தோலின் உயிரணுக்கள் மூலம் மூளைப்புற்று நோயை குணப்படுத்தும் முறை கண்டுபிடிப்பு!

d49bdd34-de23-43cf-8c57-3a0e8a64d947_S_secvpf
மனிதத் தோலில் உள்ள உயிரணுக்களை (செல்களை) குருத்தணுக்களாக மாற்றி மனிதர்களின் மூளையில் உருவாகும் கிலியோபிளாஸ்டோமா என்ற புற்றுக்கட்டியை குணப்படுத்தும் நவீனவகை மருத்துவத்தை அமெரிக்க மருத்துவ ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கிலியோபிளாஸ்டோமா என்ற மூளைப் புற்றுக்கட்டிக்கு சிகிச்சை அளிப்பது மிகவும் சிக்கலானதாக கருதப்படுகிறது. இந்த சிகிச்சையில் உயிர்பிழைக்கும் வாய்ப்பு 30 சதவீதம் மட்டுமே உண்டு. மீதி நோயாளிகள் சிகிச்சை தொடங்கிய இரண்டு ஆண்டுகள்கூட உயிர் வாழ்வது கடினம் என்ற நிலைதான் நீடித்து வருகிறது.

புற்றுக்கட்டியை ஆபரேஷன் மூலம் நீக்கிவிட்டாலும் புற்றின் பாதிப்பு மூளையின் ஆழ்ந்த பகுதிவரை ஊடுருவி விடுவதால் ஆபரேஷனுக்குப் பிறகு அங்கிருந்து வெளியாகும் தாக்கம் மீண்டும் புதிய கட்டியாக உருவாகி விடும்.

இந்நிலையில், வடக்கு கரோலினா மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் பாதிக்கப்பட்ட நோயாளியின் தோலில் இருக்கும் உயிரணுக்களை ‘பைப்ரோபிளாஸ்ட்ஸ்’ எனப்படும் குருத்தணுக்களாக மாற்றி அதைவைத்தே கிலியோபிளாஸ்டோமா மூளைப்புற்றைக் கொன்று, குணப்படுத்த முடியும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த குருத்தணுக்கள் ஒருவித புரதத்தை வெளிப்படுத்தியவாறு மூளையின் வெளிப்புறம் மட்டுமின்றி ஆழ்ந்த பகுதிகளுக்கும் சென்று செயலாற்றுவதால் கிலியோபிளாஸ்டோமா-வை முழுமையாக கொல்வதுடன் மீண்டும் புற்று ஏற்படாதவாறு பாதுகாக்கின்றன என்பது இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக, இந்த புதிய முறையின் மூலம் எலிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில் புற்றின் தீவிரத்துக்கேற்ப 160 முதல் 220 சதவீதம் வரை வெற்றி கிடைத்துள்ளது. இனி, அடுத்தகட்டமாக மனிதர்களின் தோலில் உள்ள செல்களான உயிரணுக்களை ஸ்டெம் செல் எனப்படும் குருத்தணுக்களாக மாற்றி சிகிச்சை அளிப்பதன் மூலம் கிலியோபிளாஸ்டோமா எனப்படும் மூளைப்புற்றை பூரணமாக குணப்படுத்திவிட முடியும் என இந்த ஆய்வுக்குழுவின் தலைவரான ஷான் ஹிங்டன் உறுதியுடன் கூறுகிறார்.