நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் அனுமதி பெறாமல் பொருட்களின் விலையை தான்தோன்றித்தனமாக அதிகரிக்கும் விற்பனையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் றிசாத் கடுந்தொனியில் தெரிவித்தார்.
வவுனியா காமினி மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற நுகர்வோர் பாதுகாப்பு உரிமைகள் வாரத்தில் நடைபெற்ற தேசிய விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த விழாவில் கௌரவ அதிதிகளாக மாகாண அமைச்சர் சத்தியலிங்கம், சிவமோகன் எம்.பி, மாகாண சபை உறுப்பினர்களான ஜயதிலக, றிப்கான் பதியுதீன், நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை தலைவர் ஹசித திலகரத்ன, அமைச்சின் செயலாளர் தென்னகோன் உட்பட பலர் உரையாற்றினர்.
இங்கு அமைச்சர் கூறியதாவது,
கடந்தவாரம் தனியார் வர்த்தக நிறுவனமொன்று மாவின் விலையை எந்தவித முன்னறிவித்தலுமின்றி நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் ஆலோசனையையோ, அனுமதியையோ பெறாமல் அதிகரித்து பாவனையாளர்களை கஷ்டத்திற்குள்ளாக்கியது.
எனது அமைச்சின் கீழ் இந்த அதிகார சபை இயங்குவதால், குறிப்பிட்ட வர்த்தக நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கையை எடுக்குமாறு அதிகாரசபையை பணித்துள்ளேன். அத்துடன் இந்தப் பொருளை கூடிய விலைக்கு விற்ற வர்த்தகர்கள் 100 பேரை நீதி மன்றத்தில் நிறுத்துகின்றோம்.
பாவனையாளர் நலன் பேணும் வாரத்தில் சுமார் 6000 பொருட்களை விலைக்கழிவுடனும், சகாய விலையிலும் வழங்குவதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். அதன் தேசிய விழாவையே இன்று வவுனியாவில் கொண்டாடுகின்றோம். சுதந்திரத்திற்குப் பின்னர் இவ்வாறான பாவனையாளர் நலன் பேணும் விழா அனுஷ்டிக்கப்படுவது இதுவே முதற்தடவை.
நுகர்வோரின் உரிமைகள் என்ன? கடமைகள் என்ன என்பதை விழிப்பூட்டவதற்காக கருத்தரங்குகளை நடத்துகின்றோம். முப்பது பாடசாலைகளில், மாணவர்களை விழிப்பூட்டும் செயல்திட்டம் நடை பெறுகின்றது. துண்டுப்பிரசுரங்கள் மூலமும் பாவனையாளர்களுக்கு அறிவூட்டப்படுகின்றது.
நாடளாவ ரீதியில் 311 லங்கா சதொச கிளைகள் இயங்கிவருகின்றது. இன்னும் இரண்டு மாதங்களில் 12 கிளைகளை ஆரம்பிப்போம். நுகர்வோரின் நலன்கருதி லங்கா சதொசவின் கிளைகளை 500 ஆக்குவோம். லங்கா சதொச நிறுவனம் ஒரு போதும் தனியார் மயப்படுதப்படமாட்டாது. அல்லது தனியாரின் கைகளுக்குள் இது அகப்பட அனுமதிக்கப்படவும் மாட்டாது. இது மக்களின் சொத்து என்பதில் உறுதியாக உள்ளோம்.
சதொச நிறுவனம் இன்று தொடக்கம் எதிர்வரும் புத்தாண்டு வரை பிரமாண்டமான எட்டு ஊக்குவிப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதை மிகவும் மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றேன்.
யுத்தத்தால் சீரழிந்து போன மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டத்தின் இயற்கை வளங்களையும், மனித வளங்களையும் ஒருமுகப்படுத்தி இந்த மாவட்டத்தில் பாரிய பொருளாதார எழுச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் ஆரம்ப வேலைகளை இந்தப் பிரதேச அரசியல் பிரமுகர்களுடன் இணைந்து மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளோம் என்றும் அமைச்சர் கூறினார்..