டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வருகிற 8-ந்தேதி தொடங்குகிறது. இந்தியா, பாகிஸ்தான் அணிகள் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளதால் இரண்டு அணிகளும் லீக் போட்டியில் மோதவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இரு அணிகளுக்கு இடையிலான போட்டி இமாச்சல பிரதேசத்தில் உள்ள தர்மசாலா மைதானத்தில் வருகிற 19-ந்தேதி நடைபெற இருக்கிறது.
போட்டிக்கான டிக்கெட்டுக்கள் மும்முரமாக விற்பனையாகி கொண்டிருக்கும் நிலையில் தர்மசாலாவில் பாகிஸ்தான் அணியை விளையாட எங்களால் அனுமதிக்க முடியாது என்று அம்மாநில முதல் மந்திரி வீரபத்ர சிங் கூறினார். அத்துடன் இந்த போட்டிக்கு பாதுகாப்பு வழங்க இயலாது என்று அறிவித்தார்.
இதனால் பாகிஸ்தான் அணிக்கு சரியாக பாதுகாப்பு வழங்காவிடில் உலகக்கோப்பையை புறக்கணிப்போம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மிரட்டியது. இதற்கு பி.சி.சி.ஐ. தலைவர் ஷசாங் மனோகர் பாகிஸ்தான் அணிக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு வழங்குவோம் என்று உறுதியளித்தார். இருந்தாலும், இந்தியாவின் மத்திய அரசு பாதுகாப்பு குறித்து உறுதியளிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷகாரியார் கான் தெரிவித்தார். இதனால் போட்டி கொல்கத்தாவிற்கு மாற்றப்படலாம் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் தேவைப்பட்டால் இந்தியா- பாகிஸ்தான் போட்டிக்கு மத்திய பாதுகாப்பு படையை அனுப்ப தயாராக இருக்கிறோம் என்று இந்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
இதுகுறித்து ராஜ்நாத் சிங் கூறுகையில் ‘‘இமாச்சல பிரதேச முதல் மந்திரி பாதுகாப்பு படைகள் வேண்டும் என்று கேட்டுக்கொண்டால், நாங்கள் பாதுகாப்பு வழங்குவோம்’’ என்றார்.
இதனால் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டி உச்சக்கட்ட பாதுகாப்பிற்கு மத்தியில் நடைபெற வாய்ப்புள்ளது.