முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு : காலத்தின் கட்டாயம் !

rauff hakeem athaullah risath hasan ali

 

முஸ்லிம் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகளின் ‘ஒற்றுமை’ அல்லது ‘ஒன்றுதிரண்ட’ பலம் பற்றி இப்போதெல்லாம் அடிக்கடி பேசப்படுகின்றது. மக்களை எல்லா அடிப்படைகளிலும் பிரித்துப் பிரித்து அரசியல் செய்வதால் அரசியல்வாதிகளும் தலைவர்களும் வளர்கின்றார்களே அன்றி, மக்களுக்கு ஆன பயன் ஒன்றும் கிடையாது என்ற உள்மன உணர்வு ஏற்படத் தொடங்கிய போதே முஸ்லிம் கட்சிகளின் ஒற்றுமை பற்றிய பிரக்ஞை உருவாகி விட்டது. முஸ்லிம்களுக்கு ஒரு தனி அரசியல் கட்சி தேவை என்ற வேட்கை உருவாகி முப்பது வருடங்களுக்குள்ளேயே ஏகப்பட்ட முஸ்லிம் கட்சிகள் உருவாகி, அவற்றுக்கிடையே இணக்கப்பாட்டையும் கொண்டுவர வேண்டிய காலத்தின் கடப்பாடு ஏற்பட்டிருக்கின்றது.

 

முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒன்றுபடுதல் என்ற கருத்திட்டம் மூன்று விதமாக நோக்கப்படுகின்றது. ஒன்று, தேர்தல்கால நலன்களை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம் கட்சிகள் சில விட்டுக் கொடுப்புக்களுடன் கைகோர்த்துக் கொள்வது. இரண்டாவது, வேறு வேறு கட்சிகளில் இருந்து அரசியல் செய்தாலும் மக்களுக்கு ஒரு பிரச்சினை ஏற்படுகின்ற போது எல்லோரும் பேதங்கள் மறந்து அதற்காக ஒருமித்து குரல் கொடுப்பது. மூன்றாவது, முஸ்லிம் கட்சிகள் எல்லாம் அரசியல் மற்றும் சமூக நலனை முன்னிறுத்தி ஒரு குடையின் கீழ் அணிதிரள்வது ஆகும்.

 

முஸ்லிம் அரசியல்வாதிகளை, திருமண வீடுகளில் அன்றி வேறு எந்த ஒரு விடயத்திற்காகவும் சந்திக்க வைக்க முடியாத ஒரு துரதிர்ஷ்டமான நிலைமை காணப்படும் இன்றைய காலகட்டத்தில், மேற்சொன்ன ஒன்றுசேர்த்தல் வழிமுறைகளில் முதலாவது அடிப்படை மட்டுமே சாத்தியமாகும். ஆயினும் மூன்றாவது வகையான ஒற்றுமைப்படுதல் தொடர்பில் விசாலமான, ஆழமான கலந்துரையாடல்களை நடாத்த வேண்டியிருக்கின்றது.
ஒற்றுமையின் பலாபலன்

 

‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ என்று ஒரு பழமொழி இருக்கின்றது. ‘ஒற்றுமை எனும் கையிற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்’ என்று இஸ்லாமிய மார்க்கம் சொல்கின்றது. ஆனால் எறும்புகள், காகங்கிடமிருந்தேனும் அதனைக் கற்றுக் கொள்ள முஸ்லிம்கள் தவறியிருக்கின்றார்கள். உண்மையில் உலகில் வாழும் பல இனக் குழுமங்கள் மற்றும் நாடுகள் தமக்கிடையே ஒன்றுபட்டதன் மூலம் அசுர காரியங்களை சாதித்துக் காட்டியிருக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகள் சபை உள்ளடங்கலாக சர்வதேச ரீதியாக மற்றும் கண்டங்களின் அடிப்படையில் இயங்கும் எல்லா அமையங்களினதும் பலம் அவற்றின் ஒன்றுதிரண்ட சக்தியாகும். ஒடுக்கப்பட்ட, ‘விளிம்புநிலை’ சமூகங்கள் கூட தங்களது உரிமைகளுக்காக ஒற்றுமைப்பட்டு போராடிக் கொண்டிருக்க, இவ்வளவு நடந்த பிற்பாடும், இலங்கையில் வாழும் முஸ்லிம்களும் அவர்களது அரசியல்வாதிகளும் ஒற்றுமை பற்றி சிந்திக்காமலேயே இருப்பார்களாயில் அவர்களைப் போல சூடு, சுரணைகெட்ட சமூகம் உலகில் வேறெந்த மூலையிலும் இருக்க முடியாது.

