20 ஒவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ‘சூப்பர் 10’ சுற்றின் 4–வது ஆட்டம் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.
இதில் ‘குரூப் 1’ பிரிவில் உள்ள இலங்கை– ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
ஆப்கானிஸ்தான் கடைசியாக விளையாடிய 10 இருபது ஓவர் ஆட்டத்தில் ஒன்றில் மட்டும் தான் தோல்வியை தழுவி இருந்தது. 9 போட்டியில் வெற்றி பெற்றது. இலங்கை அணி 10 ஆட்டத்தில் 2–ல் மட்டுமே வெற்றி பெற்று இருந்தது.
மேத்யூஸ் தலைமையிலான இலங்கை அணி கடந்த போட்டிகளில் ஏற்பட்ட தோல்வியை மறந்து உலககோப்பையில் சிறப்பாக விளையாடும் ஆர்வத்தில் உள்ளது. வெற்றியுடன் கணக்கை தொடங்க அந்த அணி விரும்புகிறது. தில்சான் 20 ஓவர் போட்டியில் 1751 ரன் எடுத்து அனுபவம் வாய்ந்த வீரராக இருக்கிறார்.
இது தவிர சன்டிமால், திரிமன்னே, திசாரா பெரைரா போன்ற சிறந்த வீரர்களும் உள்ளனர். காயத்தில் இருந்து குணமடைந்து வரும் மலிங்கா இன்றைய ஆட்டத்தில் விளையாடுவாரா? என்பதில் உறுதியில்லை.
ஆப்கானிஸ்தான் அணி தகுதி சுற்றில் சிறப்பாக விளையாடியது. ஜிம்பாப்வேயை வீழ்த்தி ‘சூப்பர் 10’ சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. முகமது ஷசாத் 1287 ரன் எடுத்து அந்நாட்டு வீரர்களில் முதலிடத்தில் உள்ளார். ஷபிக்குல்லா, கேப்டன் அஸ்கர் போன்ற சிறந்த வீரர்களும் ஆப்கானிஸ்தான் அணியில் உள்ளனர்.
இரு அணிகளும் 20 ஒவர் போட்டியில் மோதுவது இதுவே முதல் முறையாகும்.