சிறுதானியமான கம்பு கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்கும்!

 Unknown

சிறுதானியமான கம்பு எளிதில் செரிமானம் ஆக கூடியது. பல்வேறு ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியது. இதில் கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் உள்ளது. பித்தப்பையில் கற்கள் வராமல் தடுக்கிறது. கொழுப்பு சத்தை கரைக்க கூடியது. ரத்த அழுத்தத்தை போக்க கூடியது. உடலுக்கு உறுதி தரக்கூடியது. எலும்புகளுக்கு பலம் கொடுக்க வல்லது. 

சளி, ஆஸ்துமா பிரச்னைகளுக்கு மருந்தாகிறது. கம்புவை பயன்படுத்தி உடலுக்கு குளிர்ச்சி, ஆரோக்கியம் கொடுக்கும் உணவு தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கம்பு, குதிரைவாலி அரிசி, தயிர், வெங்காயம், உப்பு. கம்பு, குதிரை வாலி அரிசியை வறுத்து அரைத்து களிபோன்று கிளறவும். இதை உருண்டைகளாக பிடித்து குளிர்ந்த நீரில் போட்டுவைத்தால் 3 நாட்கள் வரை கெட்டுப்போகாது. தேவையான உருண்டைகளை எடுத்து உப்பு சேர்க்கவும். சிறிது தயிர், நீர் விட்டு வெங்காயம் சேர்த்து கலந்து குடிக்கலாம். சர்க்கரை நோயாளிகள், உடல் எடையை குறைப்பவர்கள் இதை எடுத்துக் கொள்ளலாம்.

கம்புவை பயன்படுத்தி குழந்தைகளுக்கான சத்துமாவு கஞ்சி தயாரிக்கலாம். கம்பு, தினை, குதிரை வாலி, வரகு அரிசி, உளுந்தம் பருப்பு, முந்திரி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து எடுத்து, கட்டியில்லாமல் கரைக்கவும். ஒரு பாத்திரத்தில் நாட்டு சர்க்கரையுடன் நீர்விடவும். ஏலக்காய் பொடி, சத்துமாவு கலவையை சேர்க்கவும். தேங்காய் துருவலை சேர்த்து வேக வைக்கவும். இதில் காய்ச்சிய பால் விட்டு கிளறவும். இதை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். இது பல்வேறு சத்துக்களை கொண்ட உணவாக விளங்குகிறது. நோய்களை தடுக்கும்.

பல்வேறு நன்மைகளை கொண்ட கம்பு குழந்தைகளின் மூச்சுதிணறலுக்கு மருந்தாகிறது. இதயத்துக்கு பலம் கொடுக்கிறது. சிறுதானியமான இதில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன. மூளை, நரம்புக்கு பலம் தரக்கூடியது. படிக்கும் குழந்தைகளுக்கு ஞாபக சக்தியை அதிகரிக்கிறது. சிறுதானியங்களை எடுத்துக்கொண்டால் நோய் வராமல் தடுக்கலாம்.