அமெரிக்க அதிபர் தேர்தல்: 3-வது வெற்றியை பதிவு செய்தார் தொழிலதிபர் டிரம்ப்!

 

drmp
ஒபாமாவின் பதவிக்காலம் முடிய உள்ளதால் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், வரும் நவம்பர் மாதம் 8–ந் தேதி நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி தேர்தலில் முதல்கட்டமாக குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பல்வேறு மாகாணங்களில் நடந்து வருகிறது. இதனால் அங்கு இப்போதே தேர்தல் களை கட்ட தொடங்கி விட்டது.

இதில், குடியரசு கட்சி சார்பில் அமெரிக்காவின் மிகப்பெரும் கோடீசுவரர்களில் ஒருவரும், தொலைக்காட்சி பிரபலமுமான டிரம்ப்பும் களத்தில் உள்ளார்.

முதல் தேர்தலில் இரண்டாம் இடத்தை பிடித்தாலும், அமெரிக்காவின் வடகிழக்கு மாகாணமான நியூ ஹாம்சயரில் நடைபெற்ற குடியரசு கட்சி வேட்பாளர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப் (வயது 69), தெற்கு கரோலினா மாகாணத்தில் நடந்த தேர்தலிலும் வெற்றி பெற்றார். 

இந்நிலையில் நெவேடா மாகாணத்தில் நடைபெற்ற தேர்தலிலும் வெற்றி பெற்றுள்ளார். இதில் டிரம்பிற்கு 42 சதவீதம் வாக்குகளும், அதற்கு அடுத்தபடியாக குரூஸ் என்பவருக்கு 24.5 சதவீதம் வாக்குகளும் கிடைத்தன. இந்த வெற்றியின் மூலம் டிரம்ப் தொடர்ச்சியாக தனது மூன்றாவது வெற்றியை பதிவு செய்துள்ளார். 

நியூஹாம்சயர், கரோலினா மாகாணங்களை தொடர்ந்து தெற்கு கரோலினா மாகாணத்திலும் வெற்றி பெற்றிருப்பது, டிரம்பிற்கு ஊக்கம் அளிப்பதாக அமைந்துள்ளது. இதுவரை டிரம்ப் போட்டியிட்ட 4 வேட்பாளர் தேர்தல்களில் 3 வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.