லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பயிற்சி முகாம் மீது அமெரிக்கப் போர் விமானங்கள் குண்டுமழை : 43 பேர் பலி !

us-airstrike-isis-leader-libya

 

 லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பயிற்சி முகாமை குறிவைத்து அமெரிக்க போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. இதில் 43 பேர் பலியாகினர். துனிசியா தீவிரவாத தலைவனும் இந்த தாக்குதலில் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.

வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவில் 1969-ம் ஆண்டு தொடங்கி 2011-ம் ஆண்டு வரை, 42 ஆண்டு காலம் முவம்மர் கடாபியின் ஆட்சி நடந்து வந்தது. பின்னர் ஏற்பட்ட மக்கள் புரட்சியில் கடாபி வீழ்ந்ததை தொடர்ந்து, அங்கு ஏற்பட்ட அரசியல் குழப்பத்தை பயன்படுத்தி ஐ.எஸ். தீவிரவாதிகள் கால் பதித்து வேரூன்ற தொடங்கினர்.

அவர்கள் ஈராக், சிரியாவை போன்று அங்கும் தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார். அப்போது அவர், ‘‘ஐ.எஸ். தீவிரவாதிகளின் இடங்கள் குறித்து உறுதியான தகவல்கள் தெரியவருகிறபோது, அங்கு தெளிவான நடவடிக்கையை வாஷிங்டன் எடுக்கும். அவர்களை இலக்காகக் கொண்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என கூறினார்.

இந்த நிலையில் லிபியாவில் சப்ரதா என்ற நகரத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பயிற்சி முகாம் செயல்பட்டு வருவதாக அமெரிக்காவுக்கு உறுதியான தகவல்கள் கிடைத்தன. அதைத் தொடர்ந்து அங்கு தாக்குதல் நடத்துமாறு அமெரிக்க ராணுவ தலைமையகம் உத்தரவிட்டது.

உடனே அமெரிக்க போர் விமானங்கள், லிபியாவில் சப்ரதா நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பயிற்சி முகாமை இலக்காக கொண்டு நேற்று முன்தினம் குண்டு வீச்சு நடத்தின. இந்த குண்டு மழையில் அந்தப் பகுதியே புகை மண்டலமாக மாறிப்போனது. இந்த தாக்குதல்களில் 43 பேர் கொல்லப்பட்டனர். பயிற்சி முகாம் தரைமட்டம் ஆக்கப்பட்டது. துனிசியா நாட்டின் தீவிரவாத இயக்கத் தலைவனான நூரிதீன் சவுச்சேன் என்பவனும் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது.