வவுனியா பேயாடிகூழாங்குளத்தில் அமைந்துள்ள பொதுக்காணியை தமது கிராமத்திற்கே திருப்பி தரவேண்டும் இல்லையேல் தற்கொலை செய்வோம் என வட மாகாண சுகாதார மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் ப. சத்தியலிங்கத்திடம் பேயாடிகூழாங்குளம் மக்கள் தெரிவித்தனர்.
வவுனியாவில் அமைந்துள்ள அமைச்சின் அலுவலகத்தில் பேயாடி கூழாங்குளம் காணிப் பிரச்சனை தொடர்பில் அப் பகுதி மக்கள் மற்றும் திருமறைக் கலாமன்றத்தினருடன் அண்மையில் கலந்துரையாடிய போதே இதனைத் தெரிவித்தார்.
வவுனியா, நொச்சிமோட்டை, பேயாடி கூழாங்குளம் பகுதியில் உள்ள பொதுத் தேவைக்கான நிலத்தினை வவுனியா பிரதேச செயலாளர் திருமறைக் கலாமன்றம் என்ற அமைப்புக்கு வழங்கியுள்ளதாகவும் அதனை மீட்டுத் தருமாறு கோரி பேயாடி கூழாங்குளம் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை அண்மையில் நடத்தியிருந்தனர்.
இந் நிலையில் குறித்த காணியில் கட்டட நிர்மாணத்திற்கான ஆரம்ப வேலைகளைச் செய்ய அப் பகுதி மக்கள் தடையாக இருப்பதாக தெரிவித்து திருமறைக் கலாமன்றத்தினரால் பொலிஸ் நிலையத்தில் மக்களுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டது. இதனால் இரு பகுதியினருக்கும் இடையில் முரண்பாடான நிலமை காணப்பட்டது.
இதனையடுத்து இரு பகுதியினரும் இது தொடர்பில் வடமாகாண சுகாதார மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் ப.சத்தியலிங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து இரு பகுதியினரையும் அழைத்து கலந்துரையாடல் ஒன்று அமைச்சின் உப அலுவலகத்தில் இடம்பெற்றது.