தற்போது இருப்பவர்களுக்கும் எதிர்காலத்தில் வெறுப்படைய நேரிடும் : கோத்தபாய எச்சரிக்கை !

நாட்டுக்கு சேவை செய்தவர்கள் துன்பத்தை எதிர்நோக்க தயாராக வேண்டும் எனவும் அதுவே வரலாறு எனவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
gotabhaya-rajapakse_Fotor

ரக்னா லங்கா நிறுவனம் சம்பந்தமான விசாரணைக்கு இன்று சமூகமளித்திருந்த போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே கோத்தபாய ராஜபக்ச இதனை கூறியுள்ளார். 

நாட்டுக்கு சேவை செய்தவர்கள் துன்பத்தை எதிர்கொள்ள தயாராக வேண்டும். இதுதான் வரலாறு. அதேபோல் தற்போது இருப்பவர்களுக்கும் எதிர்காலத்தில் வெறுப்படைய நேரிடும். சில நேரம் அது 100 மடங்காக இருக்கலாம். இதுதான் இயற்கை. 

நான் இராணுவ அதிகாரியாக இருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்காலத்தில் பல நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்டிருந்தேன்.அவற்றில் பல நடவடிக்கைகள் தொடர்பில் பாராட்டுக்களையும் பெற்றுள்ளேன். 

முன்னாள் ஜனாதிபதிகள், இராணுவ தளபதிகள், பாதுகாப்பு அமைச்சர்கள் நான் செய்த சேவையை அறிவார்கள் என கோத்தபாய ராஜபக்ச கூறியுள்ளார். 

அதேவேளை புதிய கட்சியின் தலைமைத்துவம் சம்பந்தமாக ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். 

அதற்கு பதிலளித்த கோத்தபாய, தலைவர் பதவியை விருப்பம் எனக் குறிப்பிட்டார். 

எனினும் தனது ஜாதகத்தில் அது பற்றி எதுவும் இல்லை எனவும் ஜோதிடர்கள் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அப்படியானவர்களிடம் தான் சோதிடம் பார்த்ததில்லை எனவும் கோத்தபாய குறிப்பிட்டுள்ளார். 

முன்னாள் ஜனாதிபதியின் ஆடைகளை கழற்ற போவதாக கூறிவர்களும் இருக்கும் தற்போதைய அரசியல் இதுதான். எதிர்காலத்தில் இவர்கள் தற்போதுள்ள ஜனாதிபதியின் ஆடைகளை கழற்ற போவதாக கூறுவார்கள். 

இப்படியானவர்களுடன் எனக்கு எந்த அரசியலும் இல்லை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.