‘ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு விடுதலை வீரன். காற்றினால் தீயினால் வெள்ளத்தினால் அழிக்க முடியாத ஒரு தலைமைத்துவத்தை உருவாக்க வேண்டுமென்று நாங்கள் கனவு கண்டோம். துப்பாக்கி ரவைகளினால் சுடப்படாத முடியாத ஒரு தலைமைத்துவம் முஸ்லிம் சமூகத்திற்கு வேண்டும். அந்தத் தலைமைத்துவத்தை உருவாக்குகின்ற காரணத்தினாலேயே, சரித்திர நாயகனாக முஸ்லிம் காங்கிரஸ் வளர்ந்திருக்கின்ற காரணத்தினாலேயே… அந்த விடுதலை வீரனுக்காக முஸ்லிம் சமூகம் ஒவ்வொரு ஆண்டு;ம் பெருநாள் போன்ற விழாவொன்றை எடுத்துக் கொண்டிருக்கின்றது. அதுதான் தேசிய மாநாடுகளாகும்’
முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாடு ஒன்றில் அதன் ஸ்தாபக தலைவரும் முஸ்லிம்களின் அரசியல் விடிவெள்ளியுமான மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரஃப் ஆற்றிய உரையின் ஒரு பகுதியே இது! முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாடுகள் எதற்காக நடாத்தப்படுகின்றன? அதில் மறைந்திருக்கும் தார்ப்பரியம் என்ன என்பதை அவர் இவ்வுரையில் சுருக்கமாக சொல்லியிருக்கின்றார். அதனை வைத்துப் பார்க்கின்ற போது, அஷ்ரஃப் குறிப்பிட்ட வரையறைகளுடன் இன்று மு.கா.வும் அதன் அரசியல் தலைமைத்துவமும் இருக்கின்றதா? என்று சிந்திக்க வேண்டியுள்ளது. தேசிய மாநாட்டின் நோக்கம் என்னவென்று அவர் சொன்னாரோ அதுவாக மு.கா. இல்லாதபட்சத்தில் தேசிய மாநாடுகளின் அர்த்தம்தான் எதுவாக இருக்கும்? என்ற கேள்வியும் எழுகின்றது.
வடக்கு கிழக்கில் குறிப்பாகவும், நாட்டின் ஏனைய பாகங்களில் சிதறுண்டும் வாழ்கின்ற முஸ்லிம் மக்களின் அபிமானத்தைப் பெற்ற கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாடு எதிர்வரும் 19ஆம் திகதி அட்டாளைச்சேனை, பாலமுனையில் இடம்பெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் எல்லாம் தடபுடலாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
அம்பாறை மாவட்டத்திற்கு மு.கா. தலைவரும் அமைச்சருமான றவூப் ஹக்கீம் கடந்த வாரம் விஜயம் செய்தார். எப்படியாவது ஒரு வெற்றிகரமான மாநாடாக இதை நடாத்திக்; காட்டுவதற்கு தேசியத் தலைமை பகீரத பிரயத்தனங்களை மேற்கொண்டிருக்கின்றது. இதனால் பிராந்திய தளபதிகளும் கட்டளைத் தளபதிகளும் சிப்பாய்களிடம் வேலை வாங்கிக் கொண்டிருக்கின்றனர். கட்சியின் எழுச்சிப்பாடல்கள் அடங்கிய சீ.டி.க்களும் கட்சியின் கொள்கைகளும் மீள தூசுதட்டப் பட்டுக் கொண்டிருக்கின்றன. பாலமுனை மைதானம் மட்டமல்ல, புதர்மண்டிக்கிடந்த சில கோஷங்களும் துப்புரவாக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றன.
நெடுங்காலத்திற்கு பின் மறைந்த தலைவர் அஷ்ரஃப் இந்தக் கட்சியை எந்த இடத்தில் விட்டுச் சென்றாரோ, அந்த இடத்திலிருந்து அக்கட்சியின் விடுதலைப் பாதையில் ஒரு அங்குலம் கூட நகர்த்த முடியாது போன காலப்பகுதியாக அவரது மரணத்திற்குப் பின்னரான இந்த 15 வருடங்களையும் சொல்ல முடியும்.
இக் காலப்பகுதியில், பேரியல் அஷ்ரஃப் மற்றும் றவூப் ஆகியோரது கூட்டுத் தலைமைத்துவத்தின் கீழேயோ அல்லது ஹக்கீமின் தனித் தலைமைத்துவத்தின் கீழேயோ இவ்வாறான பிரமாண்டமான ஒரு தேசிய மாநாடு நடைபெற்றிருக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். பேராளர் மாநாடுகள் நடாத்தப்பட்டு அதிகாரங்களை புதுப்பித்துக் கொள்ளும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதும் தேசிய மாநாடுகள் கிரமமான அடிப்படையில் இடம்பெறவில்லை. மு.கா.வினால் ஏற்பாடு செய்யப்பட்டு, கனதியான அதிதிகளின் பங்கேற்புடன் இடம்பெற்ற சில பாரிய நிகழ்வுகள் தேசிய மாநாடுகள் என்றே குறிப்பிடப்பட்ட போதிலும், அஷ்ரஃப் காலத்தில் இடம்பெற்றது போலவோ அல்லது பாலமுனையில் எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறுவது போலவோ பெரிய அளவிலான திறந்தவெளி மாநாடுகள் இடம்பெற்ற சந்தர்ப்பங்கள் மிகக் குறைவாகும். இதற்கான காரணங்களும் எல்லோருக்கும் தெரியும்.
அந்த அடிப்படையில் நோக்கினால், முஸ்லிம் காங்கிரஸின் தாய்வீடாகவும் அக்கட்சியின் கோட்டையாகவும் இருக்கின்ற அம்பாறை மாவட்டத்தில் தேசிய மாநாட்டை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டமை மிகவும் பாராட்டத்தக்கது. இதற்காக தலைவருக்கும் கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ள உறுப்பினர்களுக்கும் உண்மையிலேயே நன்றிகூற வேண்டும். கட்சியின் போக்கிலும் தலைவரின் செயற்பாடுகளிலும் ஒரு தொகுதி மக்கள் அவ்வளவாக திருப்தியுற்றிராத ஒரு காலப்பகுதியில், இம்மாநாடு இடம்பெறுவது முக்கியமானது.
தேசிய மாநாட்டை இவ்வருடம் பாலமுனை பிரதேசத்தில் நடாத்தும் விடயம் கட்சியின் உயர் பீடத்தில் பேசப்பட்டபோது, இப்போதிருக்கின்ற நிலையில் தேசிய மாநாட்டை நடாத்த தேவையில்லை என்று சில உறுப்பினர்கள் கூறியிருக்கின்றார்கள்.
ஆனாலும், தலைவர் நடத்தியே தீரவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். பாலமுனை பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர் தேசிய மாநாட்டை நடாத்தக் கூடாது என்று முன்னமே தலைமைக்கு அச்சுறுத்தல் விடுத்ததாகவும் அதனை சவாலாக கொண்டும் மாநாட்டை நடத்த தீர்மானிக்கப்பட்டதாகவும் ஒரு தகவல் உள்ளது. இது உண்மையாக இருக்கக் கூடாது. ஒரு பென்னம்பெரிய கட்சியின் தேசிய மாநாடு என்பது மக்கள் நலன்கள், காலத்தின் தேவைப்பாடு, முஸ்லிம்களின் எதிர்காலம் என்பதை அடிப்படையாகக் கொண்டு நடாத்தப்படுவதாக இருக்க வேண்டுமே ஒழிய, சின்னச் சின்ன சச்சரவாளர்களுக்கு, தலைவர் தம் பலத்தை காட்டும் ஆயுதமாக இருக்க கூடாது.
