ஸ்ரீ.ல.சு. கட்சியை மறுசீரமைக்க ஆறு பேர் அடங்கிய குழுவொன்று ஜனாதிபதியால் நியமிப்பு !

President-Maithripala-Sirisena5
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மறுசீரமைப்பதற்காவும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை பலப்படுத்துவதற்காகவும் ஆறு பேர் அடங்கிய குழுவொன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார்.

சு.கவின் பொதுச்செயலாளர் துமிந்த திஸாநாயக்க, ஐ.ம.சு.முவின் உப செயலாளர் மஹிந்த அமரவீர, சு.க. பொருளாளர் எஸ்.பி. திஸாநாயக்க, அமைச்சர் சரத் அமுனுகம, இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன ஆகியோர் இந்தக் குழுவில் அங்கத்தவர்களாக இருக்கின்றனர். அத்துடன், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு விரைவில் நியமிக்கப்படவுள்ள புதிய செயலாளரும் குழுவில் உறுப்பினராக இடம்பெறுவார். 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையில் 2005ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் பொதுஜன ஐக்கிய முன்னணி, தேசிய சுதந்திர முன்னணி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, சமசமாஜக் கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம், ஈ.பி.டி.பி., ஜாதிக ஹெல உறுமய ஆகியன பங்காளிக் கட்சிகளாக அங்கம் வகித்தன. எனினும், இதில் தலைவர், பொதுச்செயலாளர் ஆகிய முக்கிய பதவிகள் சு.க. வசமிருந்தன. 

இந்நிலையில், ஜனாதிபதித் தேர்தலின்போது மேற்படி கூட்டணியிலிருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம், ஹெல உறுமய ஆகியன வெளியேறி நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்தன. இதனால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இரண்டாகப் பிளவடைந்தது. 

தற்போது விமல் வீரவன்ஸ, தினேஷ் குணவர்தன, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் சு.க. தலைமைபீடத்துடன் முரண்பட்டு வருவதாலும், புதியதொரு அரசியல் கூட்டணியை உதயமாக்குவதற்குரிய நடவடிக்கையில் இறங்கியுள்ளதாலும் ஐ.ம.சு.முன்னணி கூட்டணிக்குரிய பலமிழந்து காணப்படுகின்றது. 

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை மீளக்கட்டியெழுப்புவதற்காக அறுவரடங்கிய குழுவொன்றை கூட்டணியின் தலைவர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி மைத்திரிபால நியமித்துள்ளார். 

சிறுபான்மை கட்சிகள், சிறு கட்சிகள் ஆகியவற்றுடன் பேச்சு நடத்தி பலமானதொரு கூட்டணியை கட்டியெழுப்புவதே இக்குழுவின் நோக்கமாகும். 

இதன்படி சு.கவுடன் கூட்டணி அமைப்பதற்கு பச்சைக்கொடி காட்டியுள்ள கட்சிகளுடன் இந்தக்குழு பேச்சு நடத்தவுள்ளது. 

நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்ற சு.கவின் மத்திய செயற்குழு கூட்டத்திலும் இது பற்றி கவனம் செலுத்தப்பட்டுள்ளது.