இயந்திர உலகில் உற்பத்தியாளர்களின் புத்தாக்க சிந்தனை கொண்ட மாபெரும் தொழில்துறை கண்காட்சியும் சமூக நாள் நிகழ்வுகளும் எதிர்வரும் 14ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது.
உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைச்சின் தொழில்நுட்ப ஆராய்ச்சிப்பிரிவின் கீழ் இயங்கும் மட்டக்களப்பு மாவட்ட விதாதா வள நிலையங்கள், கிழக்குப் பல்கலைக்கழக முகாமைத்துவப்பீடத்தின் 21ஆம் நூற்றாண்டுக்கான உயர்கல்வித்திட்டத்துடன் இணைந்து உலக தரிசன நிறுவனத்தின் அனுசரணையுடன் இக்கண்காட்சி நடைபெறவுள்ளது.
மட்டக்களப்பு வந்தாறுமூலையிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரதான வளாக மைதானத்தில் 14ஆம் திகதி காலை ஆரம்ப நிகழ்வுகளுடன் தொழில்துறை கண்காட்சியும் சமூக நாள் நிகழ்வுகள் ஆரம்பமாகவுள்ளதாக, விதாதா வள நிலையத்தினர் அறிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சுயதொழில் முயற்சியாளர்கள், உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும் அவர்களது உற்பத்தி பொருட்களுக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்தி பொருளாதாரத்தில் நிலைநிமிரச் செய்யும் நோக்கில் இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தினமும் காலை 9 மணிமுதல் இரவு 9 மணிவரை நடைபெறவுள்ள தொழில்துறை கண்காட்சியும் சமூக நாள் நிகழ்வுகளில் கலை, கலாசார ஆற்றுகைகள், சிறுவர்களுக்கான விளையாட்டு நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன