முஸ்லிம்களது அரசியல் பேரம் பேசும் சக்தி என்பது என்ன? – அரசியல் அமைப்பு சட்டமாற்றம் – பாகம் 7 !

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்

 

 அரசியல் அமைப்பு சட்டமாற்றம் – பாகம் 7 வை.எல்.எஸ்.ஹமீட்

விகிதாசார தேர்தல்முறை அறிமுகப்படுத்தப்படுகின்ற வரை இலங்கையின் ஆட்சி முறை என்பது சிங்கள மக்கள் சிங்கள மக்களைக் கொண்டு சிங்கள மக்களுக்காக செய்யப்பட்டதாகவே இருந்தது.

 

எதிர்பார்க்கப்படுகின்ற புதிய தேர்தல் திருத்தத்தின் அடிப்படை இலக்கும் அதற்காக கூறப்படுகின்ற காரணமும்.

அன்று சந்திரிக்கா அம்மையார் அரசியல் அமைப்பை மாற்றுவதன் மூலம் சிறுபான்மையில் தங்கியிராமல் ஆட்சியமைக்க கூடிய பலத்தினை ஒரு கட்சிக்கு வழங்கக் கூடிய வகையில் தேர்தல் முறையை மாற்ற எவ்வாறு முற்பட்டாரோ அதே இலக்கில்தான் இன்றைய ஆட்சியாளர்களும் செயற்படுகின்றார்கள். இதற்கு அவர்கள் கூறுகின்ற காரணம் என்னவென்றால், ‘ஜனாதிபதி ஆட்சிமுறை’ நாட்டின் அரசாங்கத்திற்கு ஸ்திரதன்மையைத் தருகின்றது. ஆனால் அளவு கடந்த ஸ்திர தன்மை இறுதியில் சர்வாதிகார ஆட்சிக்கு இட்டுச் செல்வதனால் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியின் பிரகாரம் ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்கப் போகின்றோம். எனவே அவ்வாறு ஒழிக்கப்படுகின்ற பொழுது இந்த நாட்டு அரசாங்கம் எப்பொழுதும் கூட்டரசாங்கமாக (coalition government) இருக்க முடியாது.அவ்வாறான ஆட்சி உறுதிதன்மையுடையதாக இருக்க மாட்டாது. எனவே அவ்வாறான சூழ்நிலையில் நாட்டை அபிவிருத்தி பாதையில் இட்டுச் செல்ல முடியாது. மட்டுமல்லாமல் பலமற்ற அரசாங்கம் மத்தியில் இருக்கும் போது நாடு துண்டாடப் படவும் வாய்ப்பு இருக்கின்றது என்பதாகும்.

இதற்கு நமது பதில்….

 

01- நீங்கள் 50 விகிதத்திற்கு மேல் வாக்குகளைப் பெற்று 50 விகித்த்திற்கு மேல் ஆசனங்களை பெறுவதில் தவறில்லை. ஆனால் 50 விகிதத்திற்கு குறைவாக வாக்குகளைப் பெற்று 50 விகிதத்திற்கு அதிகமான ஆசனங்களை பெற முற்படுவது எந்த விதத்தில் நியாயம்?

02- அவ்வாறு நீங்கள் பெறுகின்ற வாக்குகளுக்கு மேலதிகமாக  பெறுகின்ற ஆசனங்களில் கணிசமானவை சிறுபான்மைகளுக்குரியவை. குறிப்பாக முஸ்லிம்களுக்கும் மலையக தமிழர்களுக்கும் உரியவை. அவ்வாறான ஆசனங்களை அச்சமூகங்களாக வழங்காமல் ஜனநாயக  விரோத தேர்தல் முறையொன்றை அறிமுகப்படுத்தி அபகரிக்க முற்படுவது நியாயமா? அவ்வாறான தேர்தல் மூலம் சிறுபான்மைகளை ஆட்சியின் பங்காளர் நிலையில் இருந்து செயற்கையாக வெளியில் தள்ளுவது நியாயமா?

