விஜயவை நினைவுகூற மஹிந்த எந்த வகையிலும் தகுதியானவர் இல்லை :சந்திரிக்கா

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு மனிதாபிமானம் என்றால் என்னவென்றே தெரியாது என்று சந்திரிக்கா குமாரதுங்க அம்மையார் கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார்.
KUMARATUNGA

பிரபல அரசியல் தலைவரும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் கணவருமான படுகொலை செய்யப்பட்ட விஜயகுமாரதுங்கவின் ஞாபகார்த்த நிகழ்வு இன்று அவரது பிறந்த இடமான சீதுவையில் அனுட்டிக்கப்பட்டது.

சந்திரிக்கா குமாரதுங்க, ஜீவன் குமாரதுங்க, பேராசிரியர் காலோ பொன்சேகா ஆகியோர் விஜயவின் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். 

இதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் விஜயகுமாரதுங்கவின் ஞாபகார்த்த வைபவம் ஒன்றை ஏற்பாடு செய்திருப்பது குறித்து செய்தியாளர்கள் சந்திரிகா அம்மையாரிடம் கேள்வி எழுப்பினர். 

இதற்குப் பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, “விஜயவை நினைவு கூற மஹிந்தவுக்கு எதுவித தகுதியும் கிடையாது. அவர் உயிருடன் இருக்கும் வரை மஹிந்த அவருக்குத் தொல்லை கொடுத்துக் கொண்டும், சண்டை போட்டுக் கொண்டும் தான் இருந்தார். அத்துடன் விஜயகுமாரதுங்க ஒரு மனிதநேயவாதி. மஹிந்தவை விட முற்றிலும் மாறுபட்டவர். அப்படிப்பட்ட ஒரு மனிதநேயவாதியை நினைவுகூற மஹிந்த எந்த வகையிலும் தகுதியானவர் இல்லை. ஏனெனில் மனித நேயம் என்றால் என்னவென்றே மஹிந்தவுக்குத் தெரியாது” என்றும் சந்திரிக்கா அம்மையார் மகிந்த ராஜபக்ஸவை கடுமையாக சாடியுள்ளார்.