பித்தலாட்ட கதைகளை விட்டு சமூகத்தின் அரசியல் அபிலாஷைகளை வெளிப்படுத்துவதே காலத்தின் தேவை !

பாலமுனை மாநாட்டில் பித்தலாட்ட கதைகளை விட்டு சமூகத்தின் அரசியல் அபிலாஷைகளை வெளிப்படுத்துவதே காலத்தின் தேவை! ஹக்கீமிடம் வேண்டுகோள்

 rauff hakeem

 

அம்பாறை புத்திஜீவிகள்

 

பாலமுனை தேசிய மாநாட்டில் ஜனாதிபதியையும் பிரதமரையும் எதிர்க்கட்சித் தலைவரையும் ஒரே மேடையில் இருத்தி மு.கா தலைவர் ஹக்கீம் தனது வீரப்பிரதாபங்களை முழங்கப் போகின்றார். வீர வசனங்கள் பேசி சரிந்து போய்க்கொண்டிருக்கும் மு.கா வின் செல்வாக்கை தூக்கி நிறுத்த பாடுபடப் போகிறார்.

தமிழர் பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் முயற்சியில் சர்வதேசம் முனைப்புக்காட்டி வரும் இந்த வேளையில் மற்றொரு சிறுபான்மை சமூகமான முஸ்லிம்களும் பல்வேறு அரசியல் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர் என்பதையும் நாட்டுத்தலைமைக்கும் தமிழர் தலைமைக்கும் சர்வதேசத்துக்கும் உணர்த்த ஹக்கீமுக்கு கிடைத்த இந்த அருமையான சந்தர்ப்பத்தை கோட்டை விட்டுவிட்டு பாம்புக்குத் தலையையும் மீனுக்கு வலையையும் காட்டும் தனது அரசியல் சாணக்கியத்தை ஹக்கீம் இந்த மேடையிலாவது கைவிடவேண்டும்.

கடந்த காலத்தில் முஸ்லிம் காங்கிரஸ் விட்ட தவறுகளைத் திருத்திக் கொண்டு முஸ்லிம் சமூகத்துக்கு உருப்படியான தீர்வு கிட்ட இந்த சந்தர்ப்பத்தை ஹக்கீம் எந்தளவு பயன்படுத்திக் கொள்வாரோ தெரியவில்லை. மேடையிலே வெறும் வாய்ச்சவடால்களையும் வீரவசனங்களையும் கூறி அங்கு திரண்டிருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர்கள், தொண்டர்கள், ஆதரவாளர்கள், பார்வையாளர்களை திருப்திப்படுத்த ஹக்கீம் முயற்சி எடுப்பாரேயானால் அது சமூகத்துக்கு செய்யும் வரலாற்றுத் துரோகமாகவே கருதப்படும்.

அரசியல் தீர்வு முயற்சியில் முஸ்லிம் சமூகத்தின் அபிலாசைகள் என்ன என்பதை ஹக்கீம் தெளிவாக கூற வேண்டும். சம்பந்தனுக்கு ஒரு கதை, ரணில் மைத்திரிக்கு இன்னொரு கதை, சந்திரிக்காவிடம் வேறொரு கதை முஸ்லிம் சமுகத்திடம் வீர வசனங்கள் என்ற நிலையை ஹக்கீம் இனியாவது மாற்றிக் கொள்ள வேண்டும். கடந்த காலங்களில் தென்கிழக்கு அலகு, கரையோர மாவட்டம் என்ற பதங்களைப் பிரயோகித்து முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றியது போதும். முஸ்லிம் சமூக வாக்குகளைக் கொள்ளையடித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்தது போதும்.

தமிழர் தரப்பு பல்வேறு முனைகளில் தமது தீர்வு முயற்சியை ஆவணப்படுத்தி அரச தலைமையிடம் கையளிக்க முடிவு செய்துள்ளது. ஆனால் முஸ்லிம்களின் அதிகபட்ச முஸ்லிம்களின் ஆதரவைப் பெற்றதாக மார் தட்டி வரும் முஸ்லிம் காங்கிரஸ் தீர்வு திட்டம் தொடர்பில் இதுவரை உருப்படியான எந்த முயற்சிகளும் எடுக்கவில்லை.

மர்ஹ_ம் அஷ்ரப் 1995 ஆம் ஆண்டு வரை முஸ்லிம் மாகாண கோரிக்கை ஒன்றை வலியுறுத்தி வந்தார். பின்னர் சந்திரிக்காவின் தீர்வுப் பொதியில் அது தென்கிழக்கு அலகு என்று புகுத்தப்பட்டது. அம்பாறை கரையோரத் தேர்தல் தொகுதிகளான பொத்துவில், சம்மாந்துறை, கல்முனை ஆகியவற்றை உள்ளடக்கி ஆலோசிக்கப்பட்டதே இந்த தென்கிழக்கு அலகு என்ற பிராந்திய எண்ணக்கரு. இது முஸ்லிம் காங்கிரசின் கருவில் இருந்து உருவாக்கப்பட்டதல்ல என்று மர்ஹ_ம் அஷ்ரப் பல்வேறு தடவைகளில் தெளிவாக சுட்டிக்காட்டியிருந்தார். எனினும் முஸ்லிம் சமூகத்துக்கு இந்த தென்கிழக்கு அலகு பயனளிக்கும் என்ற கருத்தையும் தெரிவித்தார்.

