எங்கள் ராணுவம் சிரியா எல்லைக்குள் நுழையவில்லை : துருக்கி அரசு !

images

 

வடக்கு சிரியாவில் குர்துஸ் படையினர் மீது துருக்கியின் ராணுவம் தாக்குதல் நடத்தியதற்கு சிரியா கண்டனம் தெரிவித்தது. துருக்கியின் நடவடிக்கையானது இறையாண்மையை மீறும் செயலாகும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் துருக்கிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சிரியா வலியுறுத்தி உள்ளது. துருக்கியிடம் இருந்து சுயாட்சி கோரும் குர்திஸ் படைக்கு அமெரிக்கா மற்றும் பிற நாடுகள் ஆதரவு தெரிவிக்கின்றன. சிரியாவில் குருதிஸ் படையும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக போராடி வருகிறது.

100-க்கும் மேற்பட்ட துருக்கி ராணுவ வீரர்கள் 12 கனரக வாகனங்களில் ஆயுதங்களுடன் தங்களது எல்லைக்குள் நுழைந்ததாகவும், நவீன ரக எந்திர துப்பாக்கிகளை சிரியா அரசாங்கத்துக்கு எதிராக போராடி வரும் தீவிரவாதிகளுக்கு வினியோகம் செய்ததாகவும் துருக்கி மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சிரியா வெளியுறவு அமைச்சகம் புகார் செய்தது. 

இதை துருக்கி அரசாங்கம் மறுத்து உள்ளது. இதுபற்றி துருக்கி ராணுவ மந்திரி இஸ்மத் இல்மாஸ் கூறுகையில், “இதில் எந்த உண்மையும் இல்லை. சிரியாவின் எல்லை பகுதிக்குள் எங்கள் ராணுவம் நுழையவில்லை” என்று குறிப்பிட்டார். தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்த சவுதி அரேபியாவின் போர் விமானங்கள் துருக்கியின் இன்கிர்லிக் விமானப்படைத் தளத்துக்கு வந்து இருப்பதாக வெளியான தகவலையும் மறுத்துவிட்டார். 

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக துருக்கி வான்தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதற்கிடையே துருக்கியில் உள்ள இன்சர்லிக் விமானப்படை தளத்துக்கு சவுதி தனது படையினை அனுப்பி வைப்பதை உறுதி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.