விசேட நீதிமன்றமொன்றை அமைப்பது தொடர்பில் அமைச்சர் மங்கள புலம்பெயர் தமிழர் அமைப்புக்களுடன் தீவிர கலந்துரையாடல்!

mangala samaraweera
இறுதிப்போரின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு விசேட நீதிமன்றமொன்றை அமைப்பது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர புலம்பெயர் தமிழர் அமைப்புக்களுடன் தீவிர கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளார்.

இதற்காக அமைச்சர் நீண்ட நாட்களாக அமெரிக்காவில் தங்கியிருந்துள்ளார்.

இலங்கையின் நல்லிணக்கச் செயற்பாடுகள் குறித்து நேரில் விளக்கமளிப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள அவர், அந்தப் பணிகளை முடித்துக்கொண்டு தற்போது ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களுடன் சந்திப்பில் ஈடுபட்டுள்ளார் என அங்கிருந்து கிடைத்த செய்திகள் தெரிவித்தன.

போர்க்குற்ற மீறல்களை விசாரிக்க விசேட நீதிமன்றை அமைப்பது தொடர்பில் அவர் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களுக்கு விளக்கமளித்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.

அரசினால் அமைக்கப்படவுள்ள விசேட நீதிமன்றில் உள்நாட்டு நீதிபதிகள் நியமிக்கப்படுவதுடன் அவர்களுக்கான ஆலோசனைகள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை ஐ.நா மற்றும் பொதுநலவாய நாடுகளின் சட்டவாளர்களிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

குறித்த செயன்முறை, ஐ.நா மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக, நியமிக்கப்பட்ட ஆலோசனைச் செயலணியின் அறிக்கை கிடைத்தவுடன் ஆரம்பிக்கப்படுமென புலம்பெயர் தமிழர் அமைப்புகளிடம் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

அத்துடன், நல்லிணக்கச் செயன்முறைகள் தொடர்பில் தொழில்நுட்ப ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள குழுவொன்றைத் தென்னாபிரிக்காவுக்கு அனுப்ப அரசாங்கம் தீர்மானித்துள்ளமை, இலங்கையில் நல்லிணக்கம் தொடர்பாக, தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பு மற்றும் தமிழ் புலம்பெயர் அமைப்புக்களுடன் கடந்த மூன்று மாதங்களாக இடம்பெற்ற கலந்துரையாடல்களை அடுத்தே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

நல்லிணக்கச் செயன்முறைகள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தமிழ் புலம்பெயர் அமைப்புக்களின் முக்கியஸ்தர்களுடன் வோஷிங்டன் நகரில் கலந்துரையாடல்கள் மேற்கொண்டார். 

அதன்பின்னர் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று அங்குள்ள புலம்பெயர் தமிழர் அமைப்புகளுடனும் அவர் இது குறித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது, நல்லிணக்கச் செயற்பாடுகளில் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் ஆலோசனைகளை இலங்கை அரசு வரவேற்பதாக குறிப்பிட்டுள்ள வெளிவிவகார அமைச்சர், புதிய அரசமைப்பு உருவாக்கத்திலும் அவர்களின் கருத்துக்கள் உள்வாங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.