ஹாசிப் யாஸீன், எம்.எம்.ஜபீர்
முஸ்லிம் காங்கிரஸ் 20வது அரசியல் யாப்பு திருத்தத்தை தடுத்து நிறுத்தியதால் தான் அமைச்சர் றிசாட் இன்று வன்னியில் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக வர முடிந்தது என விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாட்டுக்கு திருமலை மாவட்ட தோப்பூர், கிண்ணியா, குச்சவெளி, இறக்கக்கண்டி, மூதூர், புல்மோட்டை, தம்பலகாமம், கந்தளாய் ஆகிய பிரதேச மக்களை அழைப்பதற்காக அண்மையில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் திருமலை விஜயம் செய்தார். இதன்போது மேற்படி பிரதேசங்களில் இடம்பெற்ற கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து பிரதி அமைச்சர் அங்கு உரையாற்றுகையில்,
சிறுபான்மை கட்சிகளால் உருவாக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கம் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் 19வது அரசியல் யாப்பு திருத்தத்தை நிறைவேற்றிய கையோடு 20வது அரசியல் யாப்பு திருத்தமான தேர்தல் முறையில் மாற்றத்தை அதாவது தொகுதிவாரி முறையிலான தேர்தல் முறையினை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு பெரும் பிரயத்தனத்தை மேற்கொண்டது.
இத்தேர்தல் முறை மாற்றத்தினால் முஸ்லிம் சமூகத்தின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் குறைவடையும் அபாயம் இருந்ததனால் இதனை முஸ்லிம் காங்கிரஸ் தலைமை கடுமையாக எதிர்த்தது மட்டுமல்லாமல் அமைச்சரவையில் தலைவர் ஹக்கீம் கடந்த மஹிந்த அரசாங்கத்தை விட இந்த நல்லாட்சி அரசாங்கம் மிக மோசமாக செயற்படுகின்றது என ஜனாதிபதி மைத்திரியிடம் நேரடியாக கூறியதன் மூலம் 20வது திருத்தத் சட்டம் அன்று அரசினால் கைவிடப்பட்டது.
இந்த 20வது அரசியல் யாப்பு திருத்தம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டிருந்தால் இன்று அமைச்சர் றிசாட் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக வரக்கூடிய தொகுதி வன்னியில் உருவாக்குவதற்கு வாய்ப்பே இல்லை. இவ்வாறான நிலையில் அவர் எவ்வாறு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாக முடியும். இவ்வாறு அரசியல் யாப்பு திருத்தம் பற்றிய அறிவில்லாத அமைச்சர் றிசாட் தனது இருப்புக்கே ஆபத்து வந்தபோது பாராளுமன்றத்திலும் சரி, அமைச்சரவையிலும் சரி வாய் திறக்காதவர் சமூகத்தின் விடிவுக்காக அவர் எவ்வாறு குரல் கொடுப்பார் என கேட்க விரும்புகின்றேன்.
முஸ்லிம்களின் விடுதலை இயக்கமான முஸ்லிம் காங்கிரஸ் இளைஞர்களின் தியாகத்தினாலும், போராளிகளினதும், தாய்மார்களினதும் துஆக்கள், நோன்புகளினால் உருவாக்கப்பட்ட கட்சியாகும். ஆனால் அமைச்சர் றிசாட்டின் கட்சியான மக்கள் காங்கிரஸ் அவரின் அரசியல் அதிகாரத்தினால் பதவிகளை கொடுக்கப்பட்டு, பணங்களை வாரி வழங்கி அவரினால் உருவாக்கப்பட்ட கட்சியாகும்.
நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள நல்லாட்சியில் தழிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வு வழங்கப்படுகின்றபோது அத்தீர்வில் முஸ்லிம்களின் விடயத்தில் முஸ்லிம் காங்கிரஸின் செயற்பாட்டை சீர்குலைப்பதற்கு உள்நாட்டு வர்த்தகர்களும், வெளிநாட்டு சக்திகளும் மக்கள் காங்கிரஸிக்கு நிதிகளை வழங்கி முஸ்லிம் காங்கிரஸினை பிளவு படுததுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு முஸ்லிம் சமூகம் இடமளிக்கக் கூடாது.
முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாடு எதிர்வரும் 19ம் திகதி அட்டாளைச்சேனை பாலமுனையில் இடம்பெறவுள்ளது. இதில் நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள், வெளிநாட்டு இராஜதந்திரிகள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர். இந்மாநாட்டில் இலங்கை முஸ்லிம்களின் இருப்பு, தீர்வு சம்பந்தமான விடயங்கள் முன்வைக்கப்படவுள்ளது. எனவே இம்மாநாட்டில் நாட்டின் நாளாபுறமுள்ள முஸ்லிம்கள் கலந்து கொண்டு எமது பலத்தை நாட்டுக்;குள்ளும், சர்வதேசத்திற்கு காட்ட அணிதிரள வேண்டும் என பிரதி அமைச்சர் ஹரீஸ் அழைப்பு விடுத்தார்.