நல்லாட்சி அரசாங்கம் நிறுவப்பட்ட பிற்பாடு தொடர் நிகழ்வாக பல புதிய மாறுதல்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
குறிப்பாக – அரசியலமைப்பு மீளுருவாக்கம், தேர்தல் முறைமை மாற்றம், இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் இணைப்பு விவகாரம், எல்லை மீள் நிர்ணயம். முஸ்லிம்களுக்கான நிலத்தொடர்பற்ற அதிகார அலகு போன்ற பல விடயங்கள் பொதுத்தளத்தில் காரசாரமான உரையாடல்களுக்கு உட்பட்டிருக்கின்ற காலமாக இதைக் கொள்ளலாம். இவ்விடயம் ஒவ்வொன்றிலும் முழுக் கவனம் செலுத்த வேண்டிய மிகப் பெரிய கடப்பாடு மு.கா.வுக்கு இருக்கின்றது.
இவ்விடயங்களில் எல்லாம் கட்சியும் தலைமையும் விழிப்பாகவே இருக்கின்றனர் என்று றவூப் ஹக்கீம் கூறிக் கொண்டாலும், மக்களின் பக்கமாக இருந்து பார்க்கின்ற போது அவரும் கட்சியும் விழிப்பாக இருப்பதை நம்ப முடியவில்லை. அரைத் தூக்கத்தில் இருப்பவனை யாராவது தட்டி எழுப்பினால், தான் விழிப்பாகவே இருப்பதாக அவன் சொல்வான். அதுபோலவே ஹக்கீம் சொல்கின்றாரா என்ற ஐயப்பாடு போராhளிகள் மனதில் ஏற்பட்டிருக்கின்ற ஒரு சூழலிலேயே இம் மாநாடு நடைபெறப் போகின்றது. எனவே இது உப்புக்குச் சப்பாக நடைபெறும் பத்தோடு பதினோராவது நிகழ்வாக இருக்க முடியாது. யாருடைய சொந்த கௌரவத்தை பாதுகாப்பதற்காகவும் பல மில்லியன்களை செலவழிக்க வேண்டியதில்லை. அப்படியென்றால் அப்பணத்தை பிரித்து வறிய குடும்பங்களின் குமர்களை கரைசேர்த்தால் கூட புண்ணியமாவது கிடைக்கும். எனவே இச்சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்த வேண்டும்.
கடுமையான பிரயத்தனம்
பாலமுனையில் 2016 இற்கான தேசிய மாநாட்டை நடாத்துவது என்ற தீர்மானத்திற்கு வந்தவுடனேயே, அம்பாறை மாவட்டத்தை மையமாகக் கொண்டதாக மு.கா.வின் அனைத்து நிகழ்ச்சி நிரல்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அம்பாறை மாவட்டத்திற்கு வந்த தலைவர் ஹக்கீம் பாலமுனைக்கு மட்டுமன்றி பல ஊர்களுக்கும் விஜயம் செய்திருக்கின்றார். மக்களை சந்தித்திருக்கின்றார். கடலோரமாக நடந்திருக்கின்றார்.
உண்மையில், இதைப் பார்ப்பதற்கு மிக சந்தோசமாக இருக்கின்றது. முஸ்லிம் கட்சியொன்றின் தலைவர் நம்முள் ஒருவராக வலம் வருவது மிகவும் பாராட்டப்பட வேண்டியதே. ஆனால், மு.கா. தலைவர் எக்காலத்திலும் இதுபோல இருக்க வேண்டுமென்றே மக்கள் எதிர்பார்க்கின்றனர். தேர்தல் காலத்தில் வந்து வாக்குகளை அள்ளிச் சென்ற பிறகு அடுத்த தேர்தலுக்கு இடைப்பட்ட காலத்தில் இவ்வாறான விஜயங்களை ஹக்கீம் மேற்கொள்வதில்லை. அதுபோலவே, இப்போது தேசிய மாநாடு என்ற தேவைப்பாடு இருப்பதற்காக மட்டும், எங்கவீட்டுப் பிள்ளையாகும் ஹக்கீம், காரியம் முடிந்ததும் மாடிவீட்டு மைனராகி விடுவார் என்பதே பொது மக்களின் அனுபவமாக இருக்கின்றது.