03- இந்நாடு பல்லின சமூகங்கள் வாழுகின்ற நாடு.  அந்நாட்டில் சகல சமூகங்களையும் ஆட்சியில் பங்காளர்களாக வைத்திருப்பதன் மூலம் நாடு முனேறுமா? அல்லது பின்னடைவினை சந்திக்குமா?

04- சிறுபான்மை சமூகங்களை ஜனநாயக விரோத தேர்தல் முறை மூலம் ஆட்சிக்கு வெளியே கட்டாயமாக தள்ளி வைத்து விட்டு அல்லது விரும்பினால் ஆட்சியின் திண்ணைக்கட்டில் பார்வையாளர்களாக அமரவைத்துவிட்டு நீங்கள் ஆட்சிக்கு உறுதித்தன்மையை ஏற்படுத்தலாம். ஆனால் அது நாட்டின் உறுதித்தன்மையை உத்தரவாதப்படுத்துமா? மாறாக அவ்வாறான ஆட்சி சமூகங்களை மீண்டும் விரக்தி நிலைக்கு தள்ளி நாட்டின் உறுதிதன்மைக்கு உலைவைக்காதா?

(Stability of the government or stability of the country.)

05- எந்த கட்சியிலாயினும்  தமது சமூக விகிதாசாரத்திற்கேற்ப ஆசனங்களை பெற முடியாத பொழுது சமூக அமைதி நாட்டில் நிலைக்குமா?

06- கூட்டாட்சி நாட்டை துண்டாட வழி சமைக்குமானால் சுதந்திர இந்தியாவில் அதிகமான தடைவைகள் கூட்டாட்சிதான் நடைபெற்றிருக்கின்றது. இந்தியா துண்டாப்பட்டிருக்கின்றதா? அல்லது இந்தியா தொடர்ந்தும் பலம்பெற்று வல்லரசாக மாறிகொண்டிருக்கின்றதா?

07- இந்தியா போன்ற பெரிய நாடே  தனியாட்சியை விட கூட்டாட்சியிலேயே மிகவும் பலமான நிலையில் இருக்கும் பொழுது இச்சிறிய நாடான இலங்கை கூட்டாட்சியில் துண்டாடப்படும் என்பது வெறும் கற்பனையா? அல்லது சிறுபான்மைகளை ஆட்சியின் பங்காளர் நிலையில் இருந்து கழட்டிவிடுவதற்கான வலிந்தெடுக்கப்பட்ட வாதமா? என்பனவாகும்.

ஆட்சி என்பது மக்களால் மக்களைக் கொண்டு மக்களுக்காக செய்யப்படுவது எனக் கூறப்படுகின்றது.ஆனால் இலங்கையை பொறுத்தவரையில் விகிதாசார தேர்தல்முறை அறிமுகப்படுத்தப்படுகின்ற வரை யதார்த்தத்தில் இலங்கையின் ஆட்சி முறை என்பது சிங்கள மக்கள் சிங்கள மக்களைக் கொண்டு சிங்கள மக்களுக்காக செய்யப்பட்டதாகவே இருந்தது. அதனாலேயே ஆட்சியாளர்கள் எப்பொழுதும் பெரும்பான்மை சமூகத்தை திருப்திப்படுத்துவதிலே குறியாக இருந்தார்கள்.

திரு எஸ்.டப்ளியூ.ஆர்.டீ.பண்டார நாயக்கா அவர்கள் ஒக்ஸ்போட் பல்கலைகழகத்தில் படித்த ஒருவர். சிங்களத்தை விட ஆங்கிலத்தில் அதிக புலமைத்துவம் வாய்ந்தவர். அவர் ஒரு போதும் இனவாதியாக இருந்திருக்க முடியாது.மட்டுமல்லாமல் அவர் ஒக்ஸ்போட்டிலிருந்து

