இங்கிலாந்து ராணியின் கிரீடத்தில் உள்ள கோஹினூர் வைரத்தை பாகிஸ்தானுக்கு கொண்டுவர வழக்கு; விசாரணை ஒத்திவைப்பு!

இங்கிலாந்தில் இருக்கும் இந்தியாவின் பெருமைமிக்க 105 கேரட் கோஹினூர் வைரத்தை திருப்பியளிக்க கோரி அந்நாட்டு ராணி மீது பாகிஸ்தான் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Daily_News_4451824426652_Fotor

சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் தோண்டியெடுக்கப்பட்ட கோஹினூர் வைரம் பின்னர் பல கைகளுக்கு மாறி, இங்கிலாந்தின் காலனி நாடாக இந்தியா இருந்தபோது, அப்போது மகாராணியாக இருந்த விக்டேரியாவுக்கு அன்பளிப்பாக கொடுக்கப்பட்டு, பிறகு இங்கிலாந்து அரசியின் சொத்தாக மாறியது.

தற்போது, இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கிரீடத்தை அலங்கரிக்கும் கோஹினூர் வைரத்தை திரும்ப ஒப்படைக்குமாறு இந்தியா வலியுறுத்தி வருகிறது. ஆனால், இந்தியாவின் இந்த கோரிக்கையை திட்டவட்டமாக இங்கிலாந்து தொடர்ந்து ஏற்க மறுத்து வருகிறது. இந்த நிலையில், பாகிஸ்தானும் கோஹினூர் வைரத்துக்கு உரிமை கோரியுள்ளது. ராணியின் கிரீடத்தில் பதிக்கப்பட்டுள்ள இந்த வைரம் பொதுமக்களின் பார்வைக்காக லண்டன் டவரில் வைக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், பாகிஸ்தானை சேர்ந்த பிரபல வக்கீலான ஜாவித் இக்பால் ஜாப்ரி என்பவர் லாகூர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். தனது மனுவில் அவர் கூறியிருந்ததாவது:-

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தை ஆண்ட மகாராஜா ரஞ்சித் சிங் பேரனிடம் இருந்து வலுக்கட்டாயமாக கோஹினூர் வைரத்தை தங்களது ஆட்சி காலத்தில் இங்கிலாந்து எடுத்து சென்று உள்ளது. 1947-ம் ஆண்டுக்கு பின்பு ரஞ்சித்சிங் ஆட்சி செய்த பகுதி பாகிஸ்தான் எல்லைக்குள் வந்துவிட்டது. அந்த வைரத்தை இங்கிலாந்து ராணி எந்த வகையிலும் சொந்தம் கொண்டாட முடியாது. எனவே, கோஹினூர் வைரத்தை பாகிஸ்தானிடம் ஒப்படைக்கும்படி இங்கிலாந்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிடவேண்டும். 

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. 

இந்த மனுவில் இரண்டாம் எலிசபெத் ராணியும், பாகிஸ்தானில் உள்ள இங்கிலாந்து தூதரகமும் பதில் மனுதாரர்களாக குறிப்பிடப்பட்டு உள்ளனர். ஏற்கனவே இதேகோரிக்கை அடங்கிய மனுவை, கடந்த டிசம்பர் மாதம் பாகிஸ்தான் உயர் நீதிமன்ற பதிவாளர் அலுவலகம், தங்கள் அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டது என தள்ளுபடி செய்தது. 

இதையடுத்து மீண்டும் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. இம்மனுவை கடந்த எட்டாம் தேதி ஏற்றுக்கொண்ட லாகூர் உயர் நீதிமன்றம் நீதிபதி காலித் மஹ்மூத் கான் இது தொடர்பாக உரிய அமர்வு விசாரிக்கும் என்று தெரிவித்தார். 

இம்மனுவின் மீது இன்று விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில் இவ்வழக்கை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதியின் முன்னர் வேறுசில அவசர வழக்குகள் நிலுவையில் இருப்பதால் ஜாவித் இக்பால் ஜாப்ரி தொடர்ந்த வழக்கின் மறுவிசாரணையை தேதி குறிப்பிடாமல் லாகூர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது