பாறுக் ஷிஹான்
யாழ் முஸ்லீம்களிற்கான காணிகள் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண செயலணி தற்போது முதலாவது கூட்டத்தை இன்று காலை ஆரம்பித்துள்ளது.
யாழ்ப்பாணம் மன்பஉலும் பாடசாலை மண்டபத்தில் காலை ஆரம்பமாகிய இக்கூட்டம் மௌலவி பி.ஏ.எஸ் சுபியான் தலைமையில் நடைபெறுகின்றது.
இதில் அச்செயலணியில் அங்கத்துவம் வகிக்கும் 10க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இதே வேளை இச்செயலணி கடந்த ஞாயிறு 21.02.2016 பிரதி அமைச்சர் அமீர் அலி முன்னிலையில் யாழ் ஒஸ்மானியாக் கல்லூரி மஹ்மூத் மண்டபத்தில் இச்செயலணி உருவாக்கப்பட்டது.
எனினும் தற்போது நடைபெறுகின்ற கூட்டத்திற்கு செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களிற்கு அனுமதி மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அவ்வூடகவியலாளரிடம் அனைத்து விடயமும் முடிவடைந்த பின்னர் புகைப்படம் அறிக்கைகளை தருவதாக கூட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் கூறியுள்ளார்.
மக்களின் நலனிற்காக அமைக்கப்பட்ட இச்செயலணி தொடர்பாக அறிக்கை இடல் தொடர்பாக மறுக்கப்பட்டமை பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
மேற்படி விடயம் வடமாகாண முஸ்லிம்களின் காணி விவகாரங்கள் தொடர்பான பிரச்சினைகளை தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து தீர்வு காணப்பட வேண்டும் என்ற நோக்கில் கைத்தொழில் வணிக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஆகியோரின் இணை தலைமையில் பாராளுமன்றத்தில் கமிட்டி அறை 2ல் நடைபெற்ற கூட்டத்தில் ஆலோசனைகள் செய்யப்பட்டிருந்தன.அதில் முஸ்லிம் மக்களின் காணிப் பிரச்சினைகளுக்கு இரு தரப்பினரும் இணைந்து தீர்வு காண வேண்டும் என அக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இதனடிப்படையில் வடமாகாண முஸ்லிம்களின் காணிகள் தொடர்பான பிரச்சினைகள் என்ன? என்பதனை களவிஜயம் செய்து ஆராய்ந்து அறிந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக மாவட்ட ரீதியாக அ.இ.ம.காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களை அமைச்சர் ரிசாத் பதியுத்தீன் நியமித்ததுடன் இந் நடவடிக்கைகளை கட்சி அரசியலுக்கு அப்பால் சகலரையும் இணைத்துக் கொண்டு ஒன்றிணைந்து செயற்படுமாறும் வலியுறுத்தி இருந்தார்.இதன் போது யாழில் இச்செயலணியில் 14 பேர் நியமிக்கப்பட்டனர்.
இதற்கமைய யாழ்ப்பாண மாவட்டத்திற்கு பிரதி அமைச்சர் அமீர் அலியை நியமித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.