அவன்கார்ட் நிறுவன தலைவர் பெயரில் உள்ள நிலையான வங்கிக் கணக்கில் 111 கோடி பணம் வைப்பு!

avan
அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஷாங்க யாப்பா சேனாதிபதி பெயரில் உள்ள நிலையான வங்கிக் கணக்கில் 111 கோடி பணம் வைப்பு செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவரின் பெயரில் கொமர்ஷல் வங்கியில் 62 கணக்குகளும் தேசிய அபிவிருத்தி வங்கியில் 20 நிலையான கணக்குகளும் லங்கா ஒரிக்ஸ் லீசிங் நிறுவனத்தில் 6 நிலையான கணக்கும், பீப்பில் லீசிங் நிறுவனத்தில் நிலையான 07 கணக்குகளும் இலங்கை வங்கியில் நிலையான ஒரு கணக்கும் உள்ளதாகவும் அவற்றின் பெறுமதி 1110 மில்லியன் என தெரியவந்துள்ளது.

இதற்கு மேலதிகமாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் மனைவி அயோமி ராஜபக்சவின் வங்கி கணக்கு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள குற்றப் புலனாய்வு பிரிவினர், அவர்களினால் இலங்கை வங்கியில் நடத்தி செல்லப்படும் கூட்டுக் கணக்கு ஒன்று தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பித்துள்ளனர்.

முன்னாள் கடற்படை தளபதி சோமதிலக திஸாநாயக்கவின் வங்கி கணக்கு விசாரணைகளின் போது தேசிய சேமிப்பு வங்கியில் 12 கணக்குகளும், அரச ஈட்டு மற்றும் முதலீட்டு வங்கியில் கணக்கொன்றும், இலங்கை வங்கியில் 03 கணக்குகளும், கொமர்ஷல் வங்கியில் 04 கணக்குகளும், சம்பத் வங்கியில் 03 கணக்குகளும் தேசிய அபிவிருத்தி வங்கியில் ஒரு கணக்கினையும் பேணுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர், தமயந்தி ஜயரத்ன இலங்கை வங்கியில் ஒரு கணக்கினையும், மக்கள் வங்கியில் 05 கணக்குகளும் சம்பத் வங்கியில் 09 கணக்குகளையும் நடத்தி செல்வதாக குற்றப் புலனாய்வு பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது.

2014.01.18 ஆம் திகதி நீதிமன்ற உத்தரவிற்கமைய நிதி நிறுவனங்கள் 32ன் அறிக்கையில் இந்த தகவல் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.