முன்னாள் எதிர்க்கட்சியிலிருந்தவர்கள் அரசியல் கைதிகளுக்காக குரல் எழுப்பிய போதிலும், தற்போது அமைச்சு பதவிகளை ஏற்றதன் பின்னர் அமைதி காத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் கைதிகளை புனர்வாழ்விற்கு அனுப்புவதன் ஊடாக இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை காண முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், அரசியல் கைதிகள் குறித்து அரசாங்கத்தின் உயர் பீடத்தின் கவனத்திற்கு கொண்டு வர தாம் எதிர்பார்த்துள்ளதாகவும், இந்த விடயம் குறித்து தீர்வு எட்டப்படாத பட்சத்தில் பாரிய போராட்டங்களை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களை நாட்டிற்கு அரசாங்கம் அழைத்திருந்த நிலையில், பிரித்தானியாவிலிருந்து வருகை தந்த இலங்கையர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று மதித்து வருகை தந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளமையை ஏற்க முடியாது என ஜனநாயக மக்கள் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது தரப்பினர் பௌத்த சிங்கள வாக்குகளை தம்வசப்படுத்திக் கொள்வதற்காக இனவாத வார்த்தைகளை பேசி வருவதாக பிரபா கணேஷன் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அரசியல் கைதிகளின் பிரச்சினை தொடர்பில் முதல் முதலாக தானும், பிரபா கணேஷனுமே குரல் எழுப்பியதாக ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச 14,000ற்கும் அதிகமானவர்களை விடுதலை செய்துள்ளதாகவும் அவர் நினைவூட்டினார்.
அந்த நிலையில், அரசியல் கைதிகளை விடுதலை செய்வது தவறு என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு கூற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலை புலி அமைப்பிலுள்ள உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் திட்டத்தை ஆரம்பித்தது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச என்பதனால், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு எதிராக அவருக்கு கருத்து தெரிவிக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.