திரும்பியிருந்த வேளையில் யாழ்பாணத்தில் ஆற்றிய உரையில் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வாக சமஷ்ட்டி ஆட்சியை முன்வைத்தார். ஆனால் அதனை  அன்று தமிழ் தலைமைகள்தான் நிராகரித்தார்கள் என்பது வேறு விடயம்.அவ்வாறு சமஷ்டியை தமிழ் மக்களுக்கு சிபார்சு செய்யக்கூடிய அளவு தாரள மனம் கொண்ட பண்டாரநாயக்கா அவர்கள் ஒரு போதும் இனவாதியாக இருந்திருக்க முடியாது.

yls hameed

 

அவ்வாறான ஒருவர்தான் 1956ம் ஆண்டு ஜூனில்  தனிச் சிங்கள சட்டத்தினை (The Official Language Act) கொண்டு வந்தார்.அதுதான் இந்நாட்டு இனப்பிரச்சனையின் திருப்பு முனையாக அமைந்தது. இதனை  அவர் ஏன் செய்தார்? தமிழ் மக்களின் மீது உள்ள இனவாதப்  பார்வையின் காரணமாகவா?

இதில் மறைந்து கிடக்கின்ற ஒரு விடயம் 1956ம் ஆண்டு தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியும் சிங்கள மொழி தொடர்பாக பண்டார நாயக்காவின் நிலைப்பட்டையே எடுத்திருந்தது என்பதாகும். ஆனாலும் மக்கள் பண்டாரநாயக்காவின் நிலைப்பாடையே உறுதியானதாக நம்பி அவருக்கு வாக்களித்திருந்தார்கள். அத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வி அடைந்ததனால் ஐக்கிய தேசியக் கட்சியின் சிங்கள மொழி தொடர்பான நிலைப்பாடு பெரிதாக சிலாகிக்கப்படவில்லை.

அதே போன்றுதான் அன்று டட்லி-செல்வா ஒப்பந்தத்தினூடாக தமிழர் பிரச்சனைகள் தீர்க்கப்படுவதனை பண்டாரநாயக்க அவர்கள் எதிர்த்தார்கள். இயற்கையில் ஒரு இனவாதியாக இருக்க முடியாது என்று கருதப்பட கூடியவர் ஓர் இனவாதியாக  ஏன் செயற்பட்டார்,என்றால் அன்றைய தேர்தல் முறையின் கீழ் ஆட்சியமைப்பதற்கு சிங்கள சமூகத்தின் வாக்குகள் மட்டும் போதுமானதாக இருந்தது.எனவே சிங்களவ்ர்களின் உணர்வுகளை தூண்டுவதின் மூலம் ஆட்சிக்கு வருவதே அவர்களது உத்தியாக இருந்தது. அதில் பண்டார நாயக்கா வெற்றியும் கண்டார்.

மறு புறத்தில் இந்த நாட்டில் சக சமூகங்களையும் உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்ட  ஐக்கிய தேசியக் கட்சியும் அடுத்த கட்சி இனவாதத்தினை கையில் எடுத்து அரசியல் செய்யும் பொழுது தாமும் அதே இனவாதத்தினை கையில் எடுப்பதை தவிர  வேறு வழியில்லை என்ற நிலைப்பட்டிற்கு தள்ளப்பட்டார்கள். அதனால்தான் 1956ம் ஆண்டு தேர்தலில் பண்டாராநாயக்க தனிச் சிங்கள கோசத்தினை கையில் எடுத்த பொழுது அதே போன்ற கோசத்தினை கையில் எடுப்பதற்க்கு ஐக்கிய தேசியக் கட்சி தள்ளப்பட்டது.

