அஷ்ரப் பிறந்த மண்ணிலிருந்து ஹக்கீமுக்கு ஒரு மடல்!!!
கௌரவ அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள்,
முஸ்லிம் காங்கிரஸ் தேசியத்தலைவர்,
தாருஸ்ஸலாம்,
கொழும்பு – 02
சேர்,
நான் சம்மாந்துறையை பிறப்பிடமாகக் கொண்டவன். எனக்கு வயது 62 ஆகின்றது. மர்ஹூம் அஷ்ரப்பின் காலத்திலிருந்தே தீவிர மு கா ஆதரவாளனாக இருந்தவன். தலைவர் அஷ்ரப் இந்தக் கட்சியை கிழக்கின் சந்து பொந்துகளுக்குள் சென்று எவ்வாறு வளர்த்தார் என்பதை ஓரளவு அறிவேன். நான் தற்போது கட்சியரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கின்ற போதும் முஸ்லிம் காங்கிரஸின் மீது கொண்ட பற்றுதலினால் உங்களுக்கு சில விடயங்களை தெரிவிக்க விரும்புகின்றேன்.
தலைவர் அவர்களே,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாடு வருகின்ற 19ஆம் திகதி பாலமுனையில் நடைபெறுவதாக பத்திரிகைகளில் படித்தேன். சந்தோஷம். நீங்கள் தலைவராக வந்த பின்னர் கொழும்பிலும் ஏனைய சில இடங்களிலும் மூடிய அறைகளுக்குள்ளே மு கா மாநாடுகளை நடத்தி வந்தீர்கள். இப்போது பாலமுனையில் பகிரங்க வெளியில் மாநாடொன்றை நடத்த தடல் புடலான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறீர்கள்.
உங்கள் கட்சியின் அனைத்து எந்திரங்களையும் இதற்காக முடுக்கிவிட்டுள்ளீர்கள். மைத்திரியயையும் ரணிலையும் சம்பந்தனையும் கொண்டுவந்து முஸ்லிம் மக்களுக்கு ஏய்ப்புக்காட்டப் போகின்றீர்கள்.
சாய்ந்தமருது பிரதேச சபைப் பிரச்சினை, அட்டாளைச்சேனை தேசியப் பட்டியல் விவகாரங்களால் வெறுப்புக் கொண்டுள்ள முஸ்லிம் காங்கிரஸ் அதிருப்தியாளர்களுக்கு ஜனாதிபதியும் பிரதமரும் மு காவுடனேயே இருக்கின்றனர் என்ற படத்தைக் காட்டி அவர்களுக்கு மறைமுக எச்சரிக்கை ஒன்றையும் விடுக்கப்பார்க்கின்றீர்கள்.
சரியோ பிழையோ ரிஷாட்டின் எழுச்சி உங்களை வெகுவாகப் பாதித்திருக்கின்றது. முஸ்லிம் காங்கிரஸ் கோட்டைக்குள் புகுந்து 33000 வாக்குகளைப் பெறுவது என்பது இலேசான காரியமல்ல என்பது அரசியல் சாணக்கியம் உள்ள உங்களுக்கு புரியாத ஒன்றல்ல.
மர்ஹூம் அஷ்ரப் கிழக்கிலே பல தேசிய மாநாடுகளை நடாத்தி வெற்றி கண்டவர். கட்சியின் இரண்டாவது இடத்திலும் செயலாளர் நாயகமுமாக இருந்த உங்களுக்கு அது நன்கு தெரியும். அவர் கிழக்கிலே மாநாட்டை நடாத்திய போது ஏதோ ஒர் இலக்கை நோக்கி நகர்ந்தார். அல்லது அவரது இலட்சியம் வெற்றி பெற்றதை அறிவிப்பதற்காக மாநாட்டைக் கூட்டினார்.
கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் (1996) மு கா மாநாட்டை நாடாத்தி தென்கிழக்கு பல்கலைக்கழகம் உருவாக்கிய தனது சாதனையை வெளிப்படுத்தினார். அட்டாளைச்சேனை மாநாட்டில் ஒலுவில் துறைமுகம், வெளிச்சவீடு என்பவற்றை கொண்டு வந்து மக்கள் பயன்பெற உழைத்ததை அறிவித்தார்.
அக்காலத்தில் சூடுபிடித்திருந்த தீகவாபி எல்லையுடன் சம்பந்தப்பட்ட பொன்னன்வெளி கிராமம் மீட்கப்பட்ட சாதனையை சம்மாந்துறை மாநாட்டில் வெளிப்படுத்தினார்.
இதுதான் தலைவரின் ஸ்டைல்…
தலைவர் அவர்களே,
நீங்கள் பாலமுனை மாநாட்டில் எந்தச் சாதனையை வெளிபடுத்தப்போகிறீர்கள். தேர்தல் காலத்தில் ரணிலைக்கொண்டு வந்து கல்முனைக் கூட்டத்தில் ”சாய்ந்தமருது பிரதேச சபையை உருவாக்கித்தருவேன்” என்று ரணிலின் வாயால் சொல்லவைத்தீர்களே, நீங்கள் அதனை நிறைவேற்றப் பாடுபட்டீர்களா?
கண்டி பேராளர் மாநாட்டில் சாய்ந்தமருது மக்களுக்கு வழங்கிய “டெட்லைன்” என்னவாயிற்று?
கரையோர மாவட்டம் என்று தேர்தலுக்கு தேர்தல் உங்கள் கட்சிக்காரர்கள் உச்சாடனம் செய்து மேடைகளில் கூவித்திரியும் அந்த நிர்வாக மாவட்டத்தை பெற்றுக்கொடுத்து சாதனையை எட்டிவிட்டீர்களா?
அம்பாறை மாவட்டத்தில் பல தடவை பொதுத்தேர்தலில் நீங்கள் போட்டியிட்ட போது முஸ்லிம் காங்கிரஸ்காரர்கள் தமது தலைவருக்கு வாக்குகளை அள்ளி அள்ளி வழங்கினார்களே அவர்களுக்கு உருப்படியாக உங்கள் பெயரைச் சொல்லக்கூடிய எதையாவது இற்றைவரை செய்துள்ளீர்களா?
அக்கரைப்பற்றில் அதாவுல்லா கட்டிக்கொடுத்த நீச்சல் தடாகத்தை நாட்டுத்தலைவரைக் கொண்டு நீங்கள் திறந்து வைக்க ஏற்பாடு செய்துள்ளீர்களே, இது வெட்காமாயில்லையா?
பாலமுனையில் கோலாகலமாக மாநாட்டை நடத்த தடல் புடல் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. கேவலம் பக்கத்துக் கிராமமான ஒலுவிலில் துறைமுக நிர்மாணத்திற்கென அரசாங்கம் சுவீகரித்த மக்களின் காணிகளுக்கு நஷ்ட ஈடு இன்னுமே வழங்கப்படவில்லை. மாற்றுக்காணி கொடுக்காமல் அந்த மக்கள் பரிதவிக்கின்றனர்.
இந்த இலட்சணத்தில் பாலமுனையில் தேசிய மாநாடா?
தேர்தல் காலத்தில் அட்டாளைச்சேனைக்கு வந்து தேசியப்பட்டியலில் ஊருக்கு எம் பி தருவதாக நீங்கள் கூறிய போது அந்த மக்கள் குதூகலித்து அன்றைய தினமே ஆடறுத்து புரியாணியாக்கி அதனைக் கொண்டாடினார்களே, இந்த வாக்குறுதி, என்னவாயிற்று தலைவரே?
அட்டாளைச்சேனையானுக்கும் சாய்ந்தமருதுவானுக்கும் ஒலுவில்காரருக்கும் சூடுசொரணையிருந்தால் இந்த மாநாட்டுப் பக்கம் அவர்கள் நினைத்தும் பார்க்கக் கூடாது.
அதுமட்டுமல்ல உங்கள் கட்சியின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத், செயலாளர் நாயகம் ஹசனலி ஆகியோர் தமக்குச் செய்த துரோகங்களை தமக்குச் செய்த துரோகங்களை ஒருகணம் நினைத்துப் பார்த்தால் மாநாட்டு மேடையில் மாலைகளுடன் வெட்கமில்லாமல் உங்களுக்குப் பக்கத்தில் குந்தமாட்டார்கள்.
தலைவர் அவர்களே இந்த மாநாட்டில் உங்கள் வாய்ச்சவடால்களை நாங்களும் பார்க்கத்தானே போகின்றோம். 19ஆம் திகதிவரை பொறுத்திருக்கிறோம்.
இங்கணம்
கட்சியின் தொண்டன்
கே அப்துல்காதர்