கடைசி கட்டத்தில் சிறப்பாக பந்து வீச திறமையானவர்கள் கிடைத்திருப்பதால் நிம்மதியடைந்துள்ளேன்: டோனி

images

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் வருகிற 15-ந்தேதி நியூசிலாந்தை சந்திக்கிறது. முன்னதாக இந்திய அணி, வெஸ்ட் இண்டீசுடன் நாளை (வியாழக்கிழமை) பயிற்சி ஆட்டத்தில் மோதுகிறது. நாளை இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த பயிற்சி ஆட்டம் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.

இதையொட்டி இந்திய கேப்டன் டோனி நேற்று கொல்கத்தாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

‘இறுதிக்கட்ட ஓவர்களில் துல்லியமாக பந்து வீசி ரன்களை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். இது தான் இந்திய அணிக்கு அண்மை காலமாக பிரச்சினையாக இருந்தது. ஆனால் ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்ட்யா மற்றும் நெஹரா (மறுபிரவேசம்) ஆகியோரின் வருகைக்கு பிறகு இந்த கவலையில் இருந்து விடுபட்டு மிகப்பெரிய நிம்மதியடைந்துள்ளேன். இவர்கள் கடைசி கட்டத்தில் அபாரமாக பந்து வீசுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

கடந்த சில ஆண்டுகளை எடுத்துக் கொண்டால், ஆட்டத்தில் ஒவ்வொரு பவுலர்களும் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை பார்த்து 15-16-வது ஓவர்களுக்கு பிறகு தான் கடைசி கட்ட ஓவர்களை வீச யாரை பயன்படுத்துவது என்ற முடிவுக்கு வருவேன். ஆனால் இப்போது நாங்கள் பீல்டிங்கில் இறங்கி, முதல் ஓவரிலேயே கடைசி கட்டத்தில் பந்து வீசுவது யார் என்பது எனக்கு தெரிந்து விடுகிறது. இதனால் எனது பணி மிக மிக எளிதாகி விட்டது. முன்பு போல் கடைசி கட்டத்தில் யாரை பந்து வீச அழைப்பது என்பதற்கு அதிகமான நேரத்தை செலவழிக்க வேண்டியதில்லை.

ஆஸ்திரேலியாவில் 20 ஓவர் தொடரை கைப்பற்றினோம். இலங்கைக்கு எதிரான தொடரை வென்றோம். அதன் தொடர்ச்சியாக ஆசிய கோப்பை போட்டியிலும் வாகை சூடினோம். 20 ஓவர் உலக கோப்பைக்கு சரியான திசையில் பயணிப்பதை எதிர்நோக்கி இருக்கிறோம். ஒவ்வொரு ஆட்டமாக கவனம் செலுத்துவோம். ஆனால் உடல்தகுதி கவலைக்குரிய அம்சமாக இருக்கும். உடல்தகுதி பிரச்சினையால் ஏதாவது ஒரு வீரரை இழக்க வேண்டி இருக்கலாம். காயம் தொந்தரவு வராவிட்டால் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம்.

இந்த உலக கோப்பையில் எல்லா அணிக்கும் வெற்றி வாய்ப்பு உள்ளது. நாங்கள் முழு திறமையை வெளிப்படுத்தி, வியூகங்களை கச்சிதமாக செயல்படுத்தினால் அதன் பிறகு எங்களுக்கு கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளது.

இவ்வாறு டோனி கூறினார்.

வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் டேரன் சேமி அளித்த பேட்டியில், ‘2012-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையை வென்ற போது அணியில் ஆல்-ரவுண்டர் பொல்லார்ட்டும், சுனில் நரினும் முக்கிய வீரர்களாக இடம் பெற்றிருந்தனர். தற்போது அவர்கள் அணியில் இல்லை. நிச்சயம் அவர்களது இடத்தை நிரப்புவது கடினம் தான். ஆனாலும் நாங்கள் சிறந்த அணியாகவே இருக்கிறோம். பொல்லார்ட்டுக்கு பதிலாக கார்லஸ் பிராத்வெய்ட் இடம் பிடித்துள்ளார். இவர் துடிப்பு மிக்க ஆல்-ரவுண்டர். இந்த உலக கோப்பையில் அவர் முக்கிய பங்கு வகிப்பார் என்று நம்புகிறேன். சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரினுக்கு பதிலாக ஆஷ்லே நர்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். சுழற்பந்து வீச்சுடன், பேட்டிங் திறமைக்காக இவர் அழைக்கப்பட்டுள்ளார்.

உலக கோப்பை போட்டியையொட்டி ஒரு கார காலம் துபாயில் பயிற்சி மேற்கொண்டோம். முழு உத்வேகத்துடன் பயிற்சியில் ஈடுபட்டோம். இந்தியாவில் நடக்கும் இந்த உலக கோப்பையை வெல்ல முடியும் என்று நம்புகிறோம். எங்கள் அணியில் உள்ள பெரும்பாலான வீரர்களுக்கு இந்தியாவில் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவம் உண்டு. இது நல்ல அறிகுறியாகும். இங்குள்ள சீதோஷ்ண நிலை எங்களுக்கு பழக்கப்பட்ட ஒன்று தான். அதற்கு ஏற்ப உடனடியாக எங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்’ என்றார்.