கல்முனை கொலை : சம்பவம் இடம்பெற்று 5 மணித்தியாலத்தில் சம்பந்தப்பட்டவர் கைது !

 
கல்முனை சர்வோதய அபிவிருத்தி நிதி நிறுவனத்தின் பெண் முகாமையாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்டது தொடர்பில் சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த நிறுவனத்தில் முன்னர் முகாமையாளராகப் பணிபுரிந்த பொன்னம்பலம் உதயகுமார் என்பவரே இக்கொலை தொடர்பான சந்தேகத்தில் கைது செய்யப்பட்டதாக, கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ. டபிள்யூ. அப்துல் கபார் தெரிவித்தார். 

வெட்டிக் கொலை செய்யப்பட்ட பெண்ணும், கொலைச் சந்தேக நபரான முன்னாள் முகாமையாளரும் உடன்பிறவாச் சகோதரர்கள் எனத் தெரியவந்துள்ளது. இருவரும் நற்பிட்டிமுனையைச் சேர்ந்தவர்கள். 

முன்னாள் முகாமையாளரின் நிதி தொடர்பான பிரச்சினையே இக்கொலைக்கு காரணமாக இருக்கலாமெனவும் சந்தேகிக்கப்படுகிறது. 

கல்முனை, மட்டக்களப்பு பிரதான வீதியில் மிகவும் சனசந்தடிமிக்க வைத்தியசாலைக்கு அருகாமையிலுள்ள இந்நிதி நிறுவன அலுவலகத்தில் இச்சம்பவம் பட்டப்பகலில் இடம்பெற்றமை பலரையும் வியப்புக்குள்ளாக்கியுள்ளது.

அதனால், செய்தி அறிந்ததும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அவ்விடத்திற்குச் சென்று பல மணி நேரம் காத்திருந்தனர். 

kalmunai gaffar oic

 நற்பிட்டிமுனை குளோரி வீதியைச் சேர்ந்த ராஜேஸ்வரன் சுலக்சனா (வயது 33) என்ற இளம் பெண் முகாமையாளரே இவ்வாறு வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். 

இவர் ஒரு பிள்ளையின் தாய் என்பதும் கணவர் தையல் வேலை செய்பவர் என்றும் தெரியவந்துள்ளது. 

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது:- 

வழமை போன்று சனிக்கிழமையன்று காரியாலயத்துக்கு சென்று கடமையாற்றிக் கொண்டிருக்கும் போதே இந்தக் கொலை நிகழ்ந்துள்ளது. அவர் கழுத்தில் அணிந்திருந்த தாலிக்கொடி மற்றும் காப்புகள் அபகரிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

இவருடன் கடமையிலிருந்த மற்றொரு வெளிக்கள உத்தியோகத்தர் பகல் உணவுக்காக வெளியில் சென்று மீண்டும் அலுவலகத்திற்கு வந்து பார்த்த போது இந்த உதவி முகாமையாளர் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் கிடப்பதைக் கண்டு பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். 

கல்முனைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அப்துல் கபார் தலைமையிலான பொலிஸ் குழுவினர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், அம்பாறையிலிருந்து விசேடமாக வரவழைக்கப்பட்ட ‘சோக்கோ் பொலிஸ் அணியினர் விசாரணையில் ஈடுபட்டனர். 

கல்முனை மாவட்ட நீதிவானும், பதில் நீதிபதியுமான ராமகமலன் ஸ்தலத்துக்கு விஜயம் செய்து விசாரணைகளை நடாத்தினார். மூடிய அலுவலகத்துள் பிற்பகல் 3 மணி தொடக்கம் மாலை 7 மணி வரை விசாரணை தொடர்ந்தது.

அலுவலக ஊழியர்கள் அறுவர், சந்தேக நபரான முன்னாள் முகாமையாளர் பொன்னம்பலம் உதயகுமார் ஆகியோரை பொலிசார் 4 மணி நேரம் பூரண விசாரணை செய்துள்ளதோடு கொலையாளியை கையும் மெய்யுமாக அடையாளம் கண்டனர். 

கொலையாளியை அடையாளம் கண்டது எப்படி?

நிறுவனத்துக்குள் வைக்கப்பட்டிருந்த தலைக் கவசத்தை பற்றி சந்தேக நபரிடம் கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி விசாரணை செய்துகொண்டிருந்த போது சந்தேக நபரின் கை விரலில் புதிய காயம் ஒன்று இருந்துள்ளது. அதனை விசாரித்த போது வீட்டில் வேலை செய்துகொண்டிருந்த போது ஏற்பட்ட காயம் என அவரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதனை உறுதிப்படுத்த சந்தேக நபரின் வீட்டுக்குச் சென்று விசாரித்த பொலிசார், “அப்படியொன்றும் நடக்கவில்லையென ஊர்ஜிதம் செய்தனர். 

