை ஹை கொமாண்டுக்கு என்று நியமித்து விட்டு, தேர்தல் கொமிஷனருக்கு கட்சியின் செயலாளர் புதியவர்தான் என்று கடிதம் அனுப்பினீர்களே. அவர்கள் பழைய செயலாளருக்கு அனுப்பிய கடிததை மறைத்து வைத்தது.

 

 பின் அவர்கள் பழைய செயலாளரை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு வினவியதும் உங்கள் குட்டு அம்பலமாகியதே. வெட்கமுமில்லை, ரோசமுமில்லை. சரி நான் கேட்கிறேன், அப்படி உங்கள் தலைமைத்துவத்திற்கு வந்த பேராபத்துதான் என்ன? எதற்கு இவ்வளவு நயவஞ்சகத் தனம்? மக்களின் அபிலாஷைகள் என்னவென்றே தெரியாத நீங்கள் அம்மக்களின் வாக்குகளின் மூலம் அமைச்சராகிறீர்கள். அந்த அமானிதத்தை நீங்கள் முறையாகத்தான் கையாள்கிறீர்களா? அம்பாரை மாவட்ட பெரும்பான்மை முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்று கிடைக்கும் அமைச்சர் அந்தஸ்தை அம்மாவட்டத்துக்கு கொடுப்பதுதானே முறை.

 

 உங்கள் பதவி ஆசைக்கு அளவில்லையா? ஹசனலி அவர்கள் உங்களுக்குச் செய்த மறக்க முடியாத அந்த மாபெரும் துரோகம்தான் என்ன? தேர்தலில் போட்டியிட முயன்றவரை தடுத்து, நீங்கள் போட்டியிட வேண்டாம் உங்களை தேசிய பட்டியலில் அனுப்புகிறேன் என்று கூறி அவரை போட்டியிடாமல் தடுத்து விட்டு, தேசிய பட்டியலும் கொடுக்காமல் நயவஞ்சகம் செய்தது ஏன்? நீங்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு சதி செய்தீர்கள் என்று உறுதியாகச் சொல்லமுடியும். உங்கள் தலைமைத்துவத்திற்கு அரணாக காத்து நின்ற ஹசனலிக்கு இவ்வாறான ஒரு தண்டனையை நீங்கள் கொடுக்க காரணம் என்ன? இவ்வளவு நாளும் உங்களுக்கு விசுவாசமாக இருந்தவரை போராளிகள் துரோகியென்று கூறுமளவிற்கு கொண்டு வந்தது, உங்கள் பதவி ஆசையினால்தானே?

 

  இவ்வளவு நாளும் உயிராய் இருந்த, மறைந்த தலைவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமான, போராளிகளுக்கு ஒரு தந்தை போல் செயல்பட்ட ஹசனலிக்கு நடந்த அநியாயத்தை என்னவென்றே அறிய முயலாத போராளிகள், எப்படி நமது சமூகத்துக்காக போராடுவார்கள் என்பது தெளிவாகிறதல்லவா? எவ்வாறான இளைஞர்களை உருவாக்கி வைத்திருக்கிறீர்கள்? ஒரு அப்பாவிக்கு உங்கள் பேராசையினால் துரோகிப் பட்டம் வழங்கியதை இறைவனிடம் எப்படி நியாயப்படுத்துவீர்கள்? உங்கள் செயல்ப்பாடுகளைப் பார்க்கும் போது உங்களுக்கு இறையச்சம் இருப்பது போல் தெரியவில்லை. நீங்கள் ஒரு நாஸ்திகரா என்பதையும் தெளிவு படுத்துங்கள். உங்களை விட பெரும் பேரரசர்களும் மாவீரர்களும் ஆண்ட சரித்திரங்களைப் பார்த்திருக்கின்ரோம். அவர்கள் எல்லாம் மக்கி மண்ணோடு மண்ணாகிப் போனார்கள். நீங்கள் இன்னும் இரு நூறு வருடங்கள் வாழப்போகிறீர்களா? எதற்கு இத்தனை திருகுதாளம்?