இது தேசிய மாநாடு. இதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சிறப்பு அதிதியாகவும் வருகை தரவுள்ளனர். எனவே மக்கள் வெள்ளத்தை காட்ட வேண்டிய தேவை கட்சிக்கு இருக்கின்றது. தற்போது ஒவ்வொரு ஊரிலும் மு.கா.வுக்குள் இரண்டு அல்லது மூன்று பிரிவுகள் இருக்கின்றன. தேசியப்பட்டியல் விவகாரம் வரையான பல்வேறு விடயங்களில் தலைமைத்துவம் நடந்துகொண்ட விதத்தின் காரணமாக கணிசமான மக்கள் அதிருப்தியடைந்து இருக்கின்றனர். கட்சியின் மத்திய குழுக்கள் சிதைவடைந்து நெடுங்காலமாயிற்று. இப்போது திடுதிடுப்பென ஒரு மாநாட்டடை நடத்துவது என்றால், இவற்றையெல்லாம் சீரமைக்க வேண்டிய அவசரம் மு.கா.வுக்கு உள்ளது.
மு.கா. என்பது மக்களின் உயிரிலும் மேலான கட்சியாகும். அதன் கடந்தகால அனுபவத்தை பொறுத்தவரையில், மு.கா.வின் தேசிய மாநாடு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டதும் உண்மையான போராளிகள் எல்லோரும் களத்தில் இறங்கி விடுவார்கள். மாநாட்டுக்கு நாட்டின் எல்லா இடங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் சுயமாகவே வருவார்கள். யாரையும் பஸ் பிடித்து ஏற்றிவர வேண்டிய தேவைப்பாடு மு.கா.வுக்கு இருந்தது கிடையாது.
ஆனால், அஷ்ரஃ;ப் கட்டியெழுப்பியிருந்த இந்த நிலைமையை பின்வந்த தலைவரும் உறுப்பினர்களும் வெகுவாக கெடுத்துக் கொண்டனர். அதைச் சரிசெய்து மக்களுடனான உறவைப் பேணுவதற்கு கட்சித் தலைமை முயற்சிக்கவில்லை. தேர்தல் காலத்தில் மட்டும் வந்து விட்டுப் போகும் ஒரு தூரத்து உறவுக்க காரர் போலவே அவர் இருந்தார். சரி, கொழும்பில் இருந்து கொண்டு மக்களுக்கு சேவை செய்கின்றார் என்று வைத்துக் கொண்டாலும், அஷ்ரஃப் போல பாரிய சேவைகள் எதையும் ஹக்கீம் கிழக்கு மக்களுக்கு செய்து காட்டியதாக மார்தட்ட முடியாது. அப்படிச் செய்திருந்தால், தேசிய மாநாட்டுக்கு இத்தனை பிரயத்தனங்களை எடுக்க வேண்டிய இக்கட்டான நிலை ஏற்பட்டிருக்காது.
மு.கா.வின் தாய் வீட்டில் தேசிய மாநாட்டை நடாத்துவதை மிகவும் மனந்திறந்து பாராட்ட வேண்டும். இது, மு.கா. மற்றும் தலைவர் றவூப் ஹக்கீம் மீதான நல்லெண்ணத்தை குறைந்தபட்சம் 1 வீதத்தாலும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இந்த மாநாட்டுக்காக அம்பாறை மாவட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கு, நமக்கு வெளிப்படையாக தெரியும் விடயங்கள் மட்டுமே காரணம் என்று கூற முடியாது. மாறாக, ஹக்கீம் இதன்மூலம் இன்னுமொரு சாணக்கியமான சதுரங்க ஆட்டத்தை மறைமுகமாக ஆடுகின்றாரோ என்று சின்னதாய் ஒரு சந்தேகம் அரசியல் அறிவுள்ளவர்கள் மத்தியில் எழுந்திருக்கின்றது. அதாவது, இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக் காட்டினால் ஹக்கீமுக்கு கிடைக்கு உப நன்மைகள் என்றும் அவற்றை கூறமுடியும்.
