அமெரிக்காவின் இந்த முடிவுக்கு உடனடியாக இந்தியா ஆட்சேபம் தெரிவித்தது. இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் ரிச்சர்டு வர்மாவை வெளியுறவுத்துறை செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் நேரில் அழைத்து இந்தியாவின் எதிர்ப்பை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்தார்.
இது தொடர்பாக வெளியுறவுத்துறை விடுத்துள்ள அறிக்கையில், “பாகிஸ்தானுக்கு எப்-16 ரக போர் விமானங்களை விற்பனை செய்வதற்கான அறிவிப்பை வெளியிடுவதற்கு ஒபாமா நிர்வாகம் முடிவு எடுத்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. இத்தகைய விற்பனை, பாகிஸ்தானின் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைக்கு உதவும் என்று அமெரிக்கா நியாயப்படுத்துவதை நாங்கள் ஏற்க முடியாது” என கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு போர் விமானங்கள் விற்பனை செய்வதற்கு அமெரிக்காவிலும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்த விற்பனையை முடக்குவதற்கான கூட்டு தீர்மானத்தை அமெரிக்க பாராளுமன்றத்தில் பிரதிநிதிகள் சபையில் குடியரசு கட்சி எம்.பி., டானா ரோஹ்ராபச்சர் நேற்று முன்தினம் தாக்கல் செய்தார்.
அப்போது பேசும்போது அவர் கூறியதாவது:-
அமெரிக்காவிடம் இருந்து பெறுகிற ஆயுதங்களை தன் சொந்த மக்களை நசுக்குவதற்கு பாகிஸ்தான் பயன்படுத்தி வந்துள்ளது. இந்த கூட்டு தீர்மானத்தை ஆதரிப்பதா அல்லது வேண்டாமா என்பதை தீர்மானிக்கும் காரணி எனக்குத்தான் உள்ளது. ஒசாமா பின்லேடனை நீதியின் முன் நிறுத்துவதற்கு உதவியவருக்கு எதிராக பாகிஸ்தான் ஆணவமாக, விரோதமாக நடவடிக்கை எடுத்துள்ளது. சகீல் அப்ரிடியை கைது செய்து தொடர்ந்து சிறை வைத்துள்ளது. அவரை பாகிஸ்தான் கைது செய்தது, அமெரிக்கா மீதான விரோதப்போக்கை பிரகடனம் செய்வதாகும்.
பாகிஸ்தானுக்கு நமது அரசு கண்டிப்பாக ராணுவ தளவாடங்கள் வழங்கக்கூடாது. பாகிஸ்தான் நம்மை நட்பு நாடாக பார்ப்பதில்லை. பகை நாடாகத்தான் கருதுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
2 தினங்களுக்கு முன் கூட்டு தீர்மானத்தை அமெரிக்க பாராளுமன்றத்தின் செனட் சபையில் குடியரசு கட்சி உறுப்பினர், ரேண்ட் பால் அறிமுகம் செய்தார்.
இருந்தாலும், பாகிஸ்தானுக்கு போர் விமானங்கள் விற்பனை செய்யும் முடிவை அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரி மீண்டும் நியாயப்படுத்தி உள்ளார்.
இதுபற்றி அவர் கூறுகையில், “பாகிஸ்தானின் மேற்கு பகுதிகளில் உள்ள தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுப்பதில் இந்த எப்-16 ரக போர் விமானங்கள் முக்கிய பங்கு வகிக்கும். பாகிஸ்தானுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ள இந்த தீவிரவாதிகளால் கடந்த ஆண்டுகளில் 50 ஆயிரம் பேரை அந்த நாடு இழந்திருக்கிறது” என கூறினார்.
இருப்பினும் செனட் வெளியுறவு கமிட்டி தலைவர் பாப் கார்க்கர், அமெரிக்காவின் முடிவுக்கு கடிவாளம் போடுவது குறிப்பிடத்தக்கது.