 

ஒரு சமூகத்தின் திரட்சியான பலம் எவ்வாறான பலாபலன்களைக் கொண்டுவரும் என்பதற்கு, வரலாற்றில் ஆகவும் பிந்திய அத்தாட்சி நம்முன்னே இருக்கின்ற தமிழ் சமூகமாகும். டென்மார்க்க் தலைநகர் கொபன்ஹேகனின் ஒதுக்குப்புறமாக வாழ்கின்ற காட்டு வாசிகளையோ அல்லது இந்தியாவில் உள்ள தலித் மக்களையோ இதற்கு உதாரணமாக கொள்ளத் தேவையில்லை. இலங்கைத் தமிழர்களின் பிரதேசம் கடந்த, நாடுகடந்த ஒற்றுமையே போதும். அது இன்று உலகின் புருவங்களை உயர்த்தச் செய்திருக்கின்றது. தமிழர்களைப் பொறுத்தமட்டில் அவர்களிடையே மாற்றுக் கொள்கைகள் இருக்கின்றன, வேறு பல வேறுபாடுகளும் இன்னுமிருக்கின்றன. ஆனால் சமூக நலன் என்று வருகின்ற போது, அரசியல் என்ற ஒற்றைப் புள்ளியில் அவர்கள் ஒன்றுகூடுகின்றார்கள். எல்லா வேற்றுமைகளையும் ஒரு புறத்தில் வைத்துவிட்டு ஒருமித்து குரல் கொடுக்கின்றார்கள். கொழும்பில் ஏதாவது அநியாயம் நடந்தால், யாழ் குடாநாட்டில் அதற்கெதிராக மக்கள் திரள்கின்றார்கள். யாழ்ப்பாணத்தில் ஏதாவது பிரச்சினை என்றால் லண்டனில் அது எதிரொலிக்கின்றது.
ஆனால், கிழக்கில் வாழும் முஸ்லிம்களுக்கு ஒரு பிரச்சினை என்று கொழும்பில் ஒரு ஆர்ப்பாட்டத்தை நடாத்தினால் ஆட்களை சம்பளத்திற்குத்தான் பிடித்து வர வேண்டியிருக்கும். அரசியல்வாதிகள் கூட போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு வாகனத்தில் ஏறிவிடுவார்கள். அது பரவாயில்லை. காத்தான்குடியில் கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டால் கல்முனையில் கடைகள் திறந்திருக்கும். கல்முனையில் ஹர்த்தால் என்றால் அக்கரைப்பற்றில் இயல்புநிலை காணப்படும். இதுவே யதார்த்தம். மக்கள் மட்டுமல்ல அரசியல்வாதிகளும் இப்படியேதான். இதற்கு காரணம், பிளவுகளும் உப்புச்சப்பில்லா முரண்பாடுகளும் ஆகும்.
கற்க வேண்டியது

 

தமிழர் அரசியலைப் பொறுத்தமட்டில், அவர்களிடமிருந்து முஸ்லிம் அரசியல்வாதிகள் நிறையவே கற்றுக் கொள்ள வேண்டியிருக்கின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு காணப்படுகின்றது. இந்தக் கூட்டமைப்பு ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியல்ல. தமிழரசுக் கட்சி மற்றும் ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப்., பி.எல்.ஓ.ரீ.இ. போன்றவற்றின் கூட்டாகும். அதேபோன்று த.தே.கூட்டமைப்புக்கு என்று தனியாக சின்னமும் கிடையாது. அதில் அங்கம் வகிக்கின்ற பிரதான அரசியல் கட்சியான தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தையே பொதுப்படையான சின்னமாக கூட்டமைப்பு பயன்படுத்துகின்றது.