மனக் கணக்கு
குறிப்பாக. தற்போது கிழக்கில் மு.கா. மாற்றுக் கருத்தாளர்கள் அணியொன்று உருவாகக் கொண்டிருக்கின்றது. ‘தலைவர் ஹக்கீம் இந்த சமூகத்திற்காக குரல் கொடுக்கின்றார் இல்லை’ என்ற கோஷம் கட்சிக்குள்ளும் வெளியிலும் வலுத்து வருகின்றது. அதேவேளை, மட்டக்களப்பில் பசீர் சேகுதாவூத்தும் அம்பாறையில் ஹசன்அலியும் அறிக்கைகளை விடுவதன் மூலம் தலைவரை சங்கடப்படுத்துகின்றனர். ‘இவ்விருவருக்கும் தேசியப்பட்டியல் எம்.பி. கொடுக்காததன் காரணத்தினாலேயே, தமது சுய இலாபத்திற்காக இவ்வாறான அறிக்கைளை விடுவதாக’ தலைவரின் விசுவாசிகள் சொல்லிக் கொண்டாலும், அவர்களது பேச்சிலும் கோரிக்கையிலும் இருக்கும் நியாயங்களை மறுப்பதற்கில்லை.
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படுமிடத்து, நிலத்தொடர்பற்ற முஸ்லிம் மாகாணம் உருவாக வேண்டுமென்று முன்வைக்கப்படுகின்ற கோரிக்கையோடு மு.கா. தலைவர் ஹக்கீமுக்கு 100 வீத உடன்பாடு கிடையாது என்பது கட்சிக்குள்ளே இருப்பவர்களின் கருத்தாகும். முஸ்லிம்களுக்கும் ஏதாவது ஒரு தீர்வு கிடைக்க வேண்டும். அது சிறியதொரு நிலப்பரப்பாக இருந்தாலும் பரவாயில்லை என்பதே தேசிய தலைமையின் நிலைப்பாடு எனக் கூறப்படுகின்றது. அது உண்மையாயின், தனி மாகாணம் போன்ற மக்களுக்கான கோரிக்கையை முன்வைக்கின்றவர்கள் பெரிய ஆளாகி விடுவார்களோ என்ற பயம் ஹக்கீமுக்கு ஏற்பட்டிருக்க நிறைய வாய்ப்புள்ளது.
எனவே, இந்த மாநாட்டுக்கு அதிக சனத்திரளை கொண்டு வர முடியுமாக இருந்தால்… கிழக்கில் தேசியப் பட்டியல் பற்றிய எந்த சர்ச்சைகளும் இல்லை. எல்லோரும் எம்முடனேயே இருக்கின்றனர் என்று அரசாங்கத்திற்கும் சர்வதேசத்திற்கும் காண்பிக்க மு.கா. தலைமை நினைக்கலாம். மறுபுறத்தில், அரசாங்கம் என்னோடுதான் இருக்கின்றது எனவே உங்களது கோரிக்கைகளாலும் எதிர் செயற்பாடுகளாலும் எதுவும் நடக்காது என்று அதிருப்தியாளர்களுக்கு சாடைமாடையாக சொல்வதற்கான சந்தர்ப்பமாகவும் இம்மாநாட்டை மு.கா. தலைவர் பயன்படுத்தக் கூடும். சுருங்கக் கூறின் மு.கா. அதிருப்தியாளர்களை மேலும் பலவீனப்படுத்தி ஆதரவாளர்களுக்கு உற்சாகபானம் கொடுக்கும் ஒரு நிகழ்வாகவும் மக்களை சமாளிப்பதற்கான சந்தர்ப்பமாகவும் கூட இது அமையலாம். ஆனால் இந்த அற்ப விடயங்கள் மாத்திரமே பாலமுனை மாநாட்டின் நோக்கங்கள் அல்ல. மாறாக, மேலே சொன்னது போல, ஒரு கட்சியின் தேசிய மாநாட்டிற்கு இருக்க வேண்டிய பிரதான நோக்கங்களையும் இது கொண்டிருக்கும்.
அஷ்ர.பின்; கொள்கையை உண்மைக்குண்மையாக பின்பற்றுபவர்களாயின், தேசிய மாநாடு எதற்காக கொண்டாடப்படுகின்றது என்று (இக் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட) உரையின் வரிகளை கவனிக்க வேண்டும். அதில் ஒரு உண்மையிருக்கின்றது. அதாவது, அஷ்ரஃப் தனது காலத்தில் இச் சமூகத்திற்கு பாரிய சேவைகளை ஆற்றினார். அடையப் பெற்ற அபிவிருத்திகளும் எதிர்கால திட்டங்களும் பற்றி பேசுவதாக தேசிய மாநாடுகள் அமைந்திருந்தன. மு.கா.வின் ஒரு தேசிய மாநாடு ஒலுவில் துறைமுகம் மற்றும் வெளிச்சவீட்டு அபிவிருத்தி திட்டங்கள் பற்றி பேசுவதாக இருந்தது. இன்னுமொரு மாநாடு பொன்னம்வெளி காணிகள் பற்றிய கவனத்தை செலுத்தியது. பிறிதொரு மாநாடு தென்கிழக்கு பல்கலைக்கழக திட்டத்தை நிறைவேற்றிய சாதனையை பிரகடனம் செய்வதாக காணப்பட்டது. அப்படிப் பார்த்தால் பாலமுனை மாநாடு எவ்வாறு அமையப் போகின்றது என்று தெரியவில்லை. என்ன சாதனைகள் நிகழ்த்தியதாக தலைவரும் தளபதிகளும் சொல்வார்களோ தெரியாது. சில கட்சித் தாவல்கள், ஒரு சில அமைச்சுப் பதவிகள், பேரம்பேசல்களையும் மேற்கொண்டு பசப்பு வார்த்தைகளால் மக்களின் வயிற்றை நிரப்பியதை தவிர வேறு எவற்றை சாதனை என்று சொல்லலாம்!.
கரங்காவட்டை, வட்டமடு உள்ளிட்ட கிழக்கிலுள்ள 30ஆயிரம் ஏக்கர் காணிப் பிரச்சினை, கரையோர மாவட்டம், சாய்ந்தமருது பிரதேச சபை போன்ற விடயங்களிலாவது தலைவர் குரல் கொடுத்திருந்தால்….. இந்த மாநாடு இன்னும் அர்த்தமுள்ளதாக இருந்திருக்கும். தேசியப்பட்டியலையாவது சரியாக பகிர்ந்து கொடுத்திருந்தால், குறைந்தபட்சம் அம்பாறைக்கு வருவதற்கு முன்னராவது பாராளுமன்ற உறுப்பினர் சல்மானை இராஜினமா செய்ய வைத்திருந்தால், பொது மக்களின் கேள்விகளுக்கு தலையைக் குனிந்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்காது. ஆனால், இப்போதும் காலம் கடந்து போய்விடவில்லை என்பதை தலைவர் ஹக்கீமும் கட்சியிலுள்ள உறுப்பினர்களும் விளங்கிக் கொள்ள வேண்டும்.
செய்ய வேண்டியது
முக்கியத்துவமிக்க இத் தேசிய மாநாட்டுக்கு நாட்டின் ஜனாதிபதியும் பிரதமரும் வருகின்றனர். முஸ்லிம்களின் எல்லாப் பிரச்சினைகளும் இன்னும் தீர்க்கப்படாத நிலையிலேயே இம் மாநாடு இடம்பெறுகின்றது. எனவே முஸ்லிம்களின் அபிலாஷைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பமாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் உறுப்பினர்களும் இம் மாநாட்டை பயன்படுத்த வேண்டும். தங்களிடமுள்ள குறைகளை பூசிமொழுகுவதற்காகவும் மு.கா. தலைமையின் செல்வாக்கை காட்டுவதற்காகவுமான ஒரு நிகழ்வாக இது அமையக் கூடாது. இசை நிகழ்ச்சிகளுக்கு சல்மான்கானை கூட்டி வந்து ‘கலர்ஸ்’ காட்டுவது போல, ஒரு பரபரப்புக்காக ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பங்குபற்றுதலை ஆக்கிவிடவும் கூடாது. அதைக் கொண்டு எதையாவது சாதிக்க வேண்டும்.
இதேவேளை, மக்கள் இது குறித்து ஆழமாக சிந்திக்க வேண்டும். மீண்டுமொரு தடவை மக்களை ஏமாற்றும் முயற்சியை ஹக்கீம் மேற்கொள்கின்றாரா என்று பரிசீலித்துப் பார்க்க வேண்டும். இது ஹக்கீமின் கட்சியோ அன்றேல் வேறு தனிநபர்களின் மாமன் வீட்டு சீதனமோ அல்ல. இது மக்களாகிய உங்களின் கட்சி. எனவே, இந்த மாநாடு உங்களுக்கானது. இதில் பங்குபற்றுவதன் மூலம் மக்கள் தமது பலத்தை வெளிப்படுத்தலாம். அவ்வாறு மக்களின் பங்குபற்றுதலை எதிர்பார்க்கும் தலைமையானது, தான் விட்ட தவறுகளுக்கு மன்னிப்புக்கோர வேண்டும், பிராயச்சித்தம் தேட வேண்டும்.
புதிய தேர்தல் முறைமை நடைமுறைக்கு வரவுள்ளது. புதிய அரசியலமைப்பு நாட்டை ஆளப் போகின்றது. எனவே, இன்னுமின்னும் பிழை செய்து கொண்டிருந்தால் மக்கள் தமது பதிலடியான சதுரங்கத்ததை ஆரம்பிப்பார்கள் என்பதை சாணக்கியவாதிகள் புரிந்து கொள்வது நல்லது. எனவே கட்சியின் அதிருப்தியாளர்களுக்கு பாடம்படிப்பிக்கும் ஒரு சடங்காக இந்த மாநாட்டை கையாளமல், முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் ஒரு மேடையாக பயன்படுத்த வேண்டும்.
புதிய அரசியலமைப்பில் முஸ்லிம்களின் வகிபாகம், தீhவுத்திட்டத்தில் முஸ்லிம்களின் பங்கு, வடக்கு கிழக்கு இணைப்பு பற்றிய முஸ்லிம் மக்களின் நிலைப்பாடு:, காணிப் பிரச்சினைகள் போன்ற பல்வேறு விடயங்களின் காத்திரமான கோரிக்கைகளை மு.கா. முன்வைக்க முடியும். அதிலும் குறிப்பாக, நிலத்தொடர்பற்ற முஸ்லிம் தனி மாகாணத்திற்கான கோரிக்கையை (துணிவிருந்தால்) மு.கா. தலைவர் ஹக்கீம் முன்வைக்க வேண்டும். இதனை முஸ்லிம் அலகாக அல்லது கரையோர மாவட்டமாக சுருக்கிக் கொள்ளக் கூடாது. வெறுமனே நாம் அதைச் செய்தோம் இதைச் செய்தோம் என்று கதையளந்து கொண்டிருக்காமல் சாத்தியமான, உயர்ந்த பட்ச கோரிக்கைகளை இந்த மாநாட்டில் முன்வைக்க வேண்டும். பேச்சில் இருக்கின்ற ஆக்ரோஷத்தை செயலிலும் காட்ட வேண்டும் என்றே போராளிகள் எதிர்பாhக்கின்றனர்.
‘எந்தவொரு சமூகமும் தாமாக முயற்சி செய்யாத வரைககும் அந்த சமூகத்தின் தலைவிதியை மாற்றியமைக்க முடியாது’ என்ற புனித குர்ஆன் வசனத்தை பெருந்தலைவர் அஷ்ரஃப் ஒருமுறை பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்;. அதுபோல, ஒரு மெழுகுதிரியைக் கூட ஏற்றி வைக்காமல் இருட்டில் சும்மா இருந்து கொண்டு, ஆயிரம் விளக்குடன் ஆதவன் எழுந்து வந்தான் என்ற எழுச்சிப் பாடலை திரும்ப திரும்ப ஒலிக்கவிடுவதால் மாத்திரம் சமூகத்திற்கு விடிவுகாலம் பிறக்கப் போவதில்லை.