கோலியின் அசத்தல் ஆட்டத்தால் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா!

ICC World Twenty20 India 2016:  India v Pakistan
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தோனி தலைமையிலான இந்திய அணியும், அப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் அணியும் விளையாடி வருகிறது. 

மழை காரணமாக ஆட்டம் ஒரு மணி நேரம் தாமதமாக 8.30 மணிக்கு தொடங்கியது. மேலும் அணிக்கு தலா 2 ஓவர்கள் குறைக்கப்பட்டு 18 ஓவர் போட்டியாக மாற்றப்பட்டுள்ளது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் தோனி முதலில் பந்து வீச முடிவு செய்தார். 

பேட்டிங்க்கு சாதகமாக இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில், ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது அனைவரையும் ஆச்சிரியப்படுத்தியது. தொடக்க ஆட்டகாரர்களாக களமிறங்கிய அகமது ஷெசாத் மற்றும் ஷார்ஜில் கான் ஆகிய இருவரும் ரன் குவிக்க சிரமப்பட்டனர். குறிப்பாக அஸ்வின் பந்து எங்கு செல்கிறது என்றே பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு தெரியவில்லை. 

பாகிஸ்தான் அணி 5 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 25 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 17 ரன்கள் எடுத்திருந்த ஷார்ஜில் கான் ரெய்னா பந்து வீச்சில் அவுட் ஆனார். அகமது ஷெசாத் 25 ரன்கள் எடுத்து பும்ரா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு களமிறங்கிய அப்ரிடி, அதிரடியாக ஆட முயன்று 14 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுத்து பாண்டியா பந்தில் ஆட்டமிழந்தார். 

பிறகு களமிறங்கிய மாலிக்கும், அக்மலும் அதிரடியாக ஆட, பாகிஸ்தானின் ரன் வேகமாக உயர்ந்த்து. சிறப்பாக ஆடிய அக்மல் 16 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய மாலிக்கை 26 ரன்களில் வெளியேற்றினார் நெக்ரா. 

18 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்களை இழந்து 118 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் நெக்ரா, பும்ரா, பாண்டியா, ரெய்னா மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்கள். 

இதையடுத்து பாகிஸ்தான் பந்து வீச்சை சமாளித்து 119 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்குடன் களமிறங்கியது இந்தியா. 

மிகவும் எதிர்ப்பாக்கப்பட்ட ரோகித் சர்மா 10 ரன்களில் அமிர் பந்தில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சொதப்பி வரும் தவான் இந்த போட்டியிலும் ஏமாற்றம் அளித்தார். 6 ரன்கள் எடுத்திருந்த தவான் சமி பந்து வீச்சில் போல்ட் ஆனார். அடுத்த பந்திலேயே ரெய்னா நடையைகட்ட இந்திய அணி நெருக்கடியில் சிக்கியது. 

கோலியும், யுவராஜ்சும் இந்திய அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் ஈடுப்பட்டனர். இருவரும் ஒன்று இரண்டு ரன்களாக அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள். இருவரும் இணைந்து 61 ரன்கள் எடுத்தனர். அணியின் ஸ்கோர் 84 ஆக இருந்த போது யுவராஜ் 24 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். 

ஒருபக்கம் விக்கெட்கள் விழுந்தாலும் வீராட் கோலி ஒருமுனையில் தூண் போல் நின்று போராடினார். தோனியும் சூழ்நிலையை உணர்ந்து ஒன்று இரண்டு ரன்களாக எடுக்க இந்திய அணி சீராக வெற்றி இலக்கை நோக்கி முன்னேறியது. அற்புதமா விளையாடிய வீராட் கோலி 35 பந்துகளில் அரை சதம் அடித்தார். 

இறுதியில் தோனி ஒரு சிக்ஸ், அதனை தொடர்ந்து ஒரு ரன்னும் எடுத்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். தூண் போல் நின்ற கோலி 37 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து இந்திய அணி வெற்றி பெற முக்கிய காரணமாக விளங்கினார். பாகிஸ்தான் தரப்பில் சமி அதிகப்பட்சமாக 2 விக்கெட்களை விழ்த்தினார். ஆட்டநாயகனாக வீராட் கோலி தேர்வு செய்யப்பட்டார்.