சம்மாந்துறையின் மானம் காத்த ஆடைத் தொழிற்சாலை !

slmc rauff hakeem mansoor

 

சம்மாந்துறையின் சீரிய கலாச்சாரத்திற்கு மிகவும் சவாலாக அமைந்த ஒரு விடயம் தான் சில ஆடைத் தொழிற்சாலைகளுக்கு சம்மாந்துறையின் இளம் குமருகள் பஸ் பஸ்ஸாய் சென்றமையாகும்.பலர் பஸ்ஸிலும் அப்படியே பயணித்துவிட்டதான அசிங்கக் கதைகளும் உள்ளன.காலையில் எழுந்து வீதிகளுக்கு சென்றால் இளம் குமருகள் வீதியோரம் முழுவதும் குமிந்து நிற்பார்கள்.இதற்கு எப்போது? யாரால்? முற்றுப்புள்ளி வைக்கப்படுமென சம்மாந்துறையில் பிறந்த ஒவ்வொரு மகனும் அங்கலாய்ப்போடு தான் இருந்தான்.இதனை நான் பலரினது வாய்களில் இருந்து நேரடியாக செவியுற்றுள்ளேன் (இதன் மூலம் ஏற்படும் கலாச்சாரச் சீர் கேடுகளை வெளிப்படையாக கூற முடியாது).இதனை எந்த சம்மாந்துறை மகனும் மறுத்துரைக்க மாட்டான் என உறுதியாக நம்புகிறேன்.இதனை வைத்தே தயா கமகேயும் முஸ்லிம்களின் வாக்குகளை சூரையாடியும் வருகிறார்.இதற்கு முற்றுப் புள்ளி வைக்க சம்மாந்துறையில் ஆடைத் தொழிற் சாலை ஒன்றிற்கான முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வரும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம் மன்சூர் அவர்களை கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் பாராட்டியே ஆக வேண்டும்.

இதற்கான அடிக்கல் வைக்கும் நிகழ்வு கடந்த வியாழக்கிழமை 3ம் திகதி அமைச்சர் ஹக்கீமின் தலைமையில் நடந்தேறியது.இவ் ஆடைத் தொழிற்சாலையின் முதலீடுகள் அனைத்தும் இலங்கையின் பிரபல ஆடை வர்த்தக நிலையமான hameedias நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிட்டு மு.காவின் சேவைகளை மறைத்துக்கொள்ள கட்சி வெறி பிடித்த சிலர் முயற்சிக்கின்றனர்.முஸ்லிம் பெண்களின் கற்பை விட கட்சி வெறிதான் இவர்களுக்கு பெரிதாக விளங்குவது வேதனைக்குரிய விடயமாகும்.இவ்வாறான விமர்சனங்கள் எழுவது குறித்த நன் நோக்கோடு சேவை செய்யத் துணியும் அரசியல் வாதிகளை சோர்வடையச் செய்து விடலாம்.முதலமைச்சரின் கீழ் இயங்கும் கிழக்கு மாகாண கைத் தொழில் திணைக்களத்தினால் இதற்கான ஆரம்பச் செலவாக 10 மில்லியன் ரூபாயும் 40 மில்லியன் ரூபாய் ஏனைய செலவுகளுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.ஏன் ஒரு தனியார் நிறுவனத்திற்கு கிழக்கு மாகாண சபை நிதி ஒதுக்க வேண்டும் எனச் சிந்தித்தாலே இதில் பொதிந்துள்ள உண்மையை புரிந்து கொள்ளலாம்.

கிழக்கில் உள் நாட்டு முதலீட்டாளர்களை ஊக்குவித்தல்,கிழக்கில் வேலை வாய்ப்புக்களை அதிகரித்தல் ஆகிய இரண்டு பிரதான காரணங்களை மையப்படுத்தியே இவ் ஆடைத் தொழிற்சாலை கிழக்கு மாகாண சபையின் உதவியுடன் நிறுவப்படவுள்ளது.இதனை அரசாங்க தனியார் கூட்டு என வர்ணிப்பதே பொருத்தமானது.வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களை ஒரு நாடு தனது நாட்டினுள் முதலிடச் செய்து தனது நாட்டில் தொழில் வாய்ப்புக்களை அதிகரிப்பது போன்றே உள் நாட்டு முதலீட்டாளரான  hameedias நிறுவனத்தை சம்மாந்துறையில் முதலிடச் செய்து தொழில் வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.சம்மாந்துறையில் hameedias நிறுவனம் காலூன்றுவதன் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம் மன்சூர் எது வித இலாபங்களையும் சுவைக்க முடியாது.ஒரு தொழிற்சாலையை ஒரு குறித்த நிறுவனம் அவ்வளவு இலகுவில் நிறுவி விடாது.பல ஏற்பாடுகளை,அனுமதிகளை பெற வேண்டும்.இவற்றை எல்லாம் செய்தே hameedias நிறுவனத்தை பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம் மன்சூர் அவர்கள் சம்மாந்துறைக்கு கொண்டு சேர்த்துள்ளார்.இதனை மனதாறப் பாராட்டி பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம் மன்சூரை மேலும் ஊக்கப்படுத்துவது எமது தலையாய கடமை.இதனை காழ்ப்புணர்ச்சி கொண்டு விமர்ச்சிக்காது உங்களது கட்சி மூலம் இதற்கு ஏட்டிக்கு போட்டியாக சேவைகளை தொடர்ந்து மக்கள் மனங்களை வெல்ல முயற்சி செய்யுங்கள்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்

சம்மாந்துறை.