சந்தேக நபரின் காயப்பட்டிருந்த விரல் நகம் துண்டிக்கப்பட்டிருந்ததை அவதானித்த பொலிஸ் பொறுப்பதிகாரி கபார், கொலை செய்யப்பட்ட சடலத்தின் வாய்ப் பகுதியை பார்வையிட்ட போது சந்தேக நபரின் கை விரல் நகம் சடலத்தின் வாய்ப் பகுதியில் இருந்துள்ளது. 

கொலைச் சம்பவம் நடைபெற்ற போது அப்பெண் கொலையாளியின் பிடியிலிருந்து தப்பித்துக் கொள்ள முயற்சிசெய்த போது விரல் கடிக்கப்பட்டு நகம் வாயினுள் சென்றிருக்கலாமென பொலிசார் சந்தேகிக்கின்றனர். 

இந்த கொலை நடைபெற்ற நேரமும், இடமும் கொலையாளிக்கு ஒரு கொலை செய்யக்கூடிய வாய்ப்பு குறைவாக இருந்த போதும் நன்கு திட்டமிடப்பட்டு செய்யப்பட்ட கொலையாகவே பார்க்க முடிகின்றது. 

நிறுவனத்தில் யாரும் இருக்கவில்லை. காவலாளி இல்லை, சீசீரிவீ கமரா இல்லை. இத்தனை விடயங்களும் ஒரே நேரத்தில் அறிந்திருக்கக் கூடியமையானது அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த அல்லது அந்த நிறுவனத்தைப் பற்றி நன்கு அறிந்தவரால் மட்டுமே தீர்மானித்திருக்க முடியும். 

இந்த நிறுவனத்தில் இடம்பெற்றுள்ள நிதி மோசடிகள் அம்பலப்படுத்தப்பட்டிருப்பதால் ஏற்பட்ட முரண்பாடே இந்தக் கொலைக்கான காரணமென தெரியவருகிறது. 

இது குடும்ப தகராறாக இருக்கலாம் என்று பலரால் ஊகம் தெரிவிக்கப்பட்டாலும் கொல்லப்பட்ட புதிய முகாமையாளரின் வருகையின் பின்னர் நிறுவனத்தில் இடம்பெற்றுள்ள பல மோசடி சம்பவங்கள் அம்பலத்துக்கு வந்துள்ளன. 

இதனைத் தாங்க முடியாத நிலையில் இக் கொலைக்கான திட்டம் வகுக்கப்பட்டிருக்கலாமென பொலிசார் சந்தேகிக்கின்றனர். 

நேற்று முன்தினம் கொலைச் சம்பவம் நடைபெற்ற இடத்தில் திரண்ட மக்களினால் பதற்ற நிலை ஏற்பட்டதுடன் வீதிப் போக்குவரத்தும் தடைப்பட்டன. குறித்த பிரதேசம் எங்கும் பொலிசார் குவிக்கப்பட்டு அமைதி நிலை ஏற்படுத்தப்பட்டது. 

நாட்டில் பல வருடங்கள் கடந்தும் கண்டு பிடிக்க முடியாமல் உள்ள சூழலில் இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்று 5 மணித்தியாலத்தில் சம்பந்தப்பட்டவர் கைது செய்யப்பட்டமையானது கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ. டபிள்யூ. ஏ. கப்பாரின் திறமையை வெளிப்படுத்தியுள்ளது. 

பாரிய வன்முறை சம்பவம் ஒன்று அப்பிரதேசத்தில் நடப்பதற்கான சூழல் அமைந்திருந்த போதும், எந்தவொரு அசம்பாவிதமும் நடைபெறாமல் மிக சூட்சுமமாக கொலையாளி கைது செய்யப்பட்டமைக்கு கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் சாமர்த்தியமான நடவடிக்கையே காரணமாகும். 

சாப்பாட்டுக்கு வருவேன் என்றவர் வரவில்லை 

கொலை செய்யப்பட்ட பெண் முகாமையாளர் கர்ப்பிணி என தகவல்கள் வெளியாகிய போதிலும் அது ஊர்ஜிதம் செய்யப்படவில்லை. 

இவர் கடமைக்குச் சென்றதும் வீட்டிலிருந்து பகல் உணவு அனுப்பப்படுவதே வழக்கமாக இருந்து வந்துள்ளது. 

சம்பவ தினம், மதியச் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வருவதாக தனது தாயாரிடம் கூறிவிட்டே சுலக்சனா சென்றுள்ளார். 

வீட்டிலிருந்து அன்றைய தினம் அலுவலகம் புறப்படுவதற்கு சற்று முன்னர் தாயாரை அழைத்த சுலக்சனா, “பிள்ளைக்குச் சாப்பாடு கொடுங்கள். நான் சாப்பாட்டுக்கு வருகிறேன்” என கூறிவிட்டே அலுவலகம் புறப்பட்டுள்ளாரென குடும்ப உறவிகனர்கள் தெரிவித்தனர்.