வடக்கு, கிழக்கு இணைந்த தாயகம் தொடர்பில் NFGG யின் நிலைப்பாடு என்ன?

 ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

 

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அதன் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களுடன் ஒரு விசேட சந்திப்பினை அண்மையில் மேற்கொண்டிருந்தது.

 

இந்தச் சந்திப்பு தொடர்பில் (NFGG) இவ்வாறு தெரிவித்திருந்தது, “அரசியலமைப்பு மாற்றம் மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பில் விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. குறிப்பாக, வட கிழக்கு மாகாணங்களுக்கான அதிகாரப் பகிர்வு வடிவம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் தமிழ் முஸ்லிம் சமூகங்களின் நியாயமான அபிலாஷைகளையும் நலன்களையும் உத்தரவாதப்படுத்தும் பொருட்டு ஆலோசிக்கப்படத்தக்க பல்வேறு அதிகாரப் பரவலாக்கல் வடிவங்கள் தொடர்பிலும் அதன் சாத்தியப்பாடு தொடர்பிலும் பேசப்பட்டது.

nfgg tna

தமிழ், முஸ்லிம் சமூகங்களின் நியாயமான எதிர்பார்ப்புகளுக் ஏற்ப அரசியல் தீர்வு யோசனைகளை முன்மொழிகின்ற அதே நேரம் அதனை தென்னிலங்கை மக்களின் அங்கீகாரத்துடன் சாத்தியப்படுத்தத்தக்க அணுகுமுறைகளை தமிழ், முஸ்லிம் தலைமைகள் கடைப்பிடிக்க வேண்டும் என்பதனையும் NFGG இச்சந்திப்பின் போது எடுத்துக் கூறியது.

 

அத்தோடு, தமிழ், முஸ்லிம் தலைமைகள் இணைந்து அதிகாரப் பகிர்வு யோசனைகள ஒரு பொது உடன்பாட்டுடன் முன்வைக்க வேண்டிய அவசியமும், இச்சந்திப்பின் போது இரு தரப்பினராலும் பரஸ்பரம் வலியுறுத்தப்பட்டது.” என தெரிவித்திருந்தது.

 

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் ஐயா அவர்கள், புதிய யாப்புச் சீர்திருத்தம் தொடர்பில் அண்மையில் சில கருத்துகளை வெளியிட்டிருந்தார். அதில் வடக்கு – கிழக்கு இணைந்த தமிழ் – முஸ்லிம் தாயகப் பிரதேசம், தேசிய இனம் என்ற வகையில் உரித்தான சுயநிர்ணய உரிமை, சமஷ்டி கட்டமைப்பின் கீழ் வடக்கு – கிழக்குப் பிரதேசங்களில் வாழும் எந்தவொரு மக்கள் மீதும் முரண்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தாத அதிகாரப் பகிர்வு என்பவற்றை உள்ளடக்கியதோர் அரசியல் தீர்வை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரி நிற்கின்றது எனக் கூறியிருந்தார்.

 

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) யின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அவர்களிடம் நான் கேட்பது என்னவென்றால்,

1 வடக்கும், கிழக்கும் இணைந்த தமிழ் முஸ்லிம் தாயகப் பிரதேசம் என்ற கோட்பாட்டை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?

2. விசேடமாக, வடக்குடன் கிழக்கு இணைவதனை நீங்கள் விரும்புகிறீர்களா?

3. நான் குறிப்பிட்ட இந்த விடயங்கள் தொடர்பில் சம்பந்தன் ஐயாவைச் சந்தித்த நீங்கள் உங்கள் உங்களது நிலைப்பாட்டை விளக்கினார்களா?

மேலும் உங்களது அமைப்பு வடக்கும் கிழக்கும் இணைவதனை விரும்புகிறதா அல்லது விரும்பவில்லையா என்பதனைப் பகிரங்கமாக உங்களால் மக்கள் முன் தெரிவிக்க முடியுமா?

அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தும் வடக்கு – கிழக்கு இணைந்த தமிழ் – முஸ்லிம் தாயகப் பிரதேசம் என்ற கோட்பாட்டையோ அல்லது வடக்கு-கிழக்கு இணைப்பையோ உங்கள் கட்சி ஏற்றுக் கொள்ளாவிடின் வடமாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் போனஸ் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள உங்கள் கட்சியைச் சேர்ந்த ஐயூப் அஸ்மின் அவர்கள் தனது உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்வாரா?