கடந்த சுதந்திர தினத்தில் இலங்கையில் இரண்டாவது தடவையாக சுதந்திர கீதம் தமிழிலும் இசைக்கப்பட்டது. இதற்கு முன்னர் இலங்கையின் முதலாவது சுதந்திர தினத்தில் மாத்திரம் தமிழிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சுதந்திர தினத்தில் தமிழிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டமையானது தமது அடிப்படை உரிமைகளை மீறும் செயற்பாடாகும் என்று உச்சநீதிமன்றத்தில் மனுவொன்று நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
களனி, கல்பொரள்ளை பிரதேசத்தைச் சேர்ந்த விதானகே சஞ்சய சுதத் பெரேரா, பேலியாகொடை பிரதீப் ஆசிரி சொய்சா, களனியில் வசிக்கும் தொன் பிரேமரத்ன ஆகியோர் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.
ஜனாதிபதி மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் இதன் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
சுதந்திர தினத்தில் தமிழிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டமையானது அரசியலமைப்புக்கு முரணானது என்றும் அதன் மூலம் தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அறிவிக்குமாறும் குறித்த மனுவில் அவர்கள் உச்சநீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.