மன்னாரில் களை கட்டிய மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம்..!

 

IMG_2753_Fotor

-சுஐப் எம் காசிம்,முனவ்வர் எ காதர்- 

மன்னார் மாவட்ட அபிவிருத்தி சபைக் குழுக்கூட்டம் அதன் இணைத்தலைவர்களான அமைச்சர் றிசாத் பதியுதீன்,  முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி, மஸ்தான் எம்.பி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற போது மாவட்டத்தின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது. 

இந்த சந்தர்ப்பத்தில் குறிக்கிட்ட சார்ள்ஸ் எம்.பி, மன்னார் மாவட்டத்தில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதால் மன்னார் மாவட்டக் கல்வித் திணைக்களத்தின் நிர்வாகத்தின் கீழ், புத்தளம் மாவட்டத்தில் இடம்பெயர்ந்த முஸ்லிம் மாணவர்களுக்கென இயங்கி வரும் இணைப்புப் பாடசாலைகளை மூடவேண்டுமெனவும், அந்த ஆசிரியர்களை மன்னாருக்குக் கொண்டுவர வேண்டுமெனவும் ஒரு குரோதப் பாணியில் தனது கருத்தை வெளியிட்டார். புத்தளத்தில் இந்த அகதி மக்கள் சுகபோக வாழ்க்கை வாழ்வதாகவும் அதனால்தான் இவர்கள் இங்கு வர மறுக்கின்றனர் எனவும் சுட்டிக்காட்டினார். 

12516022_219198211767459_871409348_n_Fotor

அந்த சந்தர்ப்பத்தில் கொதித்தெழுந்த றிசாத் பதியுதீன்,  உங்களுக்கு மனச்சாட்சி இருக்கின்றதா?  இந்த மக்கள் 25 வருட காலம் தென்னிலங்கையில் வாழ்ந்து, இங்கு மீள்குடியேற வந்த போது அவர்களுக்கு அடிப்படை வசதிகள் எதுவுமில்லை. அதிகாரிகள் சிலரும் மீள்குடியேற்றத்திற்கு ஒத்துழைக்க மறுக்கின்றனர். மாணவர்கள் இங்கு வந்து கற்பதற்கு பாடசாலைகள் இல்லை. வீடுகள் இல்லை. புதிய அரசாங்கமானது இவர்களது பிரச்சினைகளை கருத்திற்கெடுத்து மீள்குடியேற்றத்திற்கான சிறந்த திட்டமொன்றை நடைமுறைப்படுத்துமென நாங்கள் நம்பியிருக்கின்றோம். 

அதுவரையில் தொடர்ந்தும் வெறும் கட்டாந்தரைகளில் வாழ வேண்டுமெனவும், இடம்பெயர்ந்த மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் மன்னாருக்கு வந்து பணி புரிய வேண்டுமெனவும் நீங்கள் வலியுறுத்துவது மனசாட்சிக்கு விரோதமானது என்றும் கூறினார். விரும்பினால் அந்தப் பாடசாலைகளை நீங்கள் மூடுங்களேன் என்று மனவருத்தம் கலந்த தொனியில் வேண்டினார்.

இந்த சர்ந்தப்பத்தில் முதலமைச்சர் விக்னேஸ்வரனும், மாகாண கல்வியமைச்சர் குருகுலராசாவும் இணைப்புப் பாடசாலைகளின் ஆசிரியர்கள் மன்னாருக்கு வர வேண்டுமென்ற பாங்கிலேயே தமது கருத்துக்களைத் தெரிவித்தனர்.

இந்த சந்தர்ப்பத்தில் கிளர்ந்தெழுந்த மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்,  வடமாகாண முஸ்லிம்களின் பிரச்சினைகளை நீங்கள் இன்னும் விளங்கிக் கொள்ளவில்லையா?  இந்த மக்கள் தமது பிரதேசங்களில் குடியேறுவதற்கு முட்டுக்கட்டைகள் என்னவென்பதை புரிந்துகொள்ளுங்கள். 

எங்களை விரட்டியவர்கள் யார்? இப்போது இங்கு வந்து இப்படிப் பேசாதீர்கள். மெனிக் பாமிலிருந்து சொந்த இடத்திற்கு குடியேற்றப்பட்ட மக்களுடன் எங்களை ஒப்பிட்டுப் பேச வேண்டாம் என்று உரத்த தொணியில் பேசினார்.