 

முன்னொரு காலத்தில், ஆயுத இயக்கங்களாக அறியப்பட்டு பின்னர் அரசியலுக்கு நுழைந்த கட்சிகளே தமிழரசுக் கட்சியுடன் ஒன்றிணைந்து, த.தே.கூட்டமைப்பு என்ற பெயரில் தேசிய அரசியலில் செயற்படுகின்றன. இவ்வாறு, ஒன்றுக்கொன்று முரண்பட்டுக் கொண்டிருந்த இயக்கங்களே இன்று மக்களுக்காக ஓரணியில் நின்று அரசியல் செய்ய முடியுமாயின், முஸ்லிம் கட்சிகளாலும் முஸ்லிம் அரசியல்வாதிகளாலும் அது ஏன் முடியாமல் போகின்றது? என்ற கேள்வி 15 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. ஆனால் அதற்கான விடைகளும் மக்களுக்கு தெரியாமலில்லை.

 

முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒன்றுக்கொன்று முரண்பட்ட பாசறையில் இருந்து வந்தவர்கள் அல்லர். கிட்டத்தட்ட வடக்கு, கிழக்கில் இன்று செயற்பட்டுக் கொண்டிருக்கும் அனைத்து முஸ்லிம் அரசியல்வாதிகளும் அதேபோல் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் போன்ற வடக்கு கிழக்கிற்கு வெளியேயுள்ள சிலரும், மர்ஹும் அஷ்ரஃபிடம் அரசியல் அரிச்சுவடி கற்றவர்களே. அவரே இவர்களை எல்லாம் அரசியலுக்கு கொண்டுவந்தார். மறைந்தும் அஷ்ரஃபே இன்று வரைக்கும் இவர்களுக்கு சோறு போட்டுக் கொண்டிருக்கின்றார் என்றும் சொல்லலாம்.
பரஸ்பரம் முட்டிமோதிக் கொண்டு இருந்த தமிழ் இயக்கங்களே தமது மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரில் ஒரணியில் திரண்டிருக்கின்றது என்றால், ஒரே பாசறையில் பயின்று, ஒன்றாக படுத்துறங்கி தனிப்பட்ட அரசியல் இலாபங்களுக்காக இன்று பிரிந்து நிற்கின்ற முஸ்லிம் அரசியல்வாதிகள் எல்லோரும் முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பாக செயற்படுவதற்கு ஏன் முடியாது?
இத்தனைக்கும் முஸ்லிம் காங்கிரஸூம் சரி, மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் மற்றும் ஏனைய சிறிய கட்சிகளும் அரசியல்வாதிகளும் சரி, கொள்கை ரீதியாக முரண்பட்ட அரசியல் போக்குகளைக் கொண்டவைகளல்ல. சோஷலிசம், கொமியுனிசம் அல்லது வலதுசாரி என்ற மாறுபட்ட சித்தாந்தங்களின் அடிப்படையில் முஸ்லிம் அரசியல் கட்சிகளோ அரசியல்வாதிகளோ பிரிந்து பிரிந்து அரசியல் செய்யவில்லை. அவர்கள் எல்லோரும், பொதுவில் அஷ்ரஃபின் கொள்கைகளையே பின்பற்றுவதாகவும் அவரது பணிகளையே தொடர்வதாகவுமே கூறிக் கொள்கின்றனர். எனவே இங்கே கொள்கை, அடிப்படையில் ஒன்றே! பயணிக்கும் பாதைகளே வேறுபட்டனவாக இருக்கின்றன. ஆகவே முஸ்லிம் கட்சிகளை ஒன்றிணைப்பது முடியாத காரியமலல்ல.

 

தலைவர்களின் வளர்ச்சி

அஷ்ரஃபின் மரணத்திற்குப் பிறகு, முஸ்லிம் காங்கிரஸும் சரி ஏனைய முஸ்லிம் கட்சிகளும் சரி தலைவர்களை முதன்மைப்படுத்திய, தலைவர்களை வளர்க்கின்ற கட்சிகளாகவே பரிணாமம் எடுத்திருக்கின்றன. பிரித்தாளும் அரசியலால் மக்களுக்கு கிடைத்த நன்மைகளை விட தலைவர்கள் உழைத்துக் கொண்டதும் அவர்களுக்கு கிடைத்த நன்மைகளுமே அதிகம் என்பதை சொல்வதற்கு எந்த தயக்கமும் இல்லை. இதில் மு.கா. தலைவர் ஹக்கீமோ, மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட்டோ அல்லது தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லாவோ அல்லது இங்கு பெயர் குறிப்பிடப்படாத வேறு யாருமோ விதிவிலக்கும் அல்லர். தலைமைத்துவ மோகத்திற்கு தூபமிட்டு, தலைவர்களுக்கு சேவகம் செய்கின்ற வேலையையே போராளிகளும் வாக்காளர்களும் செய்து கொண்டிருக்கின்றனர். இதில் மறைப்பதற்கும் நாசுக்காக எழுதுவதற்கும் ஒன்றுமில்லை.

 

உதாரணமாக மிகப் பெரிய முஸ்லிம் கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொத்துவில் கரங்காவட்டை 502 ஏக்கர் காணிப் பிரச்சினையை முதன்மை காரணியாகக் கொண்டு 2007 இல் மஹிந்த அரசாங்கத்திலிருந்து வெளியேறியதாக அறிவித்தது. முன்னதாக வேறு ஒரு டீலிங் நடைபெற்று, அரசிலிருந்து வெளியேற தீர்மானித்து விட்டது. ஆனால் மக்களுக்கு சொல்வதற்கு ஒரு காரணம் தேவைப்பட்டது. அதற்காக கரங்காவட்டை விவகாரத்தை தூக்கிப்பிடித்து அரசாங்கத்தில் இருந்து வெளியேறியது மு.கா. என்பது பின்னர் தெரியவந்தது. அது இருக்கட்டும். இப்படி வெளியேறிய மு.கா. மீண்டும் 2010 இல் மஹிந்தவுடன் இணைந்து கொண்டது. 18 ஆவது திருத்தத்திற்கு ஆதரவளித்தது. அப்போதும், இப்போதும் கரங்காவட்டை பிரச்சினை தீர்க்கப்படவில்லை. ஆனால் அரசாங்கத்துடனேயே மு.கா. இருக்கின்றது. இப்படித்தான் கரையோர மாவட்ட கோரிக்கை உள்ளடங்கலாக ஆயிரம் பிரச்சினைகள் கையாளப்படுகின்றன.

 

அதேவேளை, மக்கள் காங்கிரஸ் கட்சியும் இதே குட்டையில் ஊறிய மட்டைதான். இப்போது கட்சியை வளர்க்க வேண்டிய தேவை இருப்பதால் ஒப்பீட்டளவில் சற்று துணிவான அரசியல் தலைமையாக றிசாட் தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றார். இருப்பினும், வடக்கு மக்களின் மீள்குடியேற்றத்தை கூட அவரால் முழுமையாக மேற்கொள்ள முடியாமல் போயிருக்கின்றது. அதை வைத்துக்கொண்டு றிசாட் செய்கின்ற அரசியலுக்கும், கிழக்கை வைத்துக் கொண்டு ஹக்கீம் செய்கின்ற அரசியலுக்கு பெருத்த வேறுபாடுகள் இருப்பதாக தெரியவில்லை.

