அரசியல் மாற்றம் என்பது மக்கள் மத்தியிலேயே ஏற்படும் விழிப்புணர்விலேயே தங்கியிருக்கிறது !

“ஒரு சிறந்த சமூக மாற்றத்தை உருவாக்குவதற்கான ஒரு உபாயமாகவே நாம் அரசியல் மாற்றத்தை நோக்குகின்றோம். உறுதியான அரசியல் மாற்றம் என்பது மக்கள் மத்தியிலேயே ஏற்படும் விழிப்புணர்விலேயே தங்கியிருக்கிறது.’ என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG)யின் தவிசாளர்  பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.

nfgg abdur rahmaan

 காத்தான்குடி பாலமுனை பிரதேசத்தில்  நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர்இவ்வாறு தெரிவித்தார். பாலமுனை இக்ரஃ பாலர் பாடசாலைக்கு NFGG யினால் வழங்கப்பட்ட நிதியுதவி தொடர்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உரையாற்றுகையில்  அப்துர் ரஹ்மான் மேலும் தெரிவித்ததாவது.

 

“இன்றைய சூழலில் அரசியல் என்பது பல்வேறு நோக்கங்களுக்காக செய்யப்படுகிறது. பதவி ,கௌரவம், பொருளாதார இலாபம் போன்ற தனிநபர் இலாப நோக்கங்களுக்காகவும், அதே போன்று கட்சிகளின் தனிப்பட்ட இலாபங்களுக்காகவுமே அரசியல் இன்று பெரும்பாலும் முன்னெடுக்கப்படுகிறது. 

 

இந்நிலைமைகளுக்கு மத்தியில் ஒரு சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான உபாயமாகவே நாம் அரசியல் மாற்றத்தை நோக்குகின்றோம். உறுதியான அரசியல் மர்ற்றம் என்பது மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்படும் பரவலான விழிப்புணர்வினிலேயே தங்கியிருக்கிறது. அந்த விழிப்புணர்வு அடிமட்டம் தொடக்கம் சமூகத்தின் சகல மட்டங்களிலும் ஏற்படுத்தப்படல் வேண்டும்.

 

இந்த அடிப்படையில்தான் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆகிய நாம் எமது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறோம். நாம் எதிர்பார்க்கும் இந்த சிறந்த மாற்றம் சமூகத்தின் விழிப்புணர்விலேயே தங்கியிருக்கிறது என்பதனை நாம் உறுதியாக நம்புகிறோம்.

 

எனவேதான் ஏனைய கட்சிகளைப் போலல்லாது எமது கட்சி மக்களை விழிப்பூட்டுகின்ற தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதற்காக ஏராளமான பிரசுரங்களையும் , ஏனைய நடவடிக்கைகளையும் நாம் மேற்கொண்டு வருகிறோம்.

 

ஒரு நல்ல விழிப்புணர்ச்சியுடன் நாம் அரசியல் தீர்மானங்களை மேற்கொண்டால் எவ்வாறான மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்பதனை நாம் கண்முன்னே கண்டோம்.

 

நமது மக்களுக்கும் நாட்டுக்கும் விரோதமாக செயற்பட்டுக் கொண்டிருந்த மஹிந்த தலைமையிலான ஆட்சியினை மாற்றவே முடியாது என நம்பப்பட்டது. எமது அரசியற் கட்சிகளும், தலைவர்களும் கூட அந்த அரசாங்கத்திற்கு உடந்தையாகவே செயற்பட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் அந்த அரசாங்கத்தை எப்படியாவது மாற்றியமைக்க வேண்டும் என்ற விழிப்புணர்ச்சி மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டதன் காரணமாக ஒரு பாரிய மாற்றத்தை எம்மால் நிகழ்த்த முடிந்தது.

 

இதே விழிப்புணர்ச்சியோடு கூடிய நமது அரசியல் தீர்மானங்கள் தொடருமாக இருந்தால் இன்னும் பல அரசியல் மாற்றங்களையும் சமூக மாற்றங்களையும் நம்மால் ஏற்படுத்த முடியும். இந்த மாற்றங்களை நோக்கி மக்களை விழிப்பூட்டுகின்ற அரசியல் பணிகளை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தொடர்ந்தும் தலைமை தாங்கி முன்னெடுக்கும். இந்த உழைப்பில் மக்கள் எல்லோரும் உறுதியுடன் எம்மோடு கைகோர்க்க வேண்டும் என அழைக்கிறோம்.”

 

எம்.ரீ. ஹைதர் அலி