பாகிஸ்தானில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட காத்ரியின் 7000 ஆதரவாளர்கள் மீது வழக்கு !

d6719fc2-ebab-4e9e-af86-464c76410a8c_S_secvpf

பாகிஸ்தானில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட மும்தாஜ் காத்ரியின் ஆதரவாளர்கள் 7000 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செயதுள்ளனர். 

பாகிஸ்தானில் நடைமுறையில் இருக்கும் மத அவமதிப்பு சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று குரல் கொடுத்துவந்த சீர்திருத்தவாதியான பஞ்சாப் மாகாண முன்னாள் கவர்னர் சல்மான் டஸீர் என்பவரை அவரது பாதுகாவலரான மும்தாஜ் காத்ரி கடந்த 4-1-2011 அன்று துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். இவ்வழக்கில் காத்ரிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

அடியாலா சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவருக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் குரல் கொடுத்து வந்த நிலையில், கடந்த மாதம் 29-ம் தேதி அவர் தூக்கிலிடப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இந்த செய்தி பரவியதும் அவரது ஆதரவாளர்கள் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல்கள் நடத்தி எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சில இடங்களில் வன்முறை வெடித்தது. 

கராச்சியில் உள்ள பரபரப்பான எம்.ஏ.ஜின்னா சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்ட சுமார் 7000 பேர், அரசு நிர்வாகத்திற்கு எதிராக மோசமான வார்த்தைகளைக் கூறி கோஷமிட்டதுடன் கலவரத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக சோல்ஜர் பசார் காவல் நிலையத்தில் 7000 பேர் மீதும் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக நிலைய அதிகாரி இர்ஷத் சூம்ரோ தெரிவித்தார்.

ராவல்பிண்டியில் நேற்று காத்ரியின் இறுதிச்சடங்கு நடந்தபோது சுமார் 50 ஆயிரம் ஆதரவாளர்கள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.