அரசியல் ரீதியாக எதிரியாக உள்ள குழு, சம்பிக்க ரணவக்க மீது பொய் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றது !

champika_Ranawaka
நாடாளுமன்ற வீதியில் அண்மையில் நடந்த விபத்து தொடர்பில் ஜாதிக ஹெல உறுமயவுடன் அரசியல் ரீதியாக எதிரியாக உள்ள குழு, அமைச்சர் சம்பிக்க ரணவக்க குறித்து பொய் பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாக அந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் நிஷாந்த வர்ணசிங்க தெரிவித்துள்ளார். 

கொழும்பில் உள்ள ஜாதிக ஹெல உறுமயவின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

விபத்து குறித்த விசாரணைகளில் நாங்கள் தலையிட மாட்டோம். விசாரணைகளை சுயாதீனமாக மேற்கொள்ள இடமளிப்போம்.

சம்பவம் நடந்து 9 நாட்கள் கடந்துள்ளன. அரசியல் அழுத்தங்கள் இன்றி விசாரணைகளை சுயாதீனமாக நடத்த இடமளிக்க வேண்டும் என்பதால், அமைச்சர் சம்பிக்க அறிக்கை ஒன்றை கூட வெளியிடாது இருந்தார்.

அரசியல் ரீதியாக எம்முடன் விரோதமாக இருக்கும் குழு தற்போது அமைச்சர் சம்பிக்க ரணவக்கவை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. டிரான் அலஸின் மாளிகையில் இருந்து கொண்டே எமது எதிரிகள் அமைச்சர் சம்பிக்கவுக்கு எதிராக வழக்கு விசாரணைகளையும் நடத்தி வருகின்றனர்.

ராடா நிறுவனம் தொடர்பாக டிரான் அலஸூக்கு எதிராக நான் பொலிஸில் முறைப்பாடு செய்ததன் காரணமாக அரசியல் ரீதியாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். தனிப்பட்ட கோபமும் அரசியல் பிரச்சினையும் காரணமாகவே இவர்கள் என் மீதும் அமைச்சர் சம்பிக்க மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர் என்றார்.