ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்
நிந்தவூர் அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தரக் கல்லூரியில் 3 மாடிக் கட்டிடத்தொகுதிக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று இடம்பெற்றது.
ஐக்கிய அமெரிக்க தூதரகத்தின் சிவில் இராணுவ ஆதரவுக்குழுவினரின் மனிதாபிமான உதவி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ‘பசுபிக் கொமாண்ட் நிறுவனத்தின்’ நிதியுதவியோடு சகல வசதிகளும் கொண்டதாக இக்கட்டிடத் தொகுதி அமைக்கப்படவிருக்கிறது.
கல்லூரி அதிபர் என்.யூ.ஹானியா சித்தீக் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, அடிக்கல்லை நாட்டி வைத்தார்.
மேலும் இநநிகழ்வில் மாகாண சபை உறுப்பினர் கே.எம்.ஜவாத், ஐக்கிய அமெரிக்க தூதரகத்தின் உதவிப் பணிப்பாளர் ஹமண்ட் டெமிட் றியட், ஐக்கிய அமெரிக்க தூதரகத்தின் பொறியியலாளர் குழுத் தலைவர் லெரின் பைப், ஐக்கிய அமெரிக்க தூதரகத்தின் நிகழ்ச்சித் திட்ட அதிகாரிகளான கெப்டன் மே கைல், மைக்மெக்லன், வுட்லிவை, வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல், கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எல்.எம்.சலீம், பாடசாலை அதிபர்கள், பாடசாலை அபிவிருத்திச் சபையினர் எனப் பெருந் தொகையானோர் பங்கு கொண்டனர்.
சுமார் 70 இலட்சம் பெறுமதியான நிதியில் இது கட்டப்படவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இறுதியில் அதிதிகள் அனைவரும் பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டனர்.
இங்கு கருத்துத் தெரிவித்த முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட்:- ‘நமது மாகாண சபைக்குரிய அதிகாரங்கள் ஆழுனரின் தலையீடுகள் இல்லாமல் முழுமையாக எம்மிடம் ஒப்படைக்கப்படுமாக இருந்தால் எண்ணிலடங்காச் சேவைகளை எம்மால் செய்ய முடியும். நமது கல்விப் பிரச்சினைகளை ஒரே நாளில் செய்து முடிக்கலாம். இது போன்று எத்தனையோ விடயங்களைக் குறிப்பிடலாம்’ எனத் தெரிவித்தார்.