அன்றைய அரசியல் சூழ்நிலையில் மர்ஹ_ம் அஷ்ரப் இவ்வாறான நிலைப்பாடுகளை கொண்டிருந்த போதும் அவை ஒரு குத்து மதிப்பாகவே கொள்ளப்பட வேண்டும். ஏனெனில் இனப்பிரச்சினைக்கான தீர்வு அப்போது சிக்கலானதாகவும் குழப்பகரமானதாகவும் அமைந்திருந்தது. தீர்வு முயற்சிகள் கடினமான நிலையில் இருந்த காலத்தில் முஸ்லிம் சமூகத்துக்கு கிடைப்பதைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற தூய நோக்கம் அஷ்ரபிடம் இருந்தது.

ஆனால் இன்றைய கால கட்டம் தீர்வுக்கான அரசியல் சூழல் கனிந்து வரும் ஒரு நிலையில் உள்ளது. தீர்வு முயற்சிகள் கூர்மையடைந்து நல்லாட்சிக்கான 2 வருட ஒப்பந்த காலத்துக்குள் வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு தீர்வை வழங்க வேண்டும் என்ற என்ற நிர்ப்பந்தத்தில் நாட்டுத் தலைமை இருக்கின்றது. சர்வதேசத்தின் அழுத்தங்களும் தமிழர் சார்பாக பலமாக உள்ளது. ஆனால் முஸ்லிம் சமூகத்தைப் பற்றி எந்தத் தேசமும் அலட்டிக் கொள்வதாக தெரியவில்லை. இந்த நிலையில் முஸ்லிம் சமூகத்துக்கு கரையோர மாவட்டம், தென்கிழக்கு அலகு என்ற பழைய பூச்சாண்டிகளை காட்டிக் கொண்டு ஹக்கீம் இனியும் அரசியல் நடத்த முடியாது.

மொழி ரீதியான கடமைகளை இலகுபடுத்துவதற்காக வேண்டி நின்ற கரையோர மாவட்டம் என்ற கோரிக்கையை முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் ஆக்கியதால் முஸ்லிம்களுக்கு கரையோர மாவட்டம் தீர்வா? அல்லது தென்கிழக்கு அலகு தீர்வா என்று மக்கள் குழம்பிப்போய் இருக்கின்றனர். முஸ்லிம் காங்கிரஸ்கள் கூட இதில் சரியான தெளிவில்லாமல் தடுமாறி இருக்கின்றனர். ஹக்கீமும் ஹரீசும் ஹசனலியும் ஹாசிம் பைசலும் தங்களது தேர்தல் வெற்றிக்காக கரையோர மாவட்டத்தைப் பயன்படுத்தியதால் இன்று பெரும்பான்மையினம் முஸ்லிம் சமூகத்தை பிரிவினவாதிகள் என்று கூறும் அளவுக்கு வந்துள்ளது. எனவே அரசியல் தீர்வு முயற்சியில் முஸ்லிம் காங்கிரசின் நிலைப்பாடு என்ன என்பதை பாலமுனை மேடையில் ஹக்கீம் உரத்துக் கூற வேண்டும். அதனை விடுத்து பெட்டைக் கோழி கூவுவது போன்று உரத்துக் கூவுவதால் முஸ்லிம் சமூகத்தின் பொழுது விடியாது.

தொடர்ந்தும் இருட்டாகவே இருக்கும்.
வடக்கு கிழக்கு இணைந்தால் முஸ்லிம்களுக்கு எத்தகைய தீர்வு வேண்டும்? பிரிந்த வடக்கு கிழக்கில் எவ்வாறான தீர்வு அவசியம் என்று கூறவேண்டிய தீர்க்கமான பொறுப்பு முஸ்லிம் காங்கிரசுக்கு இருக்கின்றது. தொடர்ந்து மதில்மேல் பூனையாக இருந்து சம்பந்தனையும் திருப்திப்படுத்தி மைத்திரி – ரணிலையும் ஆசுவாசப்படுத்தி ஹக்கீம் இனியும் அரசியல் செய்து கொண்டிருக்கக் கூடாது. கிழக்கில் 37மூ ஆக உள்ள தென்கிழக்கு அலகுதான் ஒரே தீர்வு என்றால் தென்கிழக்குக்கு வெளியே உள்ள கிழக்கு மாகாணத்தில் வாழும் 17மூ ன முஸ்லிம்களின் நிலை என்ன? பிரிந்த வடக்கு, கிழக்கில் தீர்வென்றால், வடக்கில் வாழும் 10மூ முஸ்லிம்களின் அரசியல் எதிர்காலம் என்ன? தீர்வு முயற்சியில் தமிழர்களுக்கு சமஷ்டி கிடைத்தால் அத்தகைய பெரிய சுயாட்சிக்கு ஈடாக தென்கிழக்கு அலகு அமையுமா? இவ்வாறான கேள்விகளுக்கு இந்த மேடையில் ஹக்கீம் விடை தர வேண்டும். அதை விடுத்து அன்றைய சூழ்நிலையில் மர்ஹ_ம் அஷ்ரபின் பங்குபற்றுதலுடன் உருவாக்கப்பட்ட சந்திரிக்காவின் தீர்வுப்பொதியில் முஸ்லிம்களுக்கான அதிகாரப் பகிர்வு தொடர்பான விடயங்களை மீண்டும் மீண்டும் மேடைகளில் கொக்கரித்துக் கொண்டிருப்பதில் எந்தப் பயனும் இல்லை.

சகோதரர் ஹக்கீம் வெறுமனே வார்த்தை அலங்காரத்தில் தனது காலத்தை ஓட்டாமல் பாலமுனை மேடையிலாவது முஸ்லிம்களுக்கான அபிலாஷைகள் என்னவென நாட்டுத் தலைமையிடம் உரத்துக் கூறாவிட்டால் அது ஒரு வரலாற்றுத் துரோகமாகவே கருத வேண்டி இருக்கும்.