அதிகாரங்கள் வழங்கப்பட்ட தமிழர் தேசமொன்றை அடையும்வரையும் எமது பயணம் தொடரும் : சம்பந்தன் !

எப்.முபாரக் 

Sampanthan_Fotor

எங்களுடைய இலக்கை இன்னும் நாம் அடையவில்லை. எமக்கான சுயநிர்ணய உரிமையையும் நாடு பிளவுபடாது சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு வடகிழக்கு இணைந்த அலகாகவும் அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்பட்ட தமிழர் தேசமொன்றை அடையும்வரையும் எமது பயணம் தொடரும்’ என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

‘எதிர்க்கட்சித் தலைவராகி எமது மக்களின் அன்றாடத் தேவைகளையும்  அபிவிருத்தியையும் நிறைவு செய்தால், எமது இலக்கை அடைந்துள்ளதாக அர்த்தமில்லை. எமது மக்கள் ஆண்டாண்டு காலத்துக்கும் இம்மண்ணில் சுயநிர்ணய உரிமையுடன் வாழக்கூடிய நிரந்தரத் தீர்வை நோக்கி நாம் பயணிக்கிறோம். இந்தப் பயணத்தின் இறுதிக்கட்டத்தில் தற்போது இருக்கிறோம். இதில் வெற்றி அடைவதற்கான சந்தர்ப்பம் அதிகமாக எமக்கு உள்ளது’ எனவும் அவர் கூறினார்.

திருகோணமலையிலுள்ள அவரது இல்லத்தில் திங்கட்கிழமை (29) மாலை நடைபெற்ற தழிழரசுக்கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களுடனான சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு மேலும் அவர் தெரிவிக்கையில், ‘ உங்களுடைய குறைகளைத் தீர்ப்பதற்கு தற்போதுள்ள அரசாங்கத்தில் மிக முக்கியமான அமைச்சை நான் எடுத்திருக்கலாம். இதற்கு வாய்ப்பும் இருந்தது. பத்து தொலைபேசி அழைப்புகளில் அபிவிருத்தி சார்ந்த பிரச்சினைகளை தீர்க்க முடியும். ஆனால், எமது பயணம் அது அல்ல. நாம் தனி நாட்டுக் கோரிக்கையை கோரியிருந்தோம்.  பின் ஆயுத வழியில் போராடினோம். இன்று அரசியல் ரீதியாக போராடுகிறோம். இதில் நாம் வெற்றி பெறச் சந்தர்ப்பம் உள்ளது’ என்றார்.

‘தற்போது மக்கள் தங்களின் பிரச்சினைகளை வெளிப்படையாகக் கூறக்கூடிய நிலைமை உருவாகியுள்ளது. இது இந்த ஆட்சியில் மக்கள் மனங்களில் ஏற்பட்ட மாற்றம். மக்களின் உணர்வை, குறைபாடுகளை, ஆதங்கங்களை நான் மதிக்கின்றேன்’ எனவும் அவர் மேலும் கூறினார்.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம், கிழக்கு மாகாணசபை கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி, மாகாணசபை உறுப்பினர்களான ஜெ.ஜெனார்த்தனன் கு.நாகேஸ்வரன் உட்பட கட்சி முக்கியஸ்தர்கள் எனப்  பலரும் கலந்துகொண்டனர்.