கதிர்காமத்தில் மஹிந்த ராஜாபக்சே !

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர், தொடர்ந்தும் ஆலயங்கள், விகாரைகளுக்கு சென்று மன ஆறுதலுக்காக வழிபாடுகளில் ஈடுபட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினரும் அரசாங்கத்திற்கு எதிராக ஆலயங்களுக்கு சென்று தேங்காய் உடைப்பது உள்ளிட்ட மத நம்பிக்கை ரீதியான எதிர்ப்புகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

கடந்த அரசாங்கத்தின் ஆட்சியில் பல்வேறு ஊழல், மோசடிகளில் சம்பந்தப்பட்ட ராஜபக்ச குடும்பத்தினர் மற்றும் அவர்களுடன் நெருக்கமாக இருந்து ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

இந்த விசாரணைகளில் பிரதிபலனாக மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித்த ராஜபக்ச பணச்சலவை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

யோஷித்தவின் கைது காரணமாக மகிந்த ராஜபக்ச மன உளைச்சலுக்கு உள்ளாகி இருப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறான சூழ்நிலையில் மகிந்த ராஜபக்ச தொடர்ந்தும் வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றார். 

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேற்று இரவு கதிர்காமம் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். 

கதிர்காமம் கிரிவெஹெர விகாரையில் வழிபாடுகளில் ஈடுபட்ட அவர், கதிர்காம கந்தன் ஆலயத்திலும் வழிபாடுகளில் ஈடுபட்டார்.