ஊரார் வீட்டுக்கோழியறுத்து (உ)றவினர் பேரில் கத்தம் ஓதாதீர் : அக்கரைப்பற்றிலிருந்து பகிரங்க மடல் !

ஊரார் வீட்டுக்கோழியறுத்து (உ)றவினர் பேரில் கத்தம் ஓதாதீர்! 

பிரதியமைச்சர் ஹரீஸுக்கு அக்கரைப்பற்று முகா போராளியின் பகிரங்க மடல்

அஸ்ஸலாமு அலைக்கும்!

சேர்,

நான் ஒரு முஸ்லிம் காங்கிரஸ் போராளி. அக்கரைப்பற்றில் மு கா வின் ஸ்தாபகத் தவிசாளர் சேகு இஸ்ஸதீனின் காலத்திலிருந்தே மு கா வின் தொண்டனாக இருக்கின்றேன். பின்னர் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவுடன் இணைந்து முகாவை வளர்த்தவர்களில் நானும் ஒருவன். 

 

harees slmc athaullah

 

அதாவுல்லா முகாவுடன் முரண்பட்டு தேசிய காங்கிரஸை தொடங்கி அரசியல் நடத்தி வருகின்ற போதும் முகாவின் போராளியாகவே இன்னும்  இருந்து வருகின்றேன். சகோதரர் உவைஸுடன் இணைந்து அதாவுல்லாவின் கருங்கோட்டைக்குள் கட்சியை வளர்ப்பதற்கு நாம் பட்டபாடுகள் கொஞ்ச நஞ்சமல்ல. கடந்த பொதுத்தேர்தலில் எனது முயற்சியினால் சில நூறு வாக்குகளையாவது உங்களுக்கு பெற்றுத்தந்திருக்கின்றேன் என்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். 

என்னதான் நாங்கள் முஸ்லிம் காங்கிரஸிற்கும் உங்களுக்கும் அர்ப்பணிப்புகள் செய்தாலும் உங்கள் பிரதேச வாதம் இன்னும் உங்களை விட்டபாடில்லை. முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தனது பதவிக்காலத்தில் அக்கரைப்பற்றை ஒரு சொர்க்கபுரியாக மாற்றியுள்ளார் என்பதை நீங்கள் மறுக்கமாட்டீர்கள். கடந்த ஆட்சியில் கொடி கட்டிப் பறந்த அதாவுல்லா அம்பாறை முஸ்லிம் பிரதேசங்களின் நீண்டகாலத் தேவைகளை தனது அதிகாரத்தை பயன்படுத்தி நிறைவேற்றி வைத்தார். 

அக்கரைப்பற்று மண்ணில் பிறந்த அதாவுல்லா தனது அரசியல் வெற்றிக்கு உழைத்த எங்கள் பிரதேச மக்களை கெளரவிக்கும் வகையில் அக்கரைப்பற்றில் ஒரு துணைக்கச்சேரியையும் RDA பிராந்திய அலுவலகமொன்றையும் நீர்வழங்கல் அதிகார சபையின் பிராந்திய கிளை ஒன்றையும் கொண்டு வந்து இந்த மண்ணுக்கு பெருமை சேர்த்தார். இது அக்கரைப்பற்றுக்கு மட்டும் சொந்தமான ஒன்றல்ல. அம்பாறை முஸ்லிம் பிரதேசங்கள் அதாவது நீங்கள் தேர்தல் காலங்களில் அடிக்கடி உச்சரிக்கும் தென்கிழக்கு அலகு அடங்கிய பிரதேச மக்களுக்கு பெரிதும் துணை புரிந்தன. 

உத்தேச தென்கிழக்கு அலகு நிஜமானால் அது உள்ளடக்கிய பொத்துவில், சம்மந்துறை, கல்முனை ஆகிய பிரதேசங்களுக்கு மைய இடமாக இந்த அக்கரைப்பற்றே விளங்கும் என்பதும் உங்களுக்கு தெரியாத ஒன்றல்ல. ஆனால் விளையாட்டு அமைச்சில் அரை மந்திரி கிடைத்ததன் பின்னர் உங்கள் திருவிளையாடல்களை ஆரம்பித்துள்ளீர்கள். பிரதேச வாதம் உங்கள் இரத்தத்தில் ஊறி இருப்பதை நீங்கள் செயலுருவில் காட்டி வருகின்றீர்கள். 

அக்கரைப்பற்றில் உள்ள இம்மூன்று மக்கள் சேவை நிலையங்களையும் கல்முனைக்கு நீங்கள் கொண்டு வர மேற்கொண்ட பகீரத முயற்சி தோல்வியில் முடிந்ததால் நடந்தது என்ன? அந்த முயற்சி வீணாகி அக்கரப்பற்றுக்கும் இல்லாது அம்பாறை சிங்கள பிரதேசங்களுக்கு அது கைமாறியுள்ளது. 

ஹரீஸ் சேர் அவர்களே,

”வைக்கோல் பட்டறை நாயாக” நீங்கள் மாறியுள்ளது தான் வேதனை தருகிறது. பிரதேச வாதங்களை கக்கி கக்கியே அரசியல் நடத்தி வரும் நீங்கள், பிறந்த கல்முனைக்கு மண்ணுக்கு ஒரு துளி தானும் பணி செய்துள்ளீர்களா? 

மர்ஹூம் அஷ்ரப் மிகவும் நேசித்த அந்த புண்ணிய பூமிக்கு நீங்கள் செய்த சேவைதான் என்ன? அக்கரைப்பற்றில் அதாவுல்லாவும் காத்தான்குடியில் ஹிஸ்புல்லாவும் ஏறாவூரில் ஹாபீஸ் நசீர் அஹமட்டும் ஓட்ட்மாவடியில் அமீரலியும் செய்துள்ள பணிகளை சென்று பாருங்கள். 

2002ஆம் ஆண்டு கல்முனை நகரசபையாக பிரகடனம் செய்யப்பட்டது. அன்று தொடக்கம் இன்று வரை நகரசபை கட்டிடம் சீட்டினால் (Sheet) கூரை போடப்பட்ட கட்டிடமாகவே இன்னும் இருந்து வருகின்றது. ஆனால் 2011 ஆம் ஆண்டு மாநகரசபையாக பிரகடனப்படுத்தப்பட்ட அக்கரைப்பற்று மாநகர சபைக் கட்டிடம் அதாவுல்லாவின் அயராத உழைப்பினால் ‘கெய்ரோ’ நகர கட்டிடமாக தலை நிமிர்ந்து நிற்கின்றது. நல்ல வேளை உங்களுக்கு முடிந்திருந்தால் அக்கரை மாநகரசபைக் கட்டிடத்தை கல்முனைக்கு மாற்ற முயன்றிருப்பீர்கள். ஊரார் வீட்டுக் கோழியறுத்து கத்தம் ஓதும் உங்கள் நடவடிக்கைகளை விட்டு விட்டு உங்கள் பதவிக்காலத்தில் அஷ்ரப் வாழ்ந்த அந்த மண்ணுக்கு ஏதாவது உருப்படியாக செய்யப்பாருங்கள். 

ஹரீஸ் அவர்களே, 

நீங்கள் கல்முனை மாநகர சபை மேயராகவும் இருந்தீர்கள். கல்முனைக்கு என்ன செய்தீர்கள்? கல்முனை விளையாட்டு மைதானங்களுக்குள் கொட்டப்படும் கழிவுகளைக் கூட அகற்றும் திராணி உங்களுக்கு இருக்கவில்லை. தேர்தல் காலங்களில் சந்திக்குச் சந்தி வீர வசனம் பேசும் உங்கள் நடவடிக்கைகளை இன்று தொடக்கம் கைவிட்டு விட்டு உருப்படியாக ஏதாவது செய்யப்பாருங்கள்.. அப்போது தான் மர்ஹூம் அஷ்ரப்பின் கனவை ஓரளவாவது நிறைவேற்ற முடியும், அத்தோடு நாங்களும் முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளாக தொடந்து இருந்து உங்களுக்கும் உதவ முடியும்.

 வஸ்ஸலாம். 

  • மூத்த போராளி குத்தூஸ்