இந்த பின்னணியில்தான் எந்த கட்சி டட்லி- செல்வா ஒப்பந்தத்தினூடாக தமிழர்  பிரச்சனையினை தீர்க்க முற்பட்டதோ அதே ஐக்கிய தேசிய கட்சி பண்டா –செல்வா ஒப்பந்தத்தினூடாக தமிழர் பிரச்சனை தீர்க்கப்பட எத்தனிக்கப்பட்டபோது அதனை எதிர்த்து கண்டிக்கு பாதயாத்திரை சென்றது. சுருங்க கூறின் இந்த நாட்டில் ஐ.தே.க. மற்றும் சி.சு.கட்சி ஆகிய இரு கட்சிகளும் தமிழர்கள் ஓரளவு ஏற்றுக்கொள்ளக்கூடிய அந்தக்காலத்திற்கு ஏற்ற  தீர்வுகளை காண முன்வந்திருந்தன.அதே நேரம் அதே கட்சிகள்தான் தமிழர்களுக்கு தீர்வு காணப்படுவதினையும்  தடுத்தன. இந்த முரண்பாடான நிலைப்பாட்டிற்கு காரணம் என்ன? அதுதான் தொகுதி முறை தேர்தல். சிங்களவர்களை உசுப்பி விட்டால் ஆட்சியை பிடித்து விடலாம். எனவே ஆளும் கட்சி தீர்வு காண விழையும் போது எதிர்க்கட்சி அதனை பெரும்பான்மை சமூகத்திடம் கொண்டு சென்று அதற்கெதிராக  பிரச்சாரம் செய்து பெரும்பான்மை சமூகத்தின் நலனில் அக்காறை கொண்டது எதிர்க்கட்சியே! எனவே அடுத்த தேர்தல் ஆட்சிக்கு வருவதற்கு தகுதியான கட்சி எதிர்க்கட்சியே ! என சிங்கள மக்களிடம் காட்டுவது. அந்த யுக்தியில் இரண்டு கட்சிகளும் அழகாக வெற்றி பெற்றன. ஆனால் நாடுதான் தோற்றுப்போனது.எஞ்சியது 30 வருட யுத்தமும் அதனால் ஏற்பட்ட அழிவுகளும் சேதங்களும் மட்டுமே.

பெரும்பான்மை சமூகத்தினை உசுப்பிவிட்டு ஆட்சியைப்பிடிக்கின்ற யுக்தியில் ஐக்கிய தேசியக் கட்சியும் சிறீலங்கா சுதந்திரக் கட்சியும் கடந்த காலங்களில் வெற்றி பெற்றிருக்கின்றனவே!  அதே யுக்தியை நாமும் ஏன் கைக்கொள்ளக்கூடாது என்றுதான் முன்னாள்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ்சவும் முயற்சித்தார். ஆனால் அன்றைய தேர்தல் முறையும் இன்றைய தேர்தல் முறையும் வேறு என்பதை அவர் புரிந்து கொள்ள வில்லை. அன்றைய தேர்தல் முறையில் 50 விகித வாக்குகள் பெறாமலே ஆட்சியை பிடிக்கலாம். இன்றைய தேர்தல் முறையில் ஜனாதிபதி ஆட்சியானாலும் பொது தேர்தலானாலும் 50 விகித வாக்குகள் இல்லாமல் ஆட்சியமைக்க முடியாது.

 எனவே இந்த பின்னணியில்தான் ஜனாதி முறைமை ஒழிக்கப்பட்டு தேர்தல் முறையும் மாற்றப்பட இருக்கின்றது. இதனுடைய பொருள் சிறுபான்மை சமூகங்கள் அடிமை சமூகங்களாக மாற்றப்பட வேண்டும்; என்பதாகும்.அவர்கள் எதைக்கூறிய போதிலும் கூட.

 அதாவது ஆளுகின்ற சமூகம் ஆளப்படுகின்ற சமூகம் என வர்க்க பேதம் உருவாக்கப்பட போகின்றது.

எனவே சிறுபான்மை சமூகங்கள் தம்மை பாதுகாத்துக் கொள்ள எதைச் செய்யபோகின்றது. கடந்த காலங்களை விடவும் இனவாதம் மோசமான கட்டத்தினை அடைத்திருக்கின்றது. இந்த நிலையில் 50 விகிதத்திற்கு குறைவான வாக்குகளைப் பெற்று 50 விகிதத்திற்கு அதிகமான ஆசனங்களை பெறுகின்ற தேர்தல் முறை ஒன்று வந்தால் ( அது எந்த வகையான தேர்தல் முறையாகவும் இருக்கலாம்.) அது மீண்டும் தேசிய கட்சிகளுக்கு சிங்கள மக்களின் வாக்குகளை மட்டும் கொண்டு ஆட்சி அமைக்கின்ற ஒரு சூழ்நிலையை உருவாக்கும். அவ்வாறன சூழ்நிலையில் ஐ.தே.கட்சி மற்றும் சி.சு.கட்சி இரண்டிற்கும் இனவாதம்தான் துரும்பாக இருக்கும். இன்றைய இனவாத ஞானம்கள்தான் இந்த நாட்டின் குட்டி அரசாங்கங்களாக திகழ்வார்கள்.அவ்வாறான நிலையில் சிறுபான்மைகள், குறிப்பாக முஸ்லிம்கள் இன்னுமொரு நாட்டிற்காக செல்வது.எமது நிலைமை என்ன? எனவே இப்பொழுதே நாம் விழித்துக்கொள்ள வேண்டும்.

இந்தநாட்டின் முஸ்லிம்களது அரசியல் பேரம் பேசும் சக்தி என்பது என்ன?

பொதுத்தேர்தலை பொறுத்தவரையில் எந்தவொரு தேசியக் கட்சியும் 50 விகிதத்திற்கு அதிகமான வாக்குகளை சாதரண சூழ்நிலையில் பெற முடியாது. எனவே 50 விகிதத்திற்கு குறைவான வாக்குகளை கொண்டு 50 விகிதத்திற்கு குறைவான ஆசனங்களை தேசியக் கட்சிகள் பெறுகின்ற பொழுது அறுதிப் பெரும்பான்மையினை பெறுவதற்கு சிறுபான்மைகளின் குறிப்பாக முஸ்லிம்களின் தயவை நாட வேண்டியுள்ளது. இதுதான் நமது அரசியல் பலம் அல்லது பேரம் பேசுகின்ற சக்தி என்கின்றோம். இப்பலம் கடந்த காலங்களில் முஸ்லிம்களின் நலனுக்காக சில விடயங்களில் பாவிக்கப்பட்டிருக்கின்றன, என்பதை முன் சென்ற தொடர்களில்  பார்த்தோம்.

இப்பலம் அல்லது பேரம் பேசும் சக்தி கடந்த காலங்களில் பாவிக்கப்பட்ட அந்த சில நிகழ்வுகளை உற்று நோக்கினால் இப்பலத்தை வைத்துக்கொள்வதற்காக அப்பலங்கள் பாவிக்கப்பட்ட நிகழ்வுகளையே அவை காட்டுகின்றன. அதாவது “அப்பலம் அப்பலத்தை பாதுகாக்க பாவிக்கப்பட்டிருக்கின்றது.”

உதாரணமாக 89ம் ஆண்டு வெட்டுப்புள்ளி குறைப்பு., இந்த அரசியல் பலத்தை பாதுகாப்பதற்காக பாவிக்கப்பட்டது. 2004ம் ஆண்டு சந்திரிக்கா அறுதிப்பெறும்பான்மை பெறுவது தடுக்கப்பட்டு முஸ்லிம்களினதும் பொதுவாக சிறுபான்மைகளினதும் அந்த அரசியல் பலம் பாதுகாக்கப்பட்டது. எனவே இப்பலம் தன்னைத்தானே பாதுகாப்பதற்கு பயன் படுத்தப்பட்டதற்கு அப்பால் அப்பலத்தினால் சமூதயம் பெற்ற நன்மைகள் என்ன என்ற கேள்வியும் சமூதயத்திற்கு மத்தியில் இலாமல் இல்லை.

பொதுவாக தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான,  20வது அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பாக  நாம் பல தரப்பட்ட கலந்துரையாடல்களில் ஈடுபட்டிருந்த வேளை நமது பிரதி நிதித்துவத்தை பாதுகாத்து இவர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பி எதைத்தான் சாதிக்க போகின்றோம்,  என்ற ஒரு விரக்தியான கருத்து பலருக்கு மத்தியில் இருந்தது. 50 விகிதத்திற்கு குறைவான வாக்குகளால் 50 விகிதத்திற்கு அதிகமாக ஆசனங்களை என்ற விடயத்தில் பலர் தெளிவின்றி இருந்தார்கள். சுருங்க கூறின் 20தாவது திருத்த விடயத்தில் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் பெரிதாக அக்கறை எதும் இருக்க வில்லை.இந்த ” பேரம் பேசும் சக்தி “என்பது முஸ்லிம் கட்சிகளின் சுயநலத்தோடு சம்பந்தப்பட்ட விடயம் ;அதை அவர்கள் பார்த்துக்கொள்ளட்டும் என்ற மனோநிலையில் இருந்தார்கள்.

குறிப்பாக ஒரு கலந்துரையாடலில் தேசியக் கட்சியொன்றின் முன்னாள்  பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மகன், முஸ்லிம் அல்லாத பரும் கலந்து கொண்ட அக்கூட்டத்தில் பேசும்போது முஸ்லிம் கட்சிகளின் சுயநலத்திற்காக அவர்கள் பேரம் சக்தியை பற்றி பேசுகின்றார்கள். இப்பேரம் பேசும் சக்தியால் முஸ்லிம் கட்சிகளை தவிர முஸ்லிம்களுக்கு எதுவித நன்மையும் இல்லை. எனவே முஸ்லிம் கட்சிகள் முஸ்லிம்களை கஷ்டத்தில் தள்ளிவிடக் கூடாது என்று கூறினார்.

அவரது கருத்து யதார்த்திற்கு முரணாக இருந்தாலும் அதில் நியாயங்கள் இல்லை என்று கூறி விட முடியாது. இதை இங்கு கூறுவதற்கு காரணம் இக்கருத்து பலரிடம் இருக்கின்றது. அது முக நூல்களிலும் அவ்வப்போது பிரதி பலிக்கின்றது. எனவே இது பற்றிய சில தெளிவுகள் இங்கு தரப்படுகின்றன .

இந்த முஸ்லிம்களின் அரசியல் பலம் அல்லது பேரம் பேசும் சக்தியினூடாக இருவகையாக நன்மைகளை பெறலாம்..

01- முஸ்லிம் கட்சிகளினூடாக பெறுவது.

02- முஸ்லிம் கட்சிகளுக்கப்பால் முஸ்லிம் சமூகம் நேரடியாக பெறுவது.

இரண்டாவதை எடுத்துக்கொண்டால் கடந்த ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம்களின் அரசியல் பலத்தை ( இப்பலம் தொடர்பாக பாகம் 02 இல்  சிலாகித்திருந்தோம்) முஸ்லிம் கட்சிகளுக்கு அப்பால் செயற்படுத்த முஸ்லிம்கள் ஒன்றுபட்ட பொழுது மாற்று வழியின்றி முஸ்லிம் கட்சிகளும் முஸ்லிம்களுக்கு பின்னால் சென்றதும் ,முஸ்லிம்கள் அப்பலத்தை இந்த நாட்டு ஆட்சியாளரையே மாற்ற பயன்படுத்தியதையும் உதாரணமாக்க் கொள்ளலாம் .

அதே போன்று இப்பலம் பொதுத்தேர்தலிலும் தொடர்ந்து இருக்குமானால் முஸ்லிம் கட்சிகளுக்கும் அப்பால் , முஸ்லிம்களை பகைத்துக்கொள்ள ஆட்சியாளர்கள் தயங்குவார்கள்.முஸ்லிம் சமூகம் ஒன்றுபடுகின்ற பொழுது முஸ்லிம் கட்சிகளால் எதுவும் செய்ய முடியாது. முஸ்லிம்களை அல்லது சிறுபான்மைகளை பகைத்துக் கொண்டால் ஆட்சி கட்டிலில் அமருவதில் பிரச்சனை வரலாம். என்பது அவர்களுக்கு தெரியும். இப்புதிய ஆட்சியில் அதனை நிதர்சனமாக பல விடயங்களில் கண்டிருக்கின்றோம்.

அதே நேரம் முதலாவது விடயத்தினை பொறுத்தவரை முஸ்லிம் கட்சிகள் இப்பலத்தை பாவித்து எவ்வளவோ சாதிக்கலாம்; என்பது உண்மை. ஏனெனில் ஆட்சி அமைப்பதற்கு முஸ்லிம் கட்சிகள் தேவை என்பதற்கும் அப்பால் ஆட்சியை தக்கவைக்க முஸ்லிம் கட்சிகள் தேவை.இந்த பலத்தை பாவித்து வரலாற்றில் முதற்தடவையாக துறைமுகத்தில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம் வாலிபர்களுக்கு மறைந்த தலைவர் தொழில் வழங்கினார்.பல்கலைகழகம் அமைத்தார். அவை எல்லவற்றுக்கும் மேலாக அரச வேலை வாய்ப்பில் சமூகங்களின் விகிதாசாரத்திற்கேற்ப வேலை வழங்குவதனை கொள்கையாக கொண்டுவரச் செய்தார். ஆனால் தலைவரின் மறைவுடன் அந்த கொள்கை காற்றுடன் கலந்து விட்டது.

இன்று அந்த அரசியல் பலத்தை அரசியல் கட்சிகளின் தனிநபர்களின் நன்மைகளுக்காக  அல்லது அவர்களின் ஃபைல்களை பாதுகாப்பதற்காக பாவிக்கப்படுகின்றது. என்பது உண்மையாக இருக்கலாம். ஏன் மீள் குடியேற்றத்தினை சொல்லி வாக்கு பெற்று விட்டு மீள் குடியேற்ற அமைச்சினை பெறுவதற்கு கூட அப்பலத்தை பாவிக்காத துரதிஸ்ட்டவசமான நிலை இருக்கின்றது என்பதும் உண்மையாக இருக்கலாம். அதற்காக முஸ்லிம்களின் அரசியல் பலத்தை அல்லது பேரம் பேசும் சக்தியை விட்டுக்கொடுக்க முடியாது.

ஆடத்தெரியாதவர்களை அல்லது ( Match Fixing ) போல  எதிரணியை வெல்லவைப்பதற்காக ஆடுகின்றவர்களை நாம் தெரிவு செய்து விட்டு ஆடத்தெரியாதவர்கள் ஆடுகின்ற மேடை எக்கேடு கெட்டுபோனாலும் பரவாயில்லை  என்று விட்டு விடலாமாஆடத்தெரியாதவர்களை தெரிவு செய்வது நம் தவறல்லவாஅதற்காக மேடை என்ன குற்றம் செய்தது?மேடை சரியாக இருந்தால்தானே நாளை ஒரு  நாள் நமக்கு நல்ல புத்தி வந்து ஆடத்தெரிந்தவர்களை தெரிவு செய்கின்ற பொழுது ஆடுவதற்கு மேடை இருக்கும்.சிந்திப்போமா?

குறிப்பு 01- 

எவ்வாறான புதிய தேர்தல் முறைகள் முன்வைக்கப்படுகின்றன.அல்லது முன்வைக்கப்படலாம்சிறுபான்மைகளை பொறுத்தவரை நாம் முன்வைக்ககூடிய  மாற்று முறைமைகள் அல்லது முன்மொழிவுகள் என்னஎன்பதை அதிகார பங்கீடு தொடர்பாக ஆரய்ந்த பின் பார்ப்போம்.

குறிப்பு 02-

இங்கு நாம் பார்த்த அரசியல் நிர்ணய சபையும் (constituent assembly) தற்போது அரசாங்கம் பிரேரித்திருக்கின்ற அரசியல் அமைப்பு பேரவையும் (constitutional assembly) இரு வெவ்வேறான அமைப்புக்கள் என்பதை கவனத்தில் கொள்க.

தொடரும்……

குறிப்பு – அரசியல் அமைப்பு மாற்றம் தொடர்களான 1 முதல் 6 பாகங்களை வாசிக்காத  வாசகர்கள் லங்கா ப்ரொண்ட் இணையத்தளத்தின் கட்டுரை பகுதியில் பார்வை இடலாம் .