 

தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் அதாவுல்லா செய்வதும் இதேவகையான அரசியலே. அமைச்சராக இருந்து தோற்றுப் போகும் வரைக்கும் ஒரு சில ஊர்களின் அபிவிருத்திக்கு அவர் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்திருக்கின்றார். இருப்பினும் கட்டடங்களாலும், தொழில்வாய்ப்புக்களாலும் அன்றி, இந்த சமூகத்தின் உரிமைக்காக குரல் கொடுத்ததாக அதாவுல்லா எப்போதும் பெருமை கொள்ள முடியாது. வடகிழக்கை பிரிக்க கோரியதுடன் விடுதலைப் புலிகளை பகிரங்கமாக எதிர்த்த ஒரு அரசியல்வாதியான அதாவுல்லா, இனவாதத்திற்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மஹிந்தவை தாஜா பண்ணும் அறிக்கைகள் அன்றி, மக்கள் மனதை திருப்திப்படுத்தும் ஒரு அறிக்கையைக் கூட வெளியிடவும் இல்லை.

 

மேற்சொன்ன மூன்று கட்சிகளின் தலைவர்கள் உள்ளடங்கலாக எல்லா முஸ்லிம் தேசிய, பிராந்திய அரசியல்வாதிகளதும் யதார்த்தமான செயற்பாடு இதுதான். இந்த இலட்சணத்தில், முஸ்லிம் சமூகத்திற்காக அரசாங்கத்தில் இருந்து உண்மைக்குண்மையாக வெளியேறுவதற்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பு போல , மக்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்படும் வரைக்கும். அமைச்சுப் பதவிகளை துறந்து நெடுங்காலத்திற்கு எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்திருப்பதற்கு முன்வருவார்கள் என்று நினைத்தால் அது கலப்படமற்ற பகற்கனவன்றி வேறொன்றுமில்லை.

 

ஆளும் கட்சியில் இருந்தாலேயே மக்களுக்கு சேவை செய்ய முடியும் என்ற நிலைப்பாடு பெரும்பாலான முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு இருக்கின்றது. சரி, அவர்களது நிலைப்பாடு சரி என்று வைத்துக் கொள்வோம். இன்றைய ஆட்சியில் எல்லா முஸ்லிம் எம்.பி.க்களும் ஆளும் கட்சியிலேயே இருக்கின்றனர். ஆனால் இந்த ஒருவருட நல்லாட்சியிலும் குறிப்பிட்டுச் சொல்லும்படி முஸ்லிம்களுக்கு இவர்கள் எதையாவது பெற்றுக் கொடுத்ததாக நினைவில் இல்லை.

 

இதற்கு காரணம் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் கட்சிகளுக்கும் இடையில் இருக்கின்ற முரண்பாடாகும். ஒன்று தண்ணீருக்கு இழுத்தால், மற்றையது தவிட்டுக்கு இழுக்கின்றது. எல்லோரும் ஒருமித்த குரலில் கோரிக்கையை முன்வைப்பதற்கும் தனித்தனியாக வேறுவேறு கோணங்களில் பிரச்சினைகளை அணுகுவதற்கும் வேறுபாடு இருக்கின்றது. முஸ்லிம் அரசியல் கட்சிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக கோரிக்கைகளை முன்வைப்பதை விட முஸ்லிம் தேசிய கூட்டமைப்பாக கோரிக்கைளை முன்னிலைப்படுத்தினால் அரசாங்கம் அதை நிறைவேற்றியே ஆகவேண்டிய நிலை ஏற்படும்.

 

யாருடைய தவறு?

முஸ்லிம் கட்சிகளை ஒருநிலைப்படுத்துவது சாத்தியமற்றுப் போய்க் கொண்டிருப்பதற்கு அரசியல் தலைமைகள் மட்டுமே காரணமல்ல என்பதை அழுத்தமாக சொல்ல விரும்புகின்றேன். யார் என்னவாவது செய்யட்டும் என்று இருக்கின்ற பிராந்திய அரசியல்வாதிகள், முஸ்லிம் புத்திஜீவிகள், வைத்தியர்கள், பொறியியலாளர்கள், சமூக ஆர்வலர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் சாதாரண பொதுமக்களுக்கும், தலைமைகள் செய்து கொண்டிருக்கின்ற இந்த சுயநல, பிரித்தாளும் அரசியலில் பங்கிருக்கின்றது. அவர்களைத் தட்டிக் கேட்டு தடுத்து நிறுத்தியிருந்தால் நிலைமை இவ்வளவு மோசமாக ஆகியிருக்காது. ஆதலால், இந்நிலைமையை சீர்செய்ய வேண்டிய கடப்பாடு மேற்குறிப்பிட்ட தரப்பினருக்கும் உள்ளது.

 

எனவே உடனடியாக முஸ்லிம் கட்சிகளை ஒன்றிணைத்து முஸ்லிம் தேசிய கூட்டமைப்பை உருவாக்க வேண்டும். இது அனைவரதும் தார்மீகக் கடமையாகும். முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு என்று வரும்போது, சில முன்யோசனைகள் முன்வைக்கப்படுகின்றன. குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களை தளமாகக் கொண்டியங்கும் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகளை முதன்மையாகக் கொண்ட ஒரு கூட்டமைப்பாக இது உருவாக்கப்பட வேண்டுமென்றும் பின்னர் இது நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு விஸ்தரிக்கப்பட வேண்டுமெனவும் கூறப்படுகின்றது. வடக்கு, கிழக்கில் வாழ்கின்ற மக்களின் பிரச்சினைகளும் அதற்கு வெளியே வாழ்கின்ற முஸ்லிம்களின் பிரச்சினைகளும் வேறுபட்டது என்ற அடிப்படையில் இந்த யோசனை நியாயமானதே.
ஆனால், வடக்கு கிழக்கிற்கு வெளியேயும் அதிகமான எம்.பி.க்கள் உள்ளனர். தனித்தனியான பிரச்சினைகள் போன்றே, அரசியலமைப்பு உருவாக்கம், எல்லை மீள்நிர்ணயம் போன்ற இன்னோரன்ன பிரச்சினைகள் எல்லா பிராந்திய மக்களுக்கும் பொதுவானவையாக காணப்படுகின்றன. இதனை கருத்திற்கொண்டும், முஸ்லிம் கூட்டமைப்பு உருவாக்கத்தின் போது இன்னுமொரு பிளவு ஏற்படுவதை தடுப்பதை கருத்திற் கொண்டும், வடக்கு கிழக்கிற்கு வெளியேயுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகளை பின்னர் உள்வாங்குவது குறித்து முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் ஸ்தாபக உறுப்பினர்கள் கலந்தாலோசிக்கலாம்.

 

முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு உருவாகும் பட்சத்தில் தலைவர், சின்னம் பற்றிய இரு முக்கிய பிரச்சினைகள் உருவாகும் வாய்ப்புள்ளது. இதில் முரண்பாடுகள் ஏற்படும் என்று தெரிந்தால், சுழற்சி முறையான தலைமைத்துவத்தை நியமிக்கலாம். அதேபோல் ஏதேனும் ஒரு கட்சியின் சின்னத்தை பொதுவான சின்னமாக ஏற்றுக் கொள்வதில் சிக்கல் இருந்தால், முஸ்லிம் தேசிய கூட்டமைப்பை ஒரு கட்சியாக பதிவு செய்து சின்னமொன்றை பெறலாம். இவ்வாறான நிலை ஏற்படுமாயின் கூட்டமைப்பில் உள்ளடங்கும் முஸ்லிம் கட்சிகள் அழிந்து போக மாட்டாது. மாறாக, அவர்களது கட்சியும் சின்னமும் இருக்கும். தேர்தல்களின் போது தத்தமது கட்சி சார்பாக, கூட்டமைப்பு ஊடாக வேட்பாளர்களையும் நிறுத்த முடியும்.

 

இக் கூட்டமைப்புக்கு சமூகத்திலும் அரசியல் களரியிலும் பரவலான ஆதரவுகள் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகின்றன. மு.கா. செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசன் அலி, அக்கட்சியின் ஸ்தாபக தவிசாளர் எம்.எச்.சேகு இஸ்ஸதீன் உள்ளிட்ட பலர் இதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளனர். முன்னமே, மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் உள்ளிட்ட சில அரசியல்வாதிகள் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பிற்கு பச்சைக் கொடி காட்டியுள்ளார்.

 

மிக முக்கியமான முஸ்லிம் கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் இதற்கு இன்னும் ஆதரவை தெரிவிக்கவில்லை. ஹக்கீமின் தனிப்பட்ட அரசியல், மலைநாட்டை மையமாக வைத்துக் கொண்டு சூழல்வதாகும். இந்நிலையில் முஸ்லிம் கூட்டமைப்பு உருவானால், நிலத்தொடர்பற்ற முஸ்லிம் மாகாண அலகு போன்ற சர்ச்சைக்குரிய கோரிக்கைகளை அக் கூட்டமைப்பு முன்வைக்கும். அவ்வாறான கூட்டமைப்பில் அங்கம் வகித்துக் கொண்டு ஹக்கீமினால் அங்கு அரசியல் செய்ய முடியாது. எனவே, முஸ்லிம் தேசிய கூட்டமைப்பை அவர் பெரிதும் விரும்ப மாட்டார் என்று கட்சிக்குள் இருப்பவர்களே பேசிக் கொள்கின்றனர்.

 

ஆனால், வடக்கு கிழக்கில் உள்ள முஸ்லிம் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகள் யாவரும் கூட்டமைப்புக்குள் இணைந்து விட்டால் ஹக்கீமினால் அதற்கு வெளியில் இருக்க முடியாது. அதன் பின் முஸ்லிம்களின் அரசியல் என்பது இக் கூட்டமைப்பை மையமாகக் கொண்டதாகவே இருக்கும். எனவே பஸ் புறப்படுகின்ற நேரத்திலாவது ஹக்கீம் தலைமையிலான மு.கா., மிதிபதகையில் தொற்றிக் கொண்டேயாக வேண்டும். அந்த வகையில், மு.கா.வை மட்டுமன்றி அனைத்து முஸ்லிம் அரசியல்வாதிகளையும் இதற்குள் கொண்டுவந்து முஸ்லிம் தேசிய கூட்டமைப்பை நிறுவுவதற்கான அழைப்பை விடுக்க வேண்டும். இவ் வேலைத் திட்டம் முறையாக முன்னெடுக்கப்பட வேண்டும். மக்கள் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் முயற்சி என்பதால் புத்திஜீவிகள், படித்தோர் உள்ளிட்ட அனைத்து மக்களும் இதில் ‘அழுத்தக் குழு’வாக செயற்பட வேண்டியுள்ளது.
முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு உருவாகும் என்றால், அது ஒரு வரலாற்று சாதனையாக இருக்கும். அதில் இணைந்து கொள்ள விரும்பாத கட்சிகளையும், அரசியல்வாதிகளையும் சுயநலவாதிகள் என்றும் சமூகத் துரோகிகள் என்றும் அவ் வரலாறு எழுதி வைக்கும்.

– ஏ.எல்.நிப்றாஸ்

(வீரகேசரி 20.02.2016)