பாகிஸ்தான் வீரர்களின் இந்தியப் பயணத்துக்கு திடீர் தடை!

 

ICC-T20-World-Cup-2016-schedule

ஆறாவது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நேற்று தொடங்கியது. இந்த தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் இமாச்சலபிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. 

இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியை தர்மசாலாவில் நடத்தக்கூடாது என்று இமாச்சலபிரதேச முதல்-மந்திரி வீரபத்ரசிங் எதிர்ப்பு தெரிவித்தார். 

‘பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களின் நினைவிடம் தர்மசாலா மைதானம் அருகில் உள்ளது. இங்கு பாகிஸ்தான் அணியின் ஆட்டத்தை நடத்துவது ராணுவ வீரர்களின் குடும்பத்தினரின் மனதை புண்படுத்தும் செயலாகும்’ என்று கருத்து தெரிவித்த அவர், இந்த போட்டிக்கு மாநில அரசால் பாதுகாப்பு அளிக்க இயலாது என்றும் அறிவித்தார். 

இதனையடுத்து, இந்தியாவில் விளையாடும் தங்கள் அணிக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்கப்படும் என்று மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. 

இந்திய கிரிக்கெட் வாரியத்தை பொருத்தமட்டில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்க தயார் என்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பாகிஸ்தான் அணி கவலைப்பட தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இருப்பினும், பாகிஸ்தானை சேர்ந்த பாதுகாப்புத்துறை குழுவினர் இந்தியா வந்துள்ளனர். இந்தக் குழுவினர் தர்மசாலாவில் நடைபெறவுள்ள மைதானத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.

இந்நிலையில், இன்று (புதன்கிழமை) பிற்பகல் லாகூரில் இருந்து புறப்பட்டு இந்தியாவுக்கு வரவிருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியினரின் பயணம் திடீரென நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

தங்கள் நாட்டு வீரர்களுக்கு இந்தியாவில் அளிக்கப்படவுள்ள பாதுகாப்பு தொடர்பாக திருப்திகரமான தகவல் கிடைக்காததால் வீரர்களின் இந்தியப் பயணம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகளுடன் இங்குள்ள கீழ்நிலை அதிகாரிகளே இதுவரை சந்தித்து பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக பேசியுள்ளனர். விளையாட்டின்போது பாகிஸ்தான் வீரர்களுக்கு எதிராக இங்குள்ள ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டால் நிலைமையை எப்படி சமாளிப்பது? என்பது தொடர்பாக இந்திய அதிகாரிகள் அளித்த விளக்கம் திருப்திகரமாக இல்லை. 

மேலும், இந்தியா-பாகிஸ்தான் போட்டியை காண பாகிஸ்தானில் இருந்து செல்லும் ரசிகர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு குறித்து சரியான திட்டம் தெரிவிக்கப்படவில்லை. எனவே, இன்று இந்தியாவுக்கு செல்வதாக இருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் பயணம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஷாஹர்யார் கான் தெரிவித்துள்ளார். 

பாகிஸ்தான் வீரர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதிசெய்வதற்காக இந்தியாவுக்கு சென்றிருக்கும் எங்கள் நாட்டு பாதுகாப்பு குழுவினர் அளிக்கும் தகவல்களின் அடிப்படையில் எங்கள் நாட்டு உள்துறை மந்திரி சவுத்ரி நிசார் அலி கான் ஆய்வு செய்வார். 

பின்னர், எங்கள் நாட்டு வீரர்கள் இந்தியாவுக்கு சென்று விளையாடுவது தொடர்பான அடுத்தகட்ட திட்டத்தையும், பாகிஸ்தான் வீரர்கள் இங்கிருந்து எப்போது புறப்பட வேண்டும்? என்பது தொடர்பாகவும் உள்துறை மந்திரி எங்களுக்கு தெரிவிப்பார். அதன் அடிப்படையில், பாகிஸ்தான் வீரர்களின் பயணதிட்டம் அமையும் என ஷாஹர்யார் கான் குறிப்பிட்